காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் திகதி உத்தரவிட்டது.
தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் திகதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 23-ந் திகதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.