பாம்புக்குப் பாலாபிஷேகம் செய்த வீடியோவை ஒரு வருடம் கழித்து யூடியூபில் பதிவேற்றம் செய்த காஞ்சிபுரம் பெண் சாமியார் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள வெள்ளரி அம்மன் கோயிலில் அருள் வாக்கு சொல்லிவரும் பெண் சாமியார் கபிலா. இவர் கடந்த 4.2.2018-ல் கோயில் குப்பாபிஷேகத்தின் போது இரண்டு பாம்புகளை வாடகைக்கு வரவழைத்தார். அருள்வாக்கு சொல்லி நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி கோயிலில் `சர்ப்ப சாந்தி பூஜை’ என்னும் நாக பூஜை செய்தார். அந்தப் பாம்புகளைத் தட்டுகளில் வைத்து மலர் தூவி தீபாராதனை செய்தும், பாம்புக்குப் பாலாபிஷேகமும் செய்து வைத்தார். அதோடு நிற்காமல் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது பாம்புகளைவிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை முடிந்த கையோடு அந்தப் பாம்பாட்டி உதவியுடன் அந்தப் பாம்பைக் கழுத்தில் அணிந்துகொள்கிறார். அம்மன் அருள் கிடைத்தவரைப் போன்று பாவனை செய்து பக்தர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் பரவசப்படுத்துகிறார் கபிலா.
`அம்மன் கனவில் வந்து பாம்புக்குப் பூஜை செய்யச் சொன்னார். அம்மன் அருள் வந்ததால் பாம்பை என் கழுத்தில் சுற்றினார்கள்’ என வனத்துறையினருக்கு விளக்கம் கொடுத்தார் கபிலா. இதைத் தொடர்ந்து பெண் சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.“கோயிலுக்குப் பக்தர்கள் அதிக அளவில் வர வேண்டும் என விளம்பரத்துக்காகக் கபிலா கழுத்தில் நல்ல பாம்பை சுற்றிக்கொண்டும், சாமி கழுத்தில் பாம்பை மாலையாக அணிவித்தும் இருக்கிறார். இதை யூடியூபிலும் பதிவு செய்திருக்கிறார்கள். 1972 இந்திய வனவியல் சட்டத்தில் பட்டியல் இரண்டின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள வன உயிரினத்தில் நல்ல பாம்பும் உள்ளது. நல்லபாம்பை காட்சிப்படுத்துவதோ, வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது குற்றமாகும். இது அபராதம் விதிக்க வேண்டிய குற்றம் அல்ல. நீதிமன்றத்தால் தண்டனை அளிக்க வேண்டிய குற்றம்” என்கிறார்கள் வனத்துறையினர்.
நன்றி – விகடன்