அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி உள்ளார்.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறி இருப்பதாவது:-
சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான்.
நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.
ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.
நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள்.
இவ்வாறு வீடியோவில் பேசிய அவர் திடீரென ராவணனை சாடினார். இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறியதாவது:-
இராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.
உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.