நாளைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.
அதன்படி நாளை காலை 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சு நியமன நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இன்றைய தினமே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாளைய தினம் 15 உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு புதிய ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டமும் ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவில் நடப்பு அரச தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்வியை அடுத்து அந்த அரசாங்கத்தின் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று நியமிக்கப்பட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இடைக்கால ஆளும்கட்சி உறுப்பினர்கள் தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயகார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அதுரலியே ரதன தேரர், ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேமஜெயந்த, டலஸ் அழகபெரும உள்ளிட்ட ஏனைய சகல உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக ஜனாதிபதியின் பாரியார், புதல்வர், பிரதமரின் பாரியார், புதல்வர்கள் அவர்களின் பாரியார்கள் மற்றும் சிலரும் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் பிரதமராக நியனம் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் மத அனுஷ்டான நிகழ்வுகளுடன் அலரிமாளிகையில் தனது கடமை பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டார்.