உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனேரியோவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக் கோப்பை சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இளவேனில் வளரிவான் .
10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் 251.7 புள்ளிகள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக பிரிட்டனைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் 250.6 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் 229.9 புள்ளிகள் எடுத்து மூன்றாமிடம் பிடித்தார் .
72 நாடுகளில் இருந்து 541 பேர் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
யார் இந்த இளவேனில் வளரிவான் ?
- ஐஎஸ்எஸ்எஃப் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவுக்காக ரியோ உலகக்கோப்பையில் பங்கேற்ற இளவேனில் தமிழகத்தில் பிறந்தவர்.
- 20 வயதாகும் இப்பெண் குஜராத்தில் தற்போது வசித்து வருகிறார்.
- கடந்த ஐந்து ஆண்டுகளாக துப்பாக்கிச்சுடுதலில் பங்கேற்று வருகிறார்.
- கடந்த ஆண்டு நடந்த ஜுனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முதல்முறையாக பங்கேற்ற இளவேனில் தங்கம் வென்றார்.
- தற்போது சீனியர் பிரிவிலும் முதல்முறையாக உலகக்கோப்பைத் தொடரில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நன்றி -பிபிசி