தங்காலை, குடாவெல்ல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் 43 வயதுடைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற காரின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கருதப்படும் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த அம்பலாங்கொட டில்ஷான் என்பவருக்கு நெருக்கமான ஒருவரென பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நகுலோகமுவ – தெற்கு குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.