19 வயதுக்குட்பட்ட இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமப்படுத்தப்பட்டுள்ளது.
செல்ஸ்போர்டில் நடைபெற்ற முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, தொடரில் 1 – 0 என முன்னிலை அடைந்திருந்தது.
ஆனால், ஹோவ், கவுன்டி மைதானத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற 2ஆவது பகலிரவு போட்டியில் 30 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து தொடரை 1 – 1 என சம்படுத்தியுள்ளது.
ப்ரெடி மெக்கான் குவித்த அதிரடி சதம், லூக் பென்கென்ஸ்டீன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 360 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி கேஷன பொன்சேகா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
ஆனால், மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ரெடி மெக்கான் 139 பந்துகளில் 22 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 174 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.
அத்தடன் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களிலும் அவர் பங்காற்றியிருந்தார்.
2ஆவது விக்கெட்டில் நோவா தய்னுடன் 127 ஓட்டங்களைப் பகிர்ந்த மெக்கான், 3ஆவது விக்கெட்டில் சார்ளி அலிசனுடன் மேலும் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியைப் பலப்படுத்தினார்.
நோவா தய்ன் 66 ஓட்டங்களையும் சார்ளி அலிசன் 46 ஓட்டங்களையும் டொமினிக் கெலி ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அணித் தலைவர் டினுர களுபஹன 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் துமிந்து செவ்மின 91 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
361 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இலங்கை அணியில் இருவரைத் தவிர மற்றைய 9 வீரர்களும் துடுப்பாட்டத்தில் தம்மாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி இங்கிலாந்துக்கு சோதனையைக் கொடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் புலிந்து பெரேரா (64), கயன வீரசிங்க (57), ப்ரவீன் மனீஷ (38), ஹிவின் கெனுல (30), சண்முகநாதன் ஷாருஜன் (25), விஹாஸ் தெவ்மிக்க (24 ஆ.இ.), தினர அபேவிச்ரமசிங்க (22) ஆகியோர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் லூக் பென்கென்ஸ்டீன் 77 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தஸீம் சௌத்ரி அலி 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொமினிக் கெலி 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசி இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.