தீர்க்க சுமங்கலியாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லாப் பெண்களின் பிரார்த்தனையும் ஆசையும். திருமணமான பெண் நமஸ்கரிக்கும்போது, பெரியவர்கள், ‘தீர்க்கசுமங்கலியா இரும்மா’ என்றுதான் வாழ்த்துவார்கள். அப்படியொரு ஆசியையும் அருளையும் தருகிற விரதமாகத் திகழ்வதுதான் கேதார கெளரி விரதம். திருமண பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலியைப் பலப்படுத்துகிற விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம், தம்பதிகளுகுள் கருத்து வேற்றுமையை அகற்றித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை விவரித்துச் சிலாகிக்கிறார் பாஸ்கர குருக்கள்.
பிருங்கி முனிவர் மிகுந்த சிவபக்தர். சதாசர்வ காலமும் சிவலிங்க பூஜை செய்வதில் அப்படியொரு விருப்பம் கொண்டவர். தன் கணவரை இப்படி நெக்குருகி பூஜித்து வருகிறார்களே என்று ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ‘சக்தியாகிய நம்மை வழிபடவில்லையே முனிவர்’ என்று ரொம்பவே ஆதங்கப்பட்டாள் உமையவள்! ’சிவம் வேறு சக்தி வேறு அல்ல’ என்பதை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பினாள். பூவுலகுக்கு வந்தாள். கௌதம மகரிஷி ஆஸ்ரமத்தை அடைந்தாள். தனது விருப்பத்தை நிறைவேற்ற கௌதமரிடம் அறிவுரையும் ஆலோசனையும் கேட்டாள். அவளுக்கு அருமையான விரதபூஜை ஒன்றை உபதேசித்தார் கௌதம மகரிஷி.
அதன்படி, தேவியானவள், சிரத்தையுடன் விரத பூஜையைக் கடைப்பிடித்தாள். நித்திய அனுஷ்டானம் இருந்தாள். பூஜையில் லயித்தாள். சதாசிவத்தையே நினைத்து பூஜித்திருந்தாள். இதில் மகிழ்ந்த ஈசன், பூவுலகத்துக்கு வந்து இறங்கினார். அவளுக்குத் திருக்காட்சி தந்தார். ’நீ வேறு நான் வேறு அல்ல’ என்று தன் திருமேனியில் இடபாகம் தந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார்.
உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம் என்றும் கேதார கௌரி விரதம் என்றும் விவரிக்கிறது புராணம். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது.
இந்த விரதம் குறித்து பவிஷ்யோத்ர புராணத்தில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது என்கிறார் பாஸ்கர குருக்கள்.
இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள்.
புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்தநாளில்தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள். கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும்.