குமுதினிப் படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நெடுந்தீவிலுள்ள நினைவாலய வளாகத்தில் இடம்பெறும்.
நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டித் திருப்பலியும், மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்புப் பூஜையும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து குமுதினிப் படுகொலை நினைவேந்தல் குழுமத்தின் தலைவர் வி.ருத்திரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் நினைவுத்தூபிக்கான நினைவுச் சுடர் ஏற்றல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்துதல் ஆகிய நிகழ்வுகளுடன் பசுந்தீவு ருத்திரனின் ‘குருதியின் குமுறல்கள்’ என்ற கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
நிகழ்வின் இறுதியில் நினைவாலய வளாகத்தில் நினைவு மரநடுகையும் இடம்பெறவுள்ளது.
குமுதினிப் படுகொலை
1985ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது 7 மாதக் குழந்தை உள்ளடங்கலாக குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் குத்தியும் வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.