தமிழ் திரையுலகில் நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாவது இயல்பு. அந்த வகையில் தமிழ் திரையிசை உலகத்தின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து இன்றும் மக்கள் மனதில் மறையாத பல பாடல்களை வழங்கிய புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி. தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார்.
தாத்தா புலமைப்பித்தனின் நற்பெயரை மேலும் விரிவாக்கவும், திரையுலகில் சாதனை படைக்கவும் வருகை தந்திருக்கும் திலீபனை.. அவர் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘எவன்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தித்தோம்.
வணக்கம். வாழ்த்துக்கள்..
நீங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்ளுங்களேன்..?
2009ஆம் ஆண்டுகளில் இரு சக்கர வாகன பந்தய வீரராக இருந்தேன். அந்த காலகட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இரு சக்கர வாகன பந்தயத்தில் பங்குபற்றி வெற்றி பெற்றிருக்கிறேன். அப்போது தமிழகத்தின் மிக இளம் வயது இரு சக்கர வாகன பந்தய வீரர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றேன். இருசக்கர வாகனத்தில் பயணிப்பதும்.. இதில் சாகசம் செய்வதும் மனதிற்கு பிடித்த செயலாக இருந்தது. இதன் காரணமாக இந்த சாகச பயணத்தில் கின்னஸ் சாதனை ஒன்றையும் படைத்தேன். வீலிங் எனப்படும் ஒரு சக்கரத்தில் வாகனத்தை தொடர்ந்து 13 கிலோமீற்றர் வரை இயக்கி, கின்னஸ் சாதனையும் படைத்தேன். இதன்பிறகு இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபாட்டை குறைத்துக் கொண்டு, திரையுலகின் மீது கவனம் செலுத்த தொடங்கினேன். 2012 ஆம் ஆண்டில் இயக்குநர் ஜெயசீலன் இயக்கத்தில் தயாரான ‘பள்ளிக்கூடம் போகாமலே’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானேன். அந்தத் திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு ‘எவன்?’ எனும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியன்று வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘சாகாவரம்’ எனும் பெயரில் ஒரு திரைப்படத்தின் கதையின் நாயகனாக நடிப்பதுடன் அதனை இயக்கியும் வருகிறேன். இந்தத் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் ஜேனரில் தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ‘ஆண்டனி’ எனும் பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறேன்.
இருசக்கர வாகன பந்தய வீரர் கதாநாயகனாக நடிக்கலாம். ஆனால் படத்தை இயக்கியிருக்கிறீர்களே…!
2014 ஆம் ஆண்டில் எனது தாத்தாவின் கனவை நனவாக்குவதற்காக லண்டனுக்கு சென்று அங்குள்ள ஃபிலிம் அகாடமியில் திரைப்பட உருவாக்கம் குறித்த கல்வியை கற்றேன். இதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் ‘சாகாவரம்’ படத்தின் கதையை எழுத தொடங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாக உழைத்து உருவான திரைப்படம் ‘சாகாவரம்’.
தாத்தா புலமைப்பித்தன் பற்றி..?
நான் சிறுவனாக இருந்த போதிலிருந்து தாத்தாவுடன் தான் இருந்திருக்கிறேன். எமக்கு தாத்தா பாட்டி தான் எல்லாம். நான் இன்று திரையுலகில் கதாநாயகனாக.. இயக்குநராக.. உயர்ந்திருக்கிறேன் என்றால், இது அவர்களின் கனவு. இருசக்கர வாகன பந்தய வீரராக வேண்டும் என்பது எம்முடைய கனவாக இருந்தது ஆனால் திரைத்துறையில் சாதனை படைத்த கலைஞராக உருவாக வேண்டும் என்பது என்னுடைய தாத்தா பாட்டியின் கனவாக இருந்தது இதனை உணர்ந்து கொண்ட பிறகுதான் திரைத்துறை மீது கவனம் செலுத்தி என்னை தகுதிப்படுத்திக் கொண்டு பயணிக்கிறேன்.
மறைந்த புரட்சித் தலைவரே வியந்து பாராட்டிய உங்களுடைய தாத்தா புலமைபித்தன் குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே…!
