“என்னை இங்கு (சவூதி) கொடூர சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர். இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்.”
– இவ்வாறு கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார் மலையகத் தாயொருவர்.
சரஸ்வதி புஷ்பராஜ் என்ற தாயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ள. இவர், இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
அவர் வறுமை காரணமாக இவ்வருடம் ஜுலை 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டுள்ளார். உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளன. உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என்று தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ளது. அவரைச் சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முகவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகச் சரஸ்வதியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அழைப்பை எடுத்தால்கூட அவர்கள் பதிலதிப்பதில்லையாம்.
தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு இலங்கையர்களிடம் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார் சரஸ்வதி புஷ்பராஜ்.