என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது.நிலக்கரி வெட்டி எடுத்து, அனல்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
அடுத்த மாதம் (அகஸ்ட் ) முதல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை நிறுத்தப்போவதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.
இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.
இதற்காக நேற்று காலை ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் வளையமாதேவியில் இருந்து கரிவெட்டிக்கு செல்லும் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 10 ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது.
இதற்கு விவசாயிகள் மற்றும் பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலத்த பொலீஸ் பாதுகாப்புடன் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்றது.
இதனை கண்டித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினரை பொலீசார் கைது செய்தனர்.
என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஏற்கனவே பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். தமிழகத்தை விட்டு என்.எல்.சி. வெளியேற வேண்டும் என பா.ம.க.வினர் கூறி வருகின்றனர்.