கட்டுநாக்க விமான நிலையத்தை திறக்கும் காலப்பகுதி மேலும் நீடிக்கப்படும் என சுகாதார துறை அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றுலா பயணிக்களுக்காக திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் சுற்றுலாத்துறையை பாதுகாப்பதற்காகவும், சுற்றுலாத்துறையினர் மூலம் நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்கும் வேறு வழிமுறைகளை பயன்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியோ அல்லது அதன் பின்னரோ விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் விமான நிலையத்தை திறக்க தயாராக இருப்பதாக விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதேவேளை பல்வேறு விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கான தமது சேவைகளை விரைவில் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தனர்.
கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இலங்கை வர தயாராக இருந்த பெருமளவு பயணிகள் பாதிப்படைந்தனர். எனினும் விரைவில் நாடு திரும்ப அவர்கள் எண்ணிய போதிலும் அது மேலும் தாமதம் அடையும் என்பது அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.