சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி பேரணியாக செல்லும் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், இந்த பேரணிக்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பேரணிக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தலைமை தாங்கினார்.
இதையடுத்து, தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற குஷ்பு உள்பட பாஜக மகளிரணியினரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பேரணியாக செல்ல முயன்ற பாஜக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.