ஈழத்து கவிஞர்களில் முக்கியமானவர் வ.ஐ.ச. ஜெயபாலன். நெடுந்தீவை பூர்வீகமாகக் கொண்ட இவர், வன்னியில் வாழ்ந்தவர். சில காலம் புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவிட்டு தற்போது தமிழகத்தில் உள்ள ஜெயபாலன், தனுஷ் நாயகனாக நடித்த ஆடுகளம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். ஆடுகளம் பேட்டைக்காரனாக அறியப்பட்ட, ஜெயபாலன் தொடர்ந்தும் கவிதைகளிலும் நடிப்பிலும் அக்கறை செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலை ‘வணக்கம் லண்டன்’ நன்றியும் பிரசுரம் செய்கின்றது. ஆசிரியர்
“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’
“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”
“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.
இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”
‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’
“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம்.
இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’
“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’
“1984 – 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 – 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது. பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”
“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”
“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.
பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”
“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’
“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”
“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’
“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’
“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே… எழுத்தாளராக உங்களின் பார்வை?’’
“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’
“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”
“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் – இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’
“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’
நேர்காணல் – வே.கிருஷ்ணவேணி
நன்றி – ஆனந்த விகடன்