ஊழல் காரணமாகவும் மக்களின் தொடர் போராட்டத்தினாலும் லெபனான் நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை இல்லை. மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். வங்கிகள் அனைத்தும் திவாலாகிவிட்டது. லெபனான் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெரும்பாலான மக்கள் வீடு, உணவு, மின்சாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று, ஆளும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டம் ஆகியவை ஏற்கெனவே ஊசலாடிக்கொண்டிருந்த லெபனானின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறது. பல நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் பணியாளர்களைக் கொத்துக்கொத்தாக வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால், பசி பட்டினியால் மக்கள் மடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த லெபனான் நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் ராவ்ல் நெக்மே, “நாங்கள் இப்போது புயலுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுவரை கண்டிராத நெருக்கடி நிலையை நாங்கள் சந்தித்துள்ளோம். நாட்டில் 50% க்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். சரிவடைந்திருந்த லெபனானின் பொருளாதாரம் இப்போது தோல்வியுற்ற நிலையை அடைந்துவிட்டது. உலக நாடுகள் உதவிசெய்ய வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.