செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம்

வட மாகாணத்துக்கு 3ஆவது நேரடி தங்கம்

2 minutes read

(யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து நெவில் அன்தனி)

யாழ். துரையப்பபா விளையாட்டரங்கில் நடைபெற்ற 48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஓர் அங்கமான ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வட மாகாணம் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

மத்திய மாகாணத்துக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மிக இலகுவான 3 வாய்ப்புகள் உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்ட வட மாகாணம், 19 வயதான கோல் காப்பாளர் ஆர்ணிகன் 3 பெனல்டிகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.

போட்டியின் ஆரம்பத்தில் மிகத் திறமையாக விளையாடிய வட மாகாண அணி ஒரு சில கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

ஆனால், போட்டியின் 15ஆவது நிமிடத்தில் இடதுபுறத்தில் இருந்து பரிமாறப்பட்ட பந்தை கே.ஜீ.ஏல்.டி. (தில்லின) பிரேமச்சந்த்ர கோலினுள் இலாவகமாக புகுத்தி மத்திய மாகாணத்தை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர், கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்த வட மாகாண அணிக்கு அடுத்தடுத்து 4 கோர்ணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் கோல் போட முடியாமல் போனது.

இடைவேளையின்போது மத்திய மாகாண அணி 1 – 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் முழு ஆதிக்கம் செலுத்திய வட மாகாணம் எதிரணியின் கோல் வாயிலுக்கு அருகாமையில் இருந்தவாறு ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.

வின்சென்ட் கீதன், செபமாலை நாயகம் ஞானரூபன், நிதர்சன், மாற்று வீரர் பிரேமகுமார் ஆகியோர் மிக இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைக் கோட்டை விட்டனர்.

இதனால் வட மாகாணத்துக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற கருத்து நிலவியது.

ஆனால், போட்டியின் உபாதையீடு நேரத்தில் வின்சென்ட் கீதன் கோல் நிலையை சமப்படுத்தி வட மாகாண அணிக்க்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால், போட்டி முழு நேரத்தைத் தொட்டபோது ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இதனையடுத்து, வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டி முறையில் வட மாகாணம் 6 – 5 என வெற்றிபெற்று தங்கப் பதக்கதை மூன்றாவது நேரடித் தடவையாக சுவீகரித்தது.

ஆட்டநாயகனாக எஸ். ஆர்ணிகன் தெரிவானார்.

2019இல் செபமாலைநாயகம் ஞானரூபன் தலைமையிலும் 2023இல் செபமாலை நாயகம் ஜூட் சுபன் தலைமையிலும் இந்த வருடம் எம். என். நிதர்சன் தலைமையிலும் வட மாகாணம் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

2020, 2021, 2021 ஆகிய வருடங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்த வருடம் மத்திய மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் தென் மாகாணம் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

வட மாகாண அணி

எம்.என். நிதர்சன் (தலைவர்), எஸ். ஞானரூபன், எஸ். ஜூட் சுபன், வின்சென்ட் கீதன், ஏ. ஜெயராஜ், வி. விக்னேஷ், ரி. கஜகோபன், எஸ். ஆர்ணிகன் (கோல்காப்பாளர்), என். அன்தனி ரமேஷ், ஏ. டிலக்ஷன், கஜமாதன், எம். பிரேமகுமார், ஜே. ஜோன்ராஜ், எம். ஜே. குயின்டன், பி. சுதேசன், ஏ. ரி. தீபன், எம். எஸ். கிரிஷா, ஜே. ஏ. ஜெரிசன், எஸ். மதிவதனன், எஸ். சிந்துஜன்.

பெண்கள் பிரிவில் மேல் மாகாணம் தங்கப் பதக்கத்தையும் வடமேல் மாகாணம் வெள்ளிப் பதக்கத்தையும் சப்ரகமுவ வெண்கலப் பதக்கதையும் வென்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More