திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் இளைஞர் யுவதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை கடற்படை முகாமுக்குள் உள்ள கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை கூட வளாகத்தில் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கான சான்று உள்ளதாக சி.ஐ.டி. இதன்போது அறிவித்துள்ளது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன் எனும் மாணவன், குறித்த சித்திரவதை கூடத்தில் இருக்கும்போது தனது தாய்க்கு தொலைபேசியில் தெரிவித்த விடயம் உண்மையென நம்புவதற்கான சான்றுகள் உள்ளதாக சி.ஐ.டி. சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வானில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமலாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை விசாரணை அறை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இதனை விஷேட விசாரணை அறிக்கை ஊடாக கோட்டை நீதவானுக்கு அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளில், கொழும்பு – சைத்திய வீதியில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சட்டவிரோத சிறைச்சாலையாக ஒரு வதை முகாமும், திருமலை கடற்படை முகாமுக்குள் கன்சைட் எனும் நிலத்தடி சட்ட விரோத சிறை எனும் வதை முகாமும் செயற்பட்டுள்ளமையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவை அப்போது கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்து அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகம் எழுவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை குறிப்பிடுகின்றது.