செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை

தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை

6 minutes read

சுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து  பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்து மருத்துவர் து. வரதராஜா வழங்கிய நேர்காணலைத் தருகிறோம். -ஆசிரியர். 

உலக சமூகத்தை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்க முடியுமா?

தற்பொழுது உலக மக்களால் பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி இருக்கின்றது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது அந் நாட்டு மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி தற்போது உலகமெங்கும் பரவி பல இலட்சக்கணக்கான மக்களை நோய்வாய்ப்படையச் செய்தது மட்டுமல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்களின் சுவாசத்தையே நிறுத்திவிட்டது.

உலகமெங்கும் பாரிய பிரச்சினையாக இருக்கின்ற மிகவும் வேகமாக தொற்றிக் கொண்டிருக்கும் ஒரு நோயாக அடையாளங் காணப்பட்டிருக்கின்றது. இது Covide -19 என்று அழைக்கின்ற, கொரோனோ இனத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். இதில் இரண்டு சிறு பிரிவுகள் காணப்படுகின்றன. ஒரு பிரிவுதான் சீனா நாட்டில் மிகவும் வேகமாக பரவியது. சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பரவி வருவது இதனுடைய இரண்டாம் சிறு மாற்றங்களை கொண்ட வைரஸ் ஆகும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாக பரவிக் கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் அவருக்கு சில அறிகுறிகள் இருக்கும். சிலநேரம் அறிகுறி இல்லாமல் கூட இருக்கலாம் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றுகின்ற வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கின்றது. மக்கள் அறிந்து கொண்டது போல இந்த வைரஸ் ஏற்கனவே அறிமுகமான காய்ச்சல் (FLU) என்கின்ற வைரஸ் தொற்றின் அறிகுறிகளை இந்த வைரஸ் தாக்கமும் கொண்டிருக்கும். ஆனால் இதனுடைய தாக்கம் சாதாரண காய்ச்சல் வினுடைய தாக்கத்தை விட, அதனுடைய இறப்பு வீதத்தை விட, 10 மடங்கு அதிகமாக இருப்பதால் தற்பொழுது ஒரு பாரிய பிரச்சினையாக மாறியிருக்கின்றது.

அதேநேரம் இந்த காய்ச்சல் என்கின்ற வைரஸ் தாக்கம் பல ஆண்டுகளாக இருக்கின்ற படியால் மக்களுக்கு ஏற்கனவே அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தி சிறிது காணப்படும். அதே நேரம் அதற்குரிய தடுப்பூசியும் வழமையான பெரும்பான்மையான நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் Covid-19 வைரஸ் ஒரு புதிய இனமான வைரஸ் ஆகும். மக்களுக்கு அதனுடைய நோய் எதிர்ப்புத் தன்மை இல்லை என்பதால் மிகவும் வேகமாக பரவி வருகிறது அதற்குறிய தடுப்பூசி கூட இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் சில பிரச்சினைகள் இருக்கும். ஒரு தடுப்பூசி கண்டுபிடித்தால் அதை ஒருவருக்கு ஏற்றுகின்ற பொழுது அந்த தடுப்பூசி எந்த அளவுக்கு இந்த வைரசை கட்டுப்படுத்தும் அந்த தடுப்பூசிகளால் வருகின்ற பக்க விளைவுகள் நீண்டகாலப் பிரச்சினை என்பதை ஆராய்ச்சி செய்யவேண்டும். அதனால் உடனடியாக ஒரு வைரஸ் கிருமி வந்ததும் சில நாட்களுக்குள்ளோ ஒரு மாதத்துக்குளோ தடுப்பூசி கண்டுபிடிப்பது என்பது இலகுவான காரியமல்ல.

அதேபோல் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்று ஏற்பட்டவர்கள் இருமுகின்ற பொழுதும் தும்முகின்ற பொழுதும் அல்லது அவர்களுடைய உடல் பாகங்களில் அந்த வைரஸ் கிருமி இருந்து இன்னொருவருக்கு வேகமாகத் தொற்றும் அபாயம் இருக்கின்றது. அதனால் பல சுகாதார நிறுவனங்களும் நாடுகளும் மக்களு க்கும் பிரயாணிகளுக்கும் பொதுவான அறிவுரைகளை விடுத்துள்ளார்கள்.

