செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது

3 minutes read

இண்டியன் பிறீமியர் லீக் 15ஆவது அத்தியாயத்தில் அறிமுக அணிகளில் ஒன்றாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் முயற்சியிலேயே சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது.

உலகின் மிகவும் பிரமாண்டமான அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு 11.20 மணியளவில் நிறைவடைந்த இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டு குஜராத் டைட்டன்ஸ் சம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது.

அத்துடன் இலங்கை நாணயப்படி 91 கோடி ரூபா பணப்பரிசையும் குஜாராத் டைட்டன்ஸ் தனதாக்கிக்கொண்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கு 59 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்தது.

அங்குரார்ப்பண ஐபிஎல் அத்தியாயத்தில் (2008) சம்பியனான பின்னர் 14 வருடங்கள் கழித்து முதல் தடவையாக இறதிப் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 131 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் சகலதுறை ஆட்டம், ஷுப்மான் கில், டேவிட் மில்லர் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் என்பன 15ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குஜராத் டைட்டன்ஸ் சம்பியன் பட்டத்தை சூடுவதற்கு பெரிதும் உதவின.

மேலும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3ஆவது தடவையாக ராஜஸ்தான் றோயல்ஸை குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகொண்டது விசேட அம்சமாகும்.

ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா (5) 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்ததும் குஜராத் டைட்டன்ஸ் சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தபோது 5 ஆவது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் மெத்யூ வெட் (8) வெளியேறினார்.

எனினும் ஷுப்மான் கில், ஹார்திக் பாண்டியா (34) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஹார்திக் பாண்டியா ஆட்டமிழந்த பின்னர் ஷுப்மான் கில்லும் டேவிட் மில்லரும் வீழ்த்தப்படாத 4ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜாரத் டைட்டன்ஸ் சம்பியனாவதை உறுதசெய்தனர்.

ஷுப்மான் கில் 45 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ராஜஸ்தான் றோயல்ஸ் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ராஜஸ்தான் றோயல்ஸ் துடுப்பாட்டத்தில் எவரும் கணிசமான ஓட்டங்கள் பெறாதது அணியின் விழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

இந்த ஐபிஎல் பருவகாலத்தில் துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி அதி கூடிய 863 மொத்த ஓட்டங்களைக் குவித்த ஜொஸ் பட்லர், இன்றைய போட்டியில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (22), ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 31 ஓட்டங்களே ராஜஸ்தான் றோயல்ஸ் இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

யஷஸ்வி ஜய்ஸ்வால் முதலாவதாக ஆட்டமிழந்த பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய ஐபிஎல் இறுதிப் போட்டி வரலாற்றில் ராஜஸ்தான் றோயல்ஸ் 2ஆவது மிகக்குறைந்த மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

அவர்கள் இருவரைவிட சஞ்சு செம்சன் (14), பின்வரிசையில் ரியான் பரக் (15), ஷிம்ரன் ஹெட்மயர் (11), ட்ரென்ட் போல்ட் (11) ஆகியோர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காதது ராஜஸ்தான் றோயல்ஸின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கிண்ணஸ் சாதனை

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டிக்கு முன்பதாக கண்கவர் முடிவுவிழா வைபவம் நடைபெற்றது.

இதன்போது மிகவும் நீளமான வெள்ளை நிற ரீ ஷேர்ட் ஒன்றை உருவாக்கி காட்சிப்படுத்தி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கிண்ணஸ் சாதனை ஒன்றை நிலைநாட்டியது.

ஐபிஎல்லில் 15 வருடங்கள் என்ற வாக்கியமும் 10 அணிகளின் சின்னங்களும் 66 மீற்றர் நீளத்தையும் 42 மீற்றர் அகலத்தையும் கொண்ட ரீ ஷேர்ட்டில் பொறிக்கப்பட்டிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More