புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸ் அதிகாரத்துக்கு ஜே.வி.பி. அடியோடு எதிர்ப்பு!

பொலிஸ் அதிகாரத்துக்கு ஜே.வி.பி. அடியோடு எதிர்ப்பு!

1 minutes read

“இலங்கையில் பொலிஸ்துறை முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸ் அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் எமது கட்சி உடன்படாது. ஆனால், காணி அதிகாரம் பற்றி பேச்சு நடத்துவதற்கு எமது கட்சி தயாராகவே உள்ளது.”

– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தற்போது வடக்கில் உள்ள கட்சியோ அல்லது தெற்கில் உள்ள கட்சியோ விவாதத்தை ஆரம்பிக்கவில்லை. மாறாக ரணில் விக்கிரமசிங்கதான் ஆரம்பித்துவைத்தார். வடக்கில் உள்ள வாக்குகளை இலக்கு வைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டுள்ள தந்திரோபாய அரசியல் நகர்வே இதுவாகும்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலேயே ரணில் தீவிரமாக உள்ளார். ஏனெனில் ஏனைய உள்ளூராட்சி சபைத் தேர்தலோ, மாகாண சபைத் தேர்தலோ நடத்தப்பட்டால் அவற்றின் பெறுபேறுகள், தமக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியைப் பெற்றுக்கொடுக்காது என்பது ரணிலுக்குத் தெரியும். எனவே, 13 ஐ முழுமையாக அமுலாக்கக்கூடிய தலைவர்தான் என்ற மாயையை உருவாக்கி அதன்மூலம் வாக்கு வேட்டை நடத்துவதற்கான அரசியல் உபாயமாகவே 13 குறித்த விவாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, 13 தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்பதை முதலில் ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

இரண்டாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு 13 பிளஸா அல்லது அதிகாரக் குறைப்பா என்பது பற்றிப் பேசலாம்.

பொலிஸ் அதிகாரம் வழங்கக்கூடாது. ஏனெனில் இலங்கையில் பொலிஸ் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண சபை முதலமைச்சராகப் பிரசன்ன ரணதுங்க இருந்தால், அவர் போன்றவருக்குப் பொலிஸ் அதிகாரம் சென்றால் என்ன நடக்கும்? இது வடக்கில் அல்ல தெற்கில் பிரச்சினையாக அமையும்.

காணி அதிகாரம் பற்றி கதைக்கலாம். தொல்லியல் இடங்கள் மத்திய அரசின்கீழ்தான் இருக்கும். மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய காணி, ரயில்வே திணைக்களத்துக்குரிய காணி என்பன அரசின்கீழ்தான் இருக்கும். அதேபோல் வடக்கில் படையினர் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More