நிவாரணம் அமைப்பின் வாயிலாக தாயக உறவுகளின் நோய் தீர்த்து உயிர் காக்க ஒரு பாடகனாகவும் தன் குரலால் உழைக்கிறார் செந்தில்குமரன். கனடா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் செந்தில்குமரன், தாயகத்தில் இருதயநோய் போன்ற பல வகையான நோய்களினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியை முன்னெடுத்துள்ளார். அத்துடன் கல்வி, இடர்கால உதவிகள் போன்ற பலதரப்பட்ட பணிகளையும் தனது நிறுவனமான நிவாரணம் அமைப்பின் ஊடாக முன்னெடுத்து வரும் செந்தில் குமரன் தனது பிறந்த நாளில் வணக்கம் லண்டனுடன் பகிர்ந்துகொண்ட உணர்வுகள்.
உங்கள் பயணம் எப்படித் துவங்கியது?
18 வயதில் கனடா வந்த நான் இங்கு முதலில் கோப்பை கழுவும் வேலையை செய்து வாழ்க்கையை தொடங்கினேன். இரண்டு வேலைகள் செய்து கொண்டு உயர்நிலை பள்ளிக்கூடம் சென்று Grade 13 முடித்து, பின் York University யில் BA Economics பட்டம் பெற்றேன். அதன் பின் விளம்பரத்துறையில் வேலை. 1997 முதல் 2009 வரை ஒரு நிறுவனத்திலும், பின் 2010 முதல் இன்று வரை இன்னொரு நிறுவனத்திலும் எனது விளம்பர பயணம் தொடர்கிறது. இப்போது இந்த நிறுவனத்தில் பங்காளியாக மாற்றியுள்ளேன்.கனடாவின் மூன்று மாகாணங்களுக்கு சென்று தொழில் புரிகிறேன்.
கலை பயணம் (பாடகன் / நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்)
சிறு வயதிலிருந்தே பாட விருப்பம். குளியரை பாடகனாக தொடங்கி படி படியாக வளர்த்து வருகிறேன். இசையும் – சமூக சேவையும் என் இரு கண்கள். கலையம்சம் – பிரமாண்டம் இரண்டையும் கலந்து மின்னல் என்னும் கலை நிகழ்வினை பல முறை கனடாவில் மேடை ஏற்றியிருக்கிறேன். 2016 ஆண்டு தொடக்கம் YouTube இல் மின்னல் ம்யூசிக் என்ற சேனலில் என் பாடல்களை தயாரித்து வெளியிட்டு கொண்டிருக்கிறேன்.
அதனை விட எனது நிவாரணம் என்னும் இசை நிகழ்வினை தாயகத்தில் அல்லல்படும் நோயாளிகளுக்காகவும் – வறுமையில் வாடும் குடும்பங்களுக்காகவும் நடாத்தி, அதன் மூலம் பெறப்படும் 100% தொகையினை அங்கு அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். நிகழ்ச்சி நடத்தும் செலவு மற்றும் அங்கு நிவாரண அமைப்பின் பணியாளர்களின் சம்பளம் என்று எல்லாமே நானும் துணைவியாரும் பொறுப்பேற்று கொண்டு வருகிறோம். இதுவரை 80 இருக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
இசைமீதான ஆர்வம் எப்படிப் பிறந்தது?
சிறு வயதில் மிருதங்கம் பயின்ற எனக்கு, பாடுவதிலும் அதிக ஆர்வம். 1999 ஆண்டு தொடக்கம் KeyBirds என்ற இசைக்குழுவில் மேடை பாடகனாக கனடாவில் அறிமுகமானேன். பின் 2003 ஆம் ஆண்டு தொடக்கம், “மின்னல்” என்னும் தமிழக – கனடிய கலைஞர்கள் பங்கு கொள்ளும் இசை நிகழ்வினை தயாரித்து வழங்கி வருகிறேன். இதனோடு நில்லாமல், கடந்த ஐந்து வருடங்களாக எம் படைப்புகள் உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்ற அவாவில் “Minnal Music” என்ற YouTube அலைவரிசையில் அவற்றை வெளியிட்டு வருகிறேன்.
சமூகப் பணியின் அவசியம் பற்றிய உங்கள் உணர்வு?
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதனை ஆணித்தரமாக நம்புபவன் நான். அவ்வகையில் 2004 வரை பல நிகழ்ச்சிகளில் பாடி அதில் எனக்கு பாடகனாக கிடைத்த முழு பணத்தையும், தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் ஏழை தாயின் மாதாந்த செலவிற்கு அனுப்பி கொண்டிருந்தேன். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமியின் கடும் தாக்கத்தில், மனிதகுலம் சந்தித்த பேரழிவினை ஒளிப்பதிவுகள் மூலம் கண்டு கலங்கினேன். என்னால் முடிந்த உதவியினை ஆண்டுதோறும் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து நிவாரணம் என்னும் பெயர் சூட்டப்பட்ட இசைநிகழ்வினை ஆண்டுதோறும் செய்ய தொடங்கினேன். அதிலும் நிதி விவரங்கள் – பயனாளிகளின் முழு விவரங்களையும் பொது வெளியில் சமர்ப்பித்து செய்வதினால், புலம் பேர் மக்கள் பெரும் ஒத்துழைப்பினை அன்றிலிருந்து இன்றுவரை வழங்கி வருகின்றனர்.
நிவாரணம் அமைப்பு வாயிலாக செந்தில் குமரன் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சிலவற்றின் பதிவுகள்
நேர்காணல் மற்றும் தொகுப்பு வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்