“தமிழ்க் கட்சிகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆனால், தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளனர். வடக்கு விஜயத்தின்போது இதனை நான் புரிந்துகொண்டேன். எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதேவேளை, அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இணைந்து பயணிக்குமாறு எதிரணியில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுகின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
“நாட்டின் சகல துறைகளிலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இந்த அபிவிருத்தியில் தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்க வேண்டும். இன, மத, மொழி வேறுபாடின்றி அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் அரசியல் தீர்வுக்கான பயணமும் தடையின்றி தொடரும்” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை வடக்குக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளார். வடக்கு விஜயத்தின்போது அவர், அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இந்நிலையில், வடக்கு விஜயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.