அத்துடன், யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதிலும் நிலைமாறுக்கால நீதி நடவடிக்கைகளிற்கு தன்னை அர்ப்பணித்துள்ள போதிலும் இலங்கை வெட்கமின்றி சவேந்திர சில்வாவை இன்னமும் யுத்தவீரர் என அழைக்கின்றது என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை படையினர் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஐ.நா. தடை செய்துள்ள அறிவிப்பு இலங்கைக்கு துயரமானதாக அமைந்துள்ளது.
ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் 2008- 2009களில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கினார்.
அவரது படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான திட்டமிடப்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டனர் என தெரிவிப்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. பொதுமக்களிற்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் காயங்களும் பேரழிவு என வர்ணிக்கக் கூடியவையாக உள்ளன.
எனினும் யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் முடிவடைந்துள்ள போதிலும் நிலைமாறுக்கால நீதி நடவடிக்கைகளிற்கு தன்னை அர்ப்பணித்துள்ள போதிலும் இலங்கை வெட்கமின்றி சவேந்திரசில்வாவை இன்னமும் யுத்தவீரர் என அழைக்கின்றது.
இதன் காரணமாக யுத்தத்தின் பின்னர் படையணிகளில் இணைந்த இளம் வீரர்கள் ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.
சவேந்திர சில்வாவின் நியமனம் இலங்கையின் சொந்தமான துயரமான நடவடிக்கை என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா, இலங்கை கடந்த கால குற்றங்களிற்கு நேர்மையான குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதையே விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் குறித்து துல்லியமாக விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளது. இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஒவ்வொரு படைப்பிரிவும் செயற்பட்ட இடம் குறித்து துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது.
மோதலின் போது உயிர் தப்பிய, நேரில் கண்ட சாட்சியங்களான நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து பெறப்பட்ட விரிவான தகவல்களை அடிப்படையாக கொண்டதாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.
யுத்தம் இடம்பெற்றவேளை இலங்கை இராணுவம் வெளியிட்ட நாளாந்த களநிலைமை குறித்த இணையப் பதிவுகளையும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம். எனினும் இலங்கை இராணுவம் தற்போது அதனை இணையத்திலிருந்து அகற்றியுள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் எந்த பகுதியிலிருந்து எழுந்தனவோ அந்த பகுதியில் நிலைகொண்டிருந்த படையணியை அடையாளம் காண்பதற்கு விரிவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பிட்ட படையணியுடன் தொடர்புபட்டவர்களை ஐக்கிய நாடுகள் படையணியில் ஈடுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.
இலங்கை இராணுவத்தை பொறுப்புக்கூறச் செய்யவேண்டும் என கருதும் பல சிங்களவர்களும் தமிழர்களும் நேரடியாக இந்த ஆராய்ச்சிக்கு உதவியுள்ளனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா அவர்களிற்கு நாங்கள் நன்றிக்கடன் உடையவர்களாகவுள்ளோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களிற்காக அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.
இதுவரை நீதியை அனுபவித்திராத பாதிக்கப்பட்ட தமிழர்களிற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கின்றது என்ற செய்தி நம்பிக்கையை அளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர் தமது காலம் முடியும் வரை பணியை தொடர்வார்கள் பின்னர் வேறு ஒரு நாட்டின் படையினர் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல்.
எனினும் ஐ.நா. அமைதிப்படை கடுமையான ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய சந்தர்ப்பம் உருவானால் இந்த தடை கைவிடப்படலாம் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. மேலதிகமான தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்ப்போம் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா, இந்த முக்கியமான மனித உரிமை விவகாரத்திலிருந்து தப்ப நினைத்தால் ஐ.நா.வின் அமைதிகாக்கும் படையணியின் கௌரவம் பாதிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.