நான் சிறிய வயதில் மறைந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கதைகளை கேட்டு தான் வளர்ந்தேன். இன்றும் நான் புரட்சித் தலைவரின் தீவிர ரசிகன். இது சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெறும் ‘நான் யார் நீ யார்..’ என்று பாடலை தாத்தா எழுதியிருந்தார் இந்த பாடலை கேட்ட புரட்சித் தலைவர் பாடலாசிரியரான தாத்தாவை நேரில் சந்தித்த போது வியப்படைந்தாராம். இளம் வயதிலேயே இப்படி ஒரு பாடலை எப்படி வழங்க முடிந்தது? என்று பாராட்டினாராம். இந்தப் பாடலை வாழ்க்கையில் அனுபவத்தை பெற்ற முதியவர் ஒருவர் எழுதியிருப்பார் என்று நான் நினைத்தேன் என்றாராம். அப்படத்தை இயக்கிய இயக்குநர் கே ஷங்கரிடம் எனது தாத்தாவை அறிமுகப்படுத்தியதற்காக ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டே இருந்தாராம்.
நான் இருசக்கர வாகன பந்தய வீரராக இருக்கும் போது எம்மைக் குறித்து பாட்டி கவலை அடைந்தாலும் தாத்தா எப்போதும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார் உனக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ.. அதனை முழுமூச்சுடன் செய் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் தாத்தா பாட்டியின் கனவு நான் திரைத்துறையில் ஹீரோவாக மிளிர வேண்டும் என்பது இதனை உணர்ந்து நான் திரைத்துறையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.
அடிப்படையிலேயே நான் பாடலாசிரியர் புலமைப்பித்தனின் பாடலுக்கு ரசிகன் ஆனால் நிஜத்தில் அவரது பேரனாக இருப்பது கூடுதல் பொறுப்புடன் கூடிய விவரிக்க இயலாத மகிழ்ச்சி. தாத்தா எப்போதும் என்னிடம் ஒரு விடயத்தை சொல்வதுண்டு. வாழ்க்கையில் அனைவருக்கும் வெற்றி தோல்வி என இரண்டு வாய்ப்பு இருக்கிறது ஆனால் உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது. நீ நிச்சயமாக வெற்றி பெற்று தான் தீர வேண்டும் வேறு வாய்ப்பு இல்லை. அவரின் இது போன்ற வார்த்தைகள் எம்மை எப்போதும் உத்வேகத்துடன் இயங்க செய்து கொண்டே இருக்கும். நான் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வருகை தந்திருந்தால்.. என் மீதான எதிர்பார்ப்பு குறித்து அழுத்தம் எதுவும் இருந்திருக்காது. ஆனால் பிரபலமான பாடலாசிரியரின் பேரன் அதிலும் புரட்சித் தலைவரின் நம்பிக்கையும் ஆசியும் பெற்ற புலமைப்பித்தனின் பேரன் என்றால் என் மீதான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகம். அந்த பொறுப்பை உணர்ந்து இருப்பதால் திரைத்துறையில் கவனமுடன் பயணிக்கிறேன்.
திரைப்படத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து…?
திரைப்படத் துறையை பொறுத்த வரை நாள்தோறும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் திரைப்படத்துறையில் நாள்தோறும் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் இருக்கும் இது ஆரோக்கியமான முன்னேற்றம். ஆனால் நம்முடைய கலாச்சாரம் தொன்மையானது இதில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதிக்க இயலாது. தற்போது வரும் படைப்புகளில் கலாச்சார சீரழிவு மற்றும் சீரழிப்பு இருக்கிறது. குறிப்பாக லிவிங் டுகெதர் எனும் திருமணம் செய்து கொள்ளாமல் நீடிக்கும் உறவு. சினிமா என்பது மிக வலிமையான ஆயுதம். இதன் மூலம் படைப்பாளி எதை சொன்னாலும் பாமர ரசிகர்கள் முதல் மெத்த படித்த ரசிகர்கள் வரை நம்புவார்கள். அதனால் நல்ல விடயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன் இதனை வேண்டுகோளாகவும் முன் வைக்கிறேன்.
அடிப்படையில் நான் ஒரு டீ டோட்டலர். வாழ்க்கையில் ஒரு முறை கூட மது, புகை போன்றவற்றை தொட்டது கிடையாது. இந்த நல்ல பழக்கம் என்னுடைய தாத்தாவிடம் இருந்து எனக்கு வந்தது. நான் எதிர்காலத்தில் பத்து அல்லது நூறு படங்களுக்கு மேல் நடித்து, சிறந்த நடிகராக அடையாளப்படுத்தலாம். ஆனால் என்னுடைய வெற்றி என்பது.. என்னுடைய திரைப்படங்களை பார்த்து பத்து ரசிகர்களாவது நான் புகைப்பழக்கத்தை கைவிட்டேன் மது அருந்தும் பழக்கத்தை கைவிட்டேன் என சொல்லும் போது தான் வெற்றி பெற்றதாகவே உணர்வேன்.
