தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் 12-வது வார்டு மேல தெருவைச் சேர்ந்தவர் காளிராஜ், கூலி தொழிலாளி. இவருடைய மகள் மனிஷா (வயது 8), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று காலையில் மனிஷா தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றாள். அங்குள்ள காலிமனையில் குப்பைகள் குவிந்து கிடந்ததால், 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிந்தன.
அந்த வழியாக சென்ற சிறுமி மனிஷா மீது திடீரென்று தெருநாய்கள் பாய்ந்து கடித்து குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தெருநாய்களை விரட்டினர்.
தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சிறுமி மனிஷாவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.