நா.முத்துக்குமாரைக் கொண்டாடிய எங்களுக்கு வாசன் என்கின்ற ஒரு பெரும் கவிஞன் திரையிசையில் வெறும் ஒரே வருடத்தில் 147 பாடல்கள் எழுதிக் கோலோச்சி மரணித்து மடிந்த கதை தெரியுமா?
சில 90ஸ் கிட்ஸ் சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது இது வாலியா? வைரமுத்துவா? இல்லை அறிவுமதி, பழனிபாரதியா? என்று தேடவைக்கும்.. அப்படித் தேடித் தொகுத்தபோது அகப்பட்ட ஒரு கவிஞர், பாடலாசிரியன் தான் இந்தத் தஞ்சை வாசன் என்கின்ற கவிஞர் வாசன்.
இன்று வெளி வரும் தல அஜித் பாடல்கள் எத்தனை நாட்களுக்குநினைவிருக்கிறதோ தெரியவில்லை அவரின் ஆரம்பகாலப் படப் பாடல்களில் வெளிவந்த “காஞ்சிப் பட்டு சேலை கட்டிக் கால் கொலுசில் தாளம் தட்டும் கன்னிப் பொண்னே நின்னு கேளம்மா..! என் மனைவி வந்த பின்னால் என்னவெல்லாம் செய்வேன் என்று சேர்த்துவைத்த ஆசை சொல்லவா?…. என் போன்றவர்களின் பள்ளிக்காலத்து தேசியகீதம் இப்பாடல். எப்பிடி இப்படி ஒருவரால் எளிமையாக, கவி நயமாக, குறும்பாக அதேவேளை பல கோணங்களில் சிந்திக்க முடிகிறது என்று அப்போதே நினைத்ததுண்டு.
அதில் ஒரு அழகான எடுத்துக்காட்டு-
“ஸ்கூட்டர் ஓட்டச் சொல்லுவேன் இடுப்பில் கையைப் போடுவேன். முன்னால் பார்த்து ஓட்டுன்னு பின்னால் மெல்லக் கிள்ளுவேன், தூங்கிப்போனால் சம்மதம் தோசை நானே ஊத்துவேன். ஊருக்கேதும் போயிட்டா உள்ளுக்குள்ளே ஏங்குவேன். அவள் முகம் என் மகளுக்குமே வரும் படி ஒரு வரம் கேட்பேன். அவள் பெயர்தனை இனிஷியலாய் இடும்படி நான் செய்திடுவேன்…” இப்படி எங்களைக் கவியால் காதலிக்கவைத்த இளைஞன் அவர்.
ஒரே வருடத்தில் 147 பாடல்களை எழுதி எல்லோரையும் அதிரவைத்த பாடலாசிரியர். தத்தகாரத்திற்கு ஏற்ப மிக வேகமாகச் சொற்களை இட்டு நிரப்பிப் பாடல் எழுதுவதில் வல்லவர் என்கிறார்கள் பழகிய பலர்.
அவரது பாடலக்ளில் என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்-
1.எட்டில் அழகு பதினெட்டில் அழகு எந்தப் பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு
(வானொலியோடு பாடும் அழகு பாடிக்கொண்டே சமைப்பதழகு)
2.முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
3.வானத்து தாரகையோ யாரிவள் தேவதையோ
4.என் மனசே சே சே உறவொன்று என்னை உரசியதே
5.ஒரு நாள் உனை விழிகள் பார்க்க இது யார் என இமைகள் கேட்க இவள் தான் உன் இதயம்
6.நிலவே நிலவே சரிகம பத நி பாடு என் கனவை
7.தென்றலைக் கண்டு கொள்ள மானே கண்களின் தேவை என்ன தேனே
8.வைகை நதிக் கரை சின்ன மணிக்குயில்
9.சிறகே இல்லாத பூங்குருவி ஒன்று
10.தொடு வானமாய் உனைப் பார்க்கிறேன் தொடும் நாளைத்தான் எதிர்பார்க்கிறேன்…
இப்படியாகப் பல பாடல்கள் எங்களின் 07,08 ஆண்டுக் கல்விகளில் பாட நேர இடைவெளிகளில்,சைக்கிள் மிதிப்புகளில், கலந்த பாடல்களை எழுதிய வாசன் மறையும் போது அவர் வயது 28.
வாசன் கடைசியாக எழுதிய பாடல் “சலாம் குலாமு சலாம் குலாமு என்னை சைட் அடிச்ச … இப்பாடலை எழுதிக் குறையிற்தான் இறந்து போனார் வாசன். அவரது இறப்புச் செய்தியைப் பிறருக்குத் தெரிவிக்கச் சைக்கிள் மிதித்துச் சென்ற பையன் தான் பின்னர் அப்பாடலையும் எழுதி முடித்தான் அவன் வேறுயாருமல்ல நா.முத்துக்குமார்.
முத்துவிஜயன்,நா.முத்து,வாசன் எல்லோரும் இருந்திருந்தால் ஒரு வேளை இப்போது வரும் தமிழ் சினிமாவின் பாடல்களில் உயிர் இருக்குமோ என்னமோ?
செந்தூரன் கனகரட்ணம்