நவம் என்றால், ஒன்பது என்று பொருள். ஒன்பது இரவுகள் அம்பிகையை, பல வடிவங்களில் பூஜை செய்து, அவளின் அருளைப் பெற்று, 10ம் நாள் வெற்றித் திருநாளாக அதாவது, விஜயதசமியாக கொண்டாடுவர்.
புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்மனுடைய கோரைப் பற்கள் எனவும், ஜீவ ராசிகள் அவற்றில் கடிபடாமல் இருக்க, நவராத்திரி பூஜையை மேற்கொள்ள வேண்டும் என்று, ‘அக்கினி புராணம்’ கூறுகிறது.
முதலில், பார்வதி தேவியாக மூன்று நாட்களும், லட்சுமி தேவியாக மூன்று நாட்களும், சரஸ்வதி தேவியாக, மூன்று நாட்களும் வழிபட்டு, பத்தாம் நாள். அனைத்து அம்சங்களும் பொருந்திய மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகின்றனர்.
பணி நிமித்தமாக, நவராத்திரி பூஜையை செய்ய முடியாத பெண்கள், ஒன்பது நாட்களில் கடைசியாக வரும், சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்து, பூரண நற்பலன்களைப் பெறலாம்.
இதுவும் முடியாத செயல் என்றால், நவமி அன்று ஒருநாள், சரஸ்வதி பூஜையுடன் வழிபாடு செய்து விடலாம். இப்படிச் செய்வதால் வாழ்வில் தன வளமும், தேவி தரிசனமும் கிடைக்கும்.