இந்த தருணத்தில் தமிழில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள முன்னணி நட்சத்திர நடிகர்களிடம் நீங்கள் திரையில் தோன்றும் போது புகை பிடிக்கும் காட்சிகளிலோ மது அருந்தும் காட்சிகளிலோ நடிப்பதை முற்றாக தவிர்த்து விடுங்கள் என்பதனை கோரிக்கையாக முன் வைக்கிறேன். ஏனெனில் தமிழ் திரை உலகில் ஒவ்வொரு ரசிகர்களுக்கும்.. அவர் விரும்பக்கூடிய நடிகர்கள்.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
அதுமட்டுமல்ல நான் எத்தனை படங்களில் நடித்தாலும் புகை பிடிக்கும் காட்சிகளிலோ மது அருந்தும் காட்சிகளிலும் நடிப்பதில்லை என்று கொள்கையை வைத்திருக்கிறேன் நான் இயக்கும் படத்திலும் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது.
பிரம்மாண்டமான பட்ஜட்டில் பான் இந்திய அளவிலான படைப்புகள் உருவாகிறது. இது குறித்து உங்களின் பார்வை என்ன…?
காலங்கள் மாற மாற ட்ரெண்ட்டும் மாறும். கெட்ட விடயங்களை படைப்புகள் மூலம் மக்களின் மனதில் திணிக்காத வரை எதுவும் தவறில்லை அனைத்து மாற்றங்களும் ஆரோக்கியமானது தான். பத்தாண்டுகளுக்கு முன் நகரம் சார்ந்த சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்தி கொண்டு இருந்த தருணத்தில் ‘பருத்திவீரன்’ என்ற ஒரு திரைப்படம் வருகை தந்து மக்களிடம் வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகத்தின் திசையை கிராமிய பாணியிலான கதைகளின் பக்கம் திருப்பியது. அதேபோல் ராகவா லோரன்ஸ் நடிப்பில் வெளியான ‘முனி’எனும் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் நகைச்சுவை கலந்த பேய் கதைகளின் ஆதிக்கம் உண்டானது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்கள் ஒரு பேய் படத்தை கொண்டாடத் தொடங்கியது ‘முனி’படத்தின் வெற்றியின் மூலமாகத்தான். அதன் பிறகு தற்போது வரை கொமடி ஹாரர் திரைப்படங்களின் வருகை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் மக்கள் எதனை கொண்டாடி வெற்றி பெற செய்கிறார்களோ அதுதான் ட்ரெண்ட். இது மாறிக்கொண்டே இருக்கும். தற்போது பான் இந்திய படங்கள் ட்ரெண்ட்டாக இருக்கிறது.
விரைவில் வெளியாக இருக்கும் உங்களின் எவன் படம் குறித்து..?
உண்மையாகச் சொன்னால் இந்தப் படம் நிறைவடைந்து நான்காண்டுகளாகிறது. படத்தில் இயக்குநர் தான் தயாரிப்பாளரும் கூட. தவிர்க்க முடியாத பல காரணங்களால் இந்த திரைப்படத்தை திட்டமிட்டபடி இதற்கு முன்னர் வெளியிடப்படவில்லை. தாத்தா கிளாப் அடித்து தொடங்கி வைத்த திரைப்படம். இந்த திரைப்படம் எந்த வடிவத்திலும் முடங்கி விடக்கூடாது என்பதற்காக கடுமையாக உழைத்து விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். இந்த திரைப்படத்தில் தான் தாத்தா எழுதிய கடைசி பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு தாத்தா பாடல்கள் எழுதி இருந்தாலும் அவரது மறைவிற்குப் பிறகு இந்த படம் வெளியானால் இதுதான் அதிகாரப்பூர்வமாக அவருடைய கடைசி பாடல் இடம் பெற்ற திரைப்படமாகும். இதில் ஒரு அற்புதமான அம்மா பற்றிய பாடலை எழுதியிருக்கிறார்.
தமிழ் திரை உலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம்/ ஆனால் இந்த படத்தில் அம்மா- மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான் உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தின் ஒரு வரி கதை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக எவன் தயாராகி இருக்கிறது.
தாத்தா பாடலாசிரியர் என்பதாலும் இயல்பிலேயே எமக்கு இசை மீதான பற்றும் காதலும் அதிகம் அதனால் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது.
சந்திப்பு: கேவிஆர்ஜி.