இந்த வைரஸ தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக காய்ச்சல், உடல் நோ, தலைவலி போன்றன ஏற்படலாம். இது பாரதூரமாக மாறும் பொழுது இருமல், சளி, சுவாச பிரச்சினை, மூச்சு விடுதலில் சிரமம், நிமோனியா போன்ற தீவிரமான அறிகுறிகளும் தென்படும். இது சுகதேகிகளாக இருக்கின்றவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதேநேரம் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் ஏற்கனவே சிறுநீரக, இதய, நுரையீரல் சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வைரஸினுடைய தாக்கம் தீவிரமாகவும் அவர்களிடையே இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக காணப்படுவதாக அறியப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பற்றி மக்கள் மத்தியில் அதிகம் அச்சம் உருவாக காரணம்?

உண்மையிலேயே இந்த நோய் பற்றிய ஒரு தெளிவும் விழிப்புணர்வும் கட்டாயம் அனைத்து மக்களுக்கும் இருக்க வேண்டும். இந்த நோயை வராமல் தடுப்பதற்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றிக் கொள்ளாமல் பார்க்க வேண்டிய கடமையும் தேவையும் அனைவருக்கும் இருக்கின்றது. இது ஒரு உலகப் பிரச்சினையாக இருப்பதால் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் நிறையவே இருக்கின்றது ஆனால் மக்களுடைய இன்றைய நிலவரத்தை பார்க்கின்ற பொழுது இந்த நோய் தாக்கத்தை விட மக்கள் மிகவும் அநாவசியமாக பீதியடைகின்றனர். மக்கள் கடைகளுக்குச் சென்று தங்களுடைய தேவைகளுக்கு அப்பால் பல பொருட்களை வாங்கி சேமிப்பதை வைத்து எந்தளவிற்கு இது அவர்களை அசம் கொள்ள வைத்துள்ளது என்பதை உணரமுடிகிறது.

சாதாரணமாக இந்த வைரசினுடைய தாக்கமும் அதனுடைய வீரியமும் வெயில் காலங்களில் ஈரப்பதம் கூடுவதால் இதன் பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட சில மாதத்திற்குள் இந்த வைரஸின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று நம்பப்படுகின்றது. அதனால் மக்கள் அதிகமாக பீதியடைந்து தங்களுடைய இயல்பு வாழ்க்கையை வாழாமல் இருக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றேன் அதனால் தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைத்துக் கொள் ளலாம் தேவையில்லாத அச்சம் என்பது எங்களுடைய வருத்தத்தை மனோ திடத்தை குறைத்து வருத்தத்தை மிகவும் தீவிரப்படுத்திவிடும்.

ஈழத்தில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது தொற்று நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு கையாண்ட நுட்பங்களை பற்றி கூறமுடியுமா?

இறுதி யுத்தத்தின்போது சிறிய ஒரு நிலப்பரப்பில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் மருத்துவ ரீதியாக குறைந்த ஆளணி, மற்றும் பவுதீக வளங்களைக் கொண்டு ஒருபுறம் தொற்று நோய்களை கட்டுப்படுத்த வேண்டிய, அதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட தாக்குதலின்போது காயப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காகவும் போராடவேண்டியிருந்தது.

உணவு தடை, மருந்துத்தடைகளுக்கு அப்பால் ஒரு சிறிய கிராமத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் வாழ்வுற்ற பொழுது தொற்றுநோய்க்கான நோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக வயிற்றோட்டம்,அம்மை நோய் போன்ற வருத்தங்கள் அந்த நாட்களில் பரவும் அபாயம் இருந்தது அதேநேரம் மலேரியா கிருமிகளும் இலங்கையில் வேறு சில இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் மிகவும் அதிகமாயிருந்த மலேரியா போன்ற தொற்று நோய்கள், விடுதலைப் புலிகளுடைய சுகாதார கட்டமைப்பு வளர்ச்சியடைந்த பின்பு அவர்களுடைய செயற்பாடு காரணமாக மிகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இந்த இறுதிக் காலப்பகுதியில் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்த விடயங்களில் தொற்று நோயை தடுப்பது ஒன்று. ஆனால் எங்களுடைய சுகாதார ஊழியர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தொண்டர்கள் என அனைவரினதும் கூட்டு முயற்சியாலும், வைத்தியகலாநிதி.சத்தியமூர்த்தி அவர்களின் மிகவும் சிறப்பான திட்டமிடல் மூலமும், மக்கள் செறிவாக வாழ்கின்ற பகுதிகளில் சென்று அவர்களுக்கு இந்த வருத்தங்களை பற்றி தடுப்பு முறைகளைப் பற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டும், அனைத்து கிணறுகளிலும் நீரை சுத்திகரிக்கும் குளோரினை போட்டு அதை நாங்கள் சிரமமாக கண்காணித்து வந்திருக்கின்றோம்.. அதேநேரம் தொற்று நோய்கள் ஏற்பட்டவுடன் அவர்களுக்கான சிகி ச்சையை முடிந்தளவு வழங்கி மக்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கின்றோம். இறுதியுத்த காலத்தில் கூட சுகாதாரத் திணைக்களத்துடன் கதைத்து நாங்கள் சிறுவர்களுக்கான தடுப் பூசிகளை போட்டுக்கொண்டிருந்தோம். அந்தககாலப்பகுதியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்காத்த அனைவருக்கும் இன்றைக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

