வடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் நிரந்தர தீர்வென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘தமிழ் தேசிய கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர்.
இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “பொறுப்புக்கூறல் மற்றும் இழைக்கப்பட்ட போர்க்குற்ற விவகாரங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நடவடிக்கையை எமது கட்சி முன்னெடுக்கும்.
மேலும் அரசியல் தீர்வு விவகாரத்திலும் சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக்கொள்வோம். அத்துடன் வடக்கு- கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை தழுவிய ரீதியில் தமிழ் தேசிய கட்சி செயற்படும்.
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு சாதனைப் பயணத்தை இந்த கட்சி மேற்கொள்ளும்.
வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியை நிறுவவும், வடக்கு- கிழக்கிற்கு வெளியில் சக அதிகாரங்களுடன் வாழவும் நடவடிக்கை எடுப்போம். இதற்காக ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.