செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாடசாலை மாணவி மற்றும் தாய் கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

பாடசாலை மாணவி மற்றும் தாய் கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

1 minutes read

இரத்தினபுரி – கொட்டகெத்தன பகுதியில் பாடசாலை மாணவி மற்றும் அவரது தாயையும் வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலையைக் கண்ணுற்ற சாட்சிகள் இல்லையென்ற போதிலும் மரபணு பரிசோதனை உள்ளிட்ட சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த கொலைச்சம்பவத்தை பிரதிவாதியே முன்னெடுத்துள்ளமை சந்தேகமின்றி நிரூபிக்கப்படுவதாக மேல் நீதிமன்ற நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன் பிரகாரம், பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு வெவ்வேறு மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கூரையில் படிந்திருந்த இரத்தக்கரைகளூடாக, சடலங்களில் காணப்பட்ட வெட்டுக்காயங்களின் கொடூரம் புலப்படுவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

கொலை செய்வதை நோக்காகக்கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை 221 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பறிக்கையூடாக நீதிபதி மன்றுக்கு அறிவித்தார்.

தனது 25 வருட சேவைக்காலத்தில் மிக நீண்ட காலம் செலவளித்து தயாரிக்கப்பட்ட தீர்ப்பறிக்கை இது எனவும் நீதிபதி விக்கும் களு ஆராச்சி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி இரத்தினபுரி- கொட்டகெதன பகுதியில் நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு மற்றும் அவரது மனைவியான அசோக சந்தனி எனும் பட்டி என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில்,  குற்றவாளியின் மனைவிக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More