தனது அணியின் வீரர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயற்பட ஆர்வமாக உள்ளனர் என தென்னாபிரிக்க கிரிக்கெட் அணித் தலைவர் குயின்டன் டிகொக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தென்னாபிரிக்க மண்ணில் ஆசிய அணியொன்று டெஸ்ட் தொடரை வெற்றி கொள்வது இதுவே முதற் தடவையாகும்.
இந் நிலையில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே குயின்டன் டிகொக் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையுடன் கடந்த ஆண்டு தோல்வியடைந்த தென்னாபிரிக்க அணிக் குழுவில் நானும் டுப்ளெஸிஸும் இத் தொடரில் உள்ளோம். இந்த தொடரை நாங்கள் பயன்படுத்தி அடைந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
18 மாதங்களுக்குப் பிறகு இரு நாடுகளும் சந்திக்கும் தொடரின் முதல் போட்டி, அடுத்த சனிக்கிழமை செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டியில் நாங்கள் புத்திசாலித்தனமாகவும் ஆக்ரோஷமாகவும் செயற்பட வேண்டும். அப்போதுதான் நாம் போட்டியில் முன்னேற முடியும்.
நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை நன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறோம். ஆனால் இந்த முறை எதிரணியை விட ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று நம்புகிறோம். முந்தைய போட்டிகளில், எதிரணி (இலங்கை) எங்களுக்கு முன் ஆக்ரோஷமாக இருந்தது. அதனால்தான் அவர்கள் வெற்றி பெற்றனர்.
நாங்கள் அனைவரும் டெஸ்ட் களத்தில் நுழைவதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த ஆண்டு நாங்கள் டி 20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறோம்.
டெஸ்ட் களத்தில் வேறு வடிவத்தில் நுழைய முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வீரர்கள் போட்டிகள் இல்லாமல் தவிப்பில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 26 -30 வரை செஞ்சுரியனிலும், இரண்டாவது போட்டி 2021 ஜனவரி 03 – 07 வரை ஜோகன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.