ஜெனிவா தீர்மானத்திலிருந்து சிறீலங்கா அரசு வெளியேறியதை எவ்வாறு பார்கிறீர்கள். இந்த விடயத்தில் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இனிமேல் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசானது பல தசாப்தங்களாகவே நீதிக்குப் புறம்பாக தனது அரசியல் நாடகங்களை தமிழ் மக்களை நோக்கி அரங்கேற்றிவந்தது. இந்த அடிப்படையிலேயே தற்போது ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்களோடு சேர்த்து சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றியுள்ளது. தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தந்தை செல்வா தொடக்கம் பல அரசியல் தலைமைகள் முயற்சிகளை மேற்கொண்டபோது இலங்கையின் ஆட்சியாளர்கள் காலத்தை இழுத் தடிப்பதையும் தமிழர்களோடு செய்த ஒப்பந்தங்களை கிழித்தெ றிந்தமையுமே வரலாறாக இருந்தது.

இந்த விடயத்தில் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்தர கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண் டாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் விடயத்தில் மட்டும் இரண்டு கட்சிகளும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். இதன் நீட்சி தான் தற்போதும் வெவ்வேறு பெயர்களில் கட்சிகளை தொடங்கி தமிழ் மக்களுக்கு எதிரான கொள்களை முன்நிறுத்தி வருகின்றனர்.

2009 போர் நடந்து 11 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுப்படுகொலைகள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து தேவைக்கு அதிகமான சாட்சியங்கள் சர்வதேச நாடுகளிடமும் மனித உரிமை அமைப்புக்களிடமும் உள்ளது இவ்வாறு இருந்தும் கூட ஐ.நா மனித உரிமை சபையானது இலங்கை மீது ஒரு காத்திரமான நடவடிக கையை முன்னெடுக்கவில்லை தமிழ் மக்கள் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் முன் வைக்கும் ஒற்றை கோரிக்கை இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இனப்படு கொலைக்கும்,போர்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை மூலம் நியாயமான தீர்ப்பு விரைந்து வழங்கவேண்டும் என்பதேயாகும்.

தற்போது ஆட்சியாளர்களுக்கு தெரியும் இலங்கை மிது ஒரு நியாயமான சர்வதேச விசாரணை இடம்பெற்றால்; தாங்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவோம் என்பது நூறு வீதம் அவர்களுக்கு தெரியும் இதனைக் கருத்தில் கொண்டு தான் ஆட்சியாளர்கள் காலத்தை இழுத்தடித்ததோடு தற்போது தீர்மானத்திலிருந்தும் வெளியேறியுள்ளார்கள்.

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிப்பதில் உலக நாடுகளும் ஒருவித அசமந்தபோக்குடன் அக்கறையின்றி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதும் பொறுப்புக் கூறும் நிலையிலிருந்து இலங்கை தன்னை தற்காத்துக் கொள்வதற்கு வசதியாகிவிட்டது. இதுவே அனைத்துலக சமூகத்தின் முன் ஏற்றுக்கொண்ட nஐனிவா தீர்மானத்திலிருந்தும் வெளியேறும் துணிச்சலையும் வழங்கியுள்ளது.எனவே இனியும் சர்வதேச சமூகம் காலத்தை இழுத்தடிக்காமல் இலங்கையை சர்வதேச விசாரணை என்ற வளையத்திற்குள் கொண்டு வந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையே நீதிக்காக ஏங்கும் மக்களின் சார்பில் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More