தயாரிப்பு : லைக்கா புரொடக்சன்ஸ்
நடிகர்கள் : சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், கே.எஸ். ரவிக்குமார், நிரோஷா மற்றும் பலர்.
இயக்கம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
மதிப்பீடு : 2.5/ 5
அண்மையில் தான் துடுப்பாட்டத்திற்குள் சாதிய அரசியல் வேண்டாம். விளையாட்டு மக்களிடையே பாகுபாட்டை களைந்து ஒற்றுமையே ஏற்படுத்தும் என உரத்துப்பேசும் ‘ப்ளூ ஸ்டார்’ வந்தது. அதனை மக்களும் வெற்றியடையச் செய்தார்கள். தற்போது துடுப்பாட்டத்திற்குள் மத அரசியலை புகுத்தாதீர்கள். இதன மதநல்லிணக்கம் பாதிக்கப்படும் என வலியுறுத்தும் ‘லால் சலாம்’ வெளியாகியிருக்கிறது. இதனையும் மக்கள் வெற்றியடைய செய்வார்களா? மக்களிடையே பிரபலமாகியிருக்கும் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி சமூக அரசியல், மத அரசியல் என மக்களுக்கு இன்றைய காலகட்டத்திற்கு தேவையான விடயங்களை பேசியிருக்கும் ‘லால் சலாம்’ படம் வெற்றியடையுமா? என்பதைத் தொடர்ந்து காண்போம்.
இந்துக்களும், இஸ்லாமீயர்களும் தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு தமிழக கிராமத்தில் அரசியல்வாதிகள் மத அரசியலை திட்டமிட்டு நுழைத்தால்.. அங்கு மதநல்லிணக்கம் என்னவாகும்? சமூக அமைதி என்னவாகும்? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
இந்துவான லிவிங்ஸ்டனும், இஸ்லாமீயரான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நண்பர்களாக இருக்கிறார்கள். ரஜினிகாந்த் மும்பையில் டெக்ஸ்டைல்ஸ் துறையில் வல்லமைமிக்க தொழிலதிபராக இருக்கிறார். இவருடைய மகன் விக்ராந்த். இவருக்கு இந்திய துடுப்பாட்ட அணியில் இடம்பெறவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு புள்ளியில் இவர் கிராமத்தில் இந்து -இஸ்லாம் என மத ரீதியாக பிரிந்து துடுப்பாட்ட விளையாட்டு போட்டியை நடத்துகிறார்கள். இந்த போட்டியில் இஸ்லாமீய அணியை வெற்றிப் பெற வைப்பதற்காக விக்ராந்த் அந்த கிராமத்திற்கு வருகிறார். அந்த கிராமத்தில் விக்ராந்திற்கும், விஷ்ணு விஷாலுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதனால் பயங்கரமான கலவரம் உண்டாகி, விக்ராந்த் கடுமையாக பாதிக்கப்படுகிறார். வியடமறிந்த சுப்பர் ஸ்டார் கிராமத்திற்கு திரும்பி, தன்னுடைய அதிரடியான நடவடிக்கையால் மத ரீதியாக பிரிந்து கிடந்த கிராமத்தினரிடம் மத நல்லிணக்கம் குறித்து பேசி புரியவைக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் லால் சலாம் படத்தின் கதை.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இருந்தாலும் திரையை விஷ்ணு விஷால் அதிகளவில் ஆக்கிரமித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் முப்பது நிமிடங்களுக்கு குறைவான நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும் அவர் பேசும் வசனங்கள் கவனம் பெறுகின்றன. இந்தியா போன்ற மதசார்பின்மையை போற்றும் நாடுகளில் தற்போதைய சூழலுக்கு இம்மாதிரியான படைப்புகள் அவசியம் என எண்ணியதற்காக இயக்குநர் ஐஸ்வர்யாவை பாராட்டலாம். ஆனால் அழுத்தமாக சொல்ல வாய்ப்பு கிடைத்தாலும், அதனை தவறவிட்டு, மேலோட்டமாக கடந்து சென்றிருப்பது தான்…!? கவலையைத் தருகிறது.
விஷ்ணு விஷால் வழக்கம் போல் நன்றாக நடித்திருக்கிறார். விக்ராந்த தனக்கு கிடைத்த குறைவான காட்சிகளிலும் தனக்கான பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார். நீண்ட நாள் கழித்து மூத்த நடிகைகளான ஜீவிதா மற்றும் நிரோஷாவை திரையில் காண்பதால் மகிழ்ச்சி. செந்தில் கதாப்பாத்திரம் கவனம் பெறுகிறது. இருப்பினும் முதல் பாதி ரசிகர்களுக்கு தொய்வைத் தருகிறது. இரண்டாம் பாதியில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வருகை.. லாஜிக் மீறலை மீறி ரசிக்க வைக்கிறது. ஏ ஆர். ரஹ்மானின் பின்னணியிசை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கம்பீரமாக இருக்கிறது.
லால் சலாம் – காலத்தின் கட்டாயம்