கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதம்வரை இரத்தம் உறையும் அபாயம் இருப்பதாகப் புதிய ஆய்வு சொல்கிறது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அந்தச் சிக்கலை முன்வைத்தன. ஆனால் பி.எம்.ஜி மருத்துவச் சஞ்சிகை நடத்திய புதிய ஆய்வு இரத்தம் உறையும் அபாயம் எவ்வளவு காலம் இருக்கும் என்று சோதித்தது.
ஆய்வாளர்கள் ஸ்வீடனில் கொவிட்–19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரை அந்த வைரஸால் பாதிக்கப்படாத நான்கு மில்லியன் பேருடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
கொவிட்–19 வைரஸ் தொற்றியவர்களுக்கு இரத்தம் உறையும் அபாயம் ஆறு மாதம்வரை நீடிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாயை அடைக்கும் அபாயத்தை ஆய்வு சுட்டிக்காட்டியது.
கால்களில் இரத்தம் உறையும் அபாயம் மூன்று மாதம்வரை நீடிப்பதாகவும் அந்த ஆய்வு காட்டுகிறது.