மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்த தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரை நேரடி வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சுமார் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகி புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் குறித்த இருவரையும் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என அறிவித்து தீர்ப்பு வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து வாரிசு முறைச் சட்டத்தின் படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை வாரிசுகள் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், “இந்து வாரிசு முறை சட்டப்பிரிவுகளின்படி திருமணம் ஆகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்பதால் தீபாவும், தீபக்கும் அவரது வாரிசுகள் என்று அறிவிக்கிறோம்.
தீர்ப்பில் இவர்களை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்குகிறோம். அதற்கு பதில் இவர்கள் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பில் திருத்தம் செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.