செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் துவாரகன் கவிதைகள்

துவாரகன் கவிதைகள்

1 minutes read

1. அந்தரத்தில் மிதத்தல்

மமதையை,
யுகங்களாகச்
சுமந்துவந்த காலம்
இந்த மனிதர்களின் கைகளில்
சேர்த்திருக்கிறது.

கபடம் நல்ல முகமூடி
அதிகாரம் ஒரு சப்பாத்து
அதற்குத் தெரிவதெல்லாம்
பூச்சிகளும் புற்களும்தான்.

அதிகார போதையில்
வானமும் வசப்படும்
சிட்டாய்க்கூடப் பறக்கலாம்.

பறந்தாலென்ன? அளந்தாலென்ன?
நிற்பதற்கு மண்ணுக்குத்தானே
வரவேண்டும்.

மண் புதைகுழி.
தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும்.
சாம்பல்கூடக் கரைந்துவிடும்.
எதுவுமில்லை எதுவும்.
042024

2. வேர்கள் மறைந்தே இருக்கட்டும்

வேர்கள்
எப்போதும்போல்
மறைந்தே இருக்கட்டும்.
மண்ணின் பிடிமானத்தை விட்டு
அவை வெளியே வரவேண்டாம்.

கிளைகளின்
களிநடனம் பற்றியும்
விருட்சத்தின்
வலிமை பற்றியும்
அவர்கள்
மனங்குளிரப் பேசுவார்கள்.
தங்கள் வேர்களையும்
தேடுவதாகத்தான் கூறுவார்கள்.
அத்தனையும் பசப்பு வார்த்தைகள்.

மண்ணும் பெயல்நீரும்
பொத்திவைத்த
ஆழவோடிய வேர்கள்
வெளியே வரவேண்டாம்.

அவர்களின் குடுவைகளில் இருப்பது
உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல.
உயிர்வாங்கும் சுடுநீர்.
052024

3. ஒரேயொரு கேள்வி

கலகலப்புக் குறையாத கூடு அது.
ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும்
விளக்குக்கரி படிந்த
இனிய காலங்களைத்
திரளாக அப்பியிருந்தன.

தினமும்
திறந்து திறந்து மூடியதால்
ஆணி கழன்றுவிட்ட
நீள்சதுர சூட்கேஸில்
பத்திரப்படுத்தப்பட்டிருந்த
அஞ்சல் அடையாள அட்டைக்
கறுப்பு வெள்ளைப் புகைப்படம்,
நினைவுகளோடு
நிறைந்து வழிந்தது.

அவள் காற்றில் கூந்தல் உலர்த்திய
பொழுதுகள்
அந்தத் தளர்ந்துபோன
முதுமரத்தின் முகத்தில்
இன்னமும்
மின்னிக் கொண்டிருந்தது.

எப்போதாவது ஒருநாள்…
தெருப்படலை திறந்து
புன்னகைக்கும் காலத்தை அழைத்துவருவாள் என்ற
நம்பிக்கையோடு காத்திருந்தவளிடம்
விசாரணையின் முடிவில்
அந்த அதிகாரி
ஒரேயொரு கேள்வி கேட்டான்.

நினைவுத் திரள்…
மரத்திலிருந்து பழுத்துவிழுந்து
மண்ணோடு மண்ணாக
இற்றுப்போன இலையாக
சிதைந்துபோனது.
052024

4. நீ பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறாய்

நீ நடந்த செம்மண் பாதையும்
உன் தந்தை வியர்வை சிந்தி உழைத்த
வயல்வெளியும்
உன் நினைவுத் திசுக்களில் இருந்து
அகற்றப்பட்டிருக்கின்றன

மண்சட்டியில்
முளைக்கீரைக் கறியாக்கி
திரளைச் சோறூட்டிய
உன் பாட்டியை
நினைவில்லை என்கிறாய்

உன் பெரியமாமன்,
சிவந்த மண்குழைத்துக் கட்டித்தந்த
மண்சுவர் வீடு
இது இல்லை என்கிறாய்.

உலக வரைபடத்தை விரித்து
விண்ணாணம் பேசும் உன்னால்,
உனது தெருவில் இருக்கும்
விஷகடி வைத்தியரைக்கூடத்
தெரிந்துகொள்ள முடியவில்லை.

உன் நரம்புமண்டலத்திலிருந்து
ஓர் இழை
மிகப் பத்திரமாகப்
பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது
நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்த
உன் வேர்
ஆழத்தில்…
மிகமிக ஆழத்தில்…
புதைக்கப்பட்டிருக்கிறது.

இன்று நீ புதிய மனிதன்!
வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த
பறக்கும்தட்டு
உன்னை
இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறதுபோலும்.
05/2024

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More