இலங்கையில் முழுமையும் திறன் வகுப்பறைகளைக் கொண்ட பாடசாலை – Smart School.
………………………………………………………….
முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம் ஓர் ஆரம்பப் பாடசாலை. இங்குள்ள ஒரு வகுப்பறை தவிர்ந்த ஏனைய வகுப்பறைகள் யாவும் திறன் வகுப்பறைகளாகக் காணப்படுகின்றன.
அரச உதவி எதுவுமின்றி அதிபரதும் சமூகத்தவரதும் உழைப்பினால் அமைக்கப்பட்ட சிமாட் வகுப்பறைகளால் இன்று இப்பாடசாலை முன்னிலையில் வைத்துப் பேசப்படுகின்றது.
கடந்த (2019) தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் நூறு மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 44 பேர் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
அதிபர் நல்லையா அமிர்தநாதன் – ஒரு விஞ்ஞானப் பயிற்சி பெற்றவர். தற்போது எம்.எட் (M.Ed.)வரை கற்றிருக்கின்றார். தகவல் தொடர்பாடல் தொழினுட்பத் துறையில் ஐந்தாண்டுகள் ஆசிரிய ஆலோசகராகவும் இருந்திருக்கின்றார். இவரது வழிகாட்டலே இத்தகைய எழுச்சியின் பின்புலம்.
இப்பாடசாலையைப் பற்றிப் பலரும் விதந்துரைக்கக் கேள்வியுற்றுள்ளேன். முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் முன்னாள் முதலமைச்சர் எனப் பலர் நேரில் விஜயம் செய்து பாடசாலைச் செயற்பாட்டைக் கண்டு பாராட்டியமையையும் அறிவேன். இதனால் ஆசிரிய கலாசாலை பயிலுநர்களுக்கான கல்விசார் களப்பயணத்திற்கான இடமாக இம்முறை இப்பாடசாலையை எமது கலாசாலையின் முகாமைக்குழு தெரிவு செய்தது.
இரண்டு வேறு அணிகளாக எமது கலாசாலையினர் பாடசாலைக்கு இரு வேறு நாள்களில் விஜயம் செய்தனர். வாயிலில் அதிபரும் பிரதி அதிபரும் காத்திருந்து வரவேற்றனர்.
சென்ற களைதீரச் சிற்றுண்டி தேநீர் என உபசாரம். அதற்குச் செலவாகிய இருபது நிமிட நேரத்தையும் வீணடிக்காமல் வரவாக்கினார் அதிபர். ஒன்று கூடல் அறையில் இருந்த திறன் பலகையில் (சிமாட் போட்) பாடசாலை பற்றிய அறிமுகத்தை தேநீர் நேரத்திலேயே செய்து வைத்தார் அதிபர்.
இலங்கையில் முதன்முதலாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் திறன் வகுப்பறை நிறுவப்பட்ட காலத்தில் உடையார்கட்டில்; திறன் வகுப்பறை தனது முயற்சியால் நிர்மாணிக்கப்பட்டமையையும் குறிப்பிட்டார்.
எங்கள் ஆசிரிய மாணவர்களை பன்னிரு குழுக்களாக்கி அழைத்துச் சென்றோம். அதனையும் இலாவகமாகக் கையாண்டார். பன்னிரண்டு ஸிமாட் வகுப்பறைகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். கூடவே விரிவுரையாளர்களும் பிரிந்து சென்றனர்.
வகுப்பறைச் சுவரில் ஆசிரியர் பெயர் மாற்றுப் பெற்றார் என்ற அடைமொழியுடன் காட்சி தந்தது. மாணவர் எவரும் எம்மை அதிசயமாகப் பார்க்கவில்லை. கற்றலில் இயல்பாகவே ஈடுபட்டனர். கூச்சமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஆரம்பக் கல்விக்குரிய ஒரு மணி நேரப் பாட வேளையை திறன் பலகையின் உதவியுடன் ஆசிரியரும் மாணவர்களும் இயல்புறக் கையாண்டு கல்வி கற்றனர்.
பாடசாலை நிகழ்வுகளின்போது தலைமைத்துவத்தை மாணவர்களுக்கு வழங்கி அழகு பார்க்கிறார்கள். முதலமைச்சர் வந்த நிகழ்ச்சிக்கும் மாணவர் தான் தலைமை. இராஜாங்க அமைச்சர் வந்தபோதும் அவ்வாறே.
ஒரு நிமிட நேரத்தையும் வீணாக்கக் கூடாது என்ற கூட்டுணர்வுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் செயற்படுவதைக் கண்டோம். பாடசாலைகளில் பின்பற்றக் கூடிய பல புதிய உத்திகளைக் கையாள்கிறார்கள்.
கடந்த காலத்தின் நினைவுகளாய் கிடுகு வேய்ந்த மண்டபம் வாசலில் வரவேற்கின்றது. பெற்றோர் சந்திப்புக்கும் மாணவர் கலைநிகழ்வு அரங்கேற்றத்திற்குமான களமாய் இன்றும் சேவை புரிகின்றது.
போர் சப்பித்துப்பிய மண்ணில் பலரும் பின்பற்றக் கூடிய வரலாற்றைச் சத்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பக் கல்வித்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய பாடசாலை புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயம்.
செய்தி மற்றும் புகைப்படங்கள் – லலீசன், அதிபர், கேப்பாய் ஆசிரியர் கலாசாலை.