“ஈழத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு என்பது புதிய விஷமல்ல. தனிமைப்படுத்தலும் புதிய விஷமல்ல. முப்பது வருஷங்களாய் ஊரடங்கில் வாழ்ந்தவர்கள் நாம். காரணமின்றி சிறைவைப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்த ஊரடங்கில் வெறித்துப்போன நகரத்தில் ஊடகப் பணிக்காக செல்லும்போது போர்க்காலம்தான் நினைவுக்கு வருகிறது.
கடுமையாக சண்டை நடந்த சமயத்தில், யாழ்ப்பாணத் தெருக்களில் நாயை சுடுவதைப் போல மனிதர்களை சுட்டுப் போட்டிருக்கும் பொழுதுகளிலும், நான் உலாவியிருக்கிறேன். ஊடரங்கு வாழ்வில் இராணுவ துப்பாக்கிகளின் குறிகளுக்குள் ஒரு கிண்ணம் தேநீருக்கு அலைந்திருக்கிறேன். அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றது. ஈழத்தவர் எவருக்கும் வரக்கூடிய நினைவுதான்.
ஒருமுறை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற போது திடீரென யுத்தம் தொடங்கிவிட்டது. 45 நாட்கள் தொடர்ச்சியான ஊரடங்கு. இரு பகுதிகளுக்கும் இடையிலான தரைவழிப்பாதை மூடப்பட, 45 நாட்களின் பின்னர் வீட்டுக்கு வந்தேன். எனக்கு என்ன ஆனது? என்று அம்மாவுக்கு சில நாட்களாக எதுவுமே தெரியாது. அப்படியொரு சமயத்தில்தான் யாழ் நகரம் என்ற கவிதையை எழுதினேன்.
போர்க்காலத்தில் ஊரடங்கு கொடிய வாழ்வை எழுத்தாலும் வாசிப்பாலும் கடந்தேன். ஆனால் இப்போதைய சூழலில் பெரிதாக எழுதவோ, வாசிக்கவோ முடியாதபடி இருக்கிறது. என்றாலும் புதிதாக வரவிருக்கும் ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என் கவிதை தொகுப்பையும் பயங்கரவாதி என்ற புதிய நாவலையும் செம்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சில சிறுகதைகளையும் எழுதியபடி இக் காலத்தை கடக்கிறேன். எப்படியேனும் நம்மை முடக்கி இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.”
நன்றி- ஆனந்த விகடன்