மூத்த எழுத்தாளர் முருகபூபதி நீண்ட நாட்களாக இலக்கியத் துறையில் ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் ஓர் ஊடகவியலாளராகவும் பன்முக ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவர் தனது படைப்புகளுக்காக பல விருதுகளும் பரிசில்களும் கௌரவங்களும் பெற்றிருப்பவர். இன்று வரை தனது இலக்கிய பாதையில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும் இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் எமது இலங்கையில், இந்திய வம்சாவளி மக்களை ‘கள்ளத்தோணி’என்று ஏளனம் செய்தவர்கள் இருந்தார்கள். நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு காட்சியில் இப்படி ஒரு வசனம் வந்ததாக, மேமன் கவியின் ‘யுகராகங்கள்’ வெளியீட்டு விழாவுக்காக யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவியில் பயணித்தபோது எம்முடன் கிளிநொச்சி வரையில் வந்த நண்பர் ‘கோமாளிகள்’ ராமதாஸ் தெரிவித்தார்.
அந்த நாடகத்தை நான் பார்த்திருக்கவில்லை. காரணம் நான் வசித்த ஊர் நீர்கொழும்பு. கொழும்பில்தான் அந்த நாடகம் மேடையேறியது.
மாத்தளை கார்த்திகேசுவின் வசனம் இதுதான்: “என்னை கள்ளத்தோணி…கள்ளத்தோணி எண்டு சொல்றாங்க…நான் கடலையே பார்த்ததில்லீங்க”
உண்மைதான்! மலையத்தில் அக்காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கடலைப்பார்க்கவேண்டுமானால், தென்னிலங்கை பக்கம்தான் வரவேண்டும். ஆனால், அவர்களின் மூதாதையர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாரால் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக அழைத்துவரப்பட்டவர்கள்..
காலம் சுழன்றது.
இலங்கையிலிருந்து ஏராளமானவர்கள் மலேசியாவந்து படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக வந்து குவிந்தார்கள்.
அவ்வாறு இலங்கையில் உக்கிரமடைந்த போரையடுத்து அவுஸ்திரேலியாவுக்குள் உயிர்வாழ வந்த மக்களின் கதைதான் எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம். இந்நாவல் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.
கங்காரு தேசத்திற்கு படகுகளில் வந்த மக்களை கள்ளத்தோணி என்று சொல்லாமல் Boat People என்று நாகரீகமாக இங்குள்ள வெள்ளை இனத்தவர்களும் இந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வாசிப்பவர்களும் அழைக்கின்றனர்.
எனது அப்பாவும் ஒரு காலத்தில் அதாவது 1940 களில் தமிழ்நாடு பாளையங்கோட்டையிலிருந்து சில நண்பர்களுடன் ‘கள்ளத்தோணி’ ஏறித்தான் புத்தளம் கற்பிட்டியில் கரையொதுங்கியவர்.
அதன்பிறகு அப்பா தனது தாயகத்துக்கு திரும்பாமலேயே 1983 இல் மறைந்தார். அவர் இலங்கையில் ஒரு சிங்களப்பெண்ணை மணந்துவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்களாம்.
“பாரதியார் செய்த புண்ணியம்தான் “என்று அப்பா சொன்னார். அந்த மகாகவிதானே தமிழக மக்களுக்கு இலங்கையை சிங்களத்தீவு என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.
அப்பாவின் மறைவுக்குப்பின்னர் 1984 இல் முதல் தடவையாக தமிழகம் சென்று அப்பாவின் உறவினர்களையெல்லாம் தேடிக்கண்டுபிடித்தபொழுது ஒருவர், “ உங்கம்மா தமிழ் பேசுவாங்களா?”- என்று கேட்டாரே பாருங்க.
இத்தனைக்கும் அந்த உறவினர் எனது அப்பாவின் அண்ணன் மகனின் பிள்ளை. பட்டதாரி மாணவர். அப்போது சென்னையில் படித்துக்கொண்டிருந்தார்.
அமெரிக்காவையும் கியூபாவையும் அவுஸ்திரேலியாவையும் கண்டு பிடித்தவர்களும் படகுகளில் வந்தவர்கள்தான்.
இந்தியாவிலிருந்து தனது தோழர்களுடன் இலங்கை வந்த விஜயனும் படகில்தான் பயணித்தான். கடலோடிகள் கண்டுபிடித்த நாடுகள்தான் அநேகம்.
சுமார் 233 ஆண்டுகளுக்கு முன்னர் கப்டன் குக் என்பவர் படகொன்றில்வந்து கண்டு பிடித்த கண்டம்தான் இந்த அவுஸ்திரேலியா. இங்கிலாந்திலிருந்து குற்றவாளிகளை படகில் ஏற்றிவந்து இறக்கும் தேசமாக இருந்த இந்த கங்காரு நாடு, பல்தேசிய கலாசார நாடாக மாறிவிட்டது.
கடந்தகாலங்களில் ஏராளமான படகுகள் அவுஸ்திரேலிய கடல் பிராந்தியத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து அரசுக்கு பெரிய தலையிடியாகிவிட்டது.
உலகை அச்சுறுத்தும் செய்திகளுக்கு முன்னர் இங்கிருக்கும் அனைத்து ஊடகங்களிலும் மிக முக்கிய செய்தியாகியதுதான் இந்த படகு மக்கள் விவகாரம்.
இந்தோனேஷியாவுக்கும் இது ஒரு பாரிய பிரச்சினையாகியிருந்தது.
அவுஸ்திரேலியா பாராளுமன்றத்தில் இந்த அகதிகள் விவகாரம் வாதப்பிரதிவாதமாகியது.
அத்துமீறி வரும் படகுகளை தடுத்து நிறுத்தும் அவுஸ்திரேலிய கடற்படை, அதில் வருபவர்களை முன்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்று அங்குள்ள தடுப்பு முகாமில் வைத்திருந்து, பின்னர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி, சில தற்காலிக விசாக்களை வழங்கி, புதுப்பிக்கச்செய்து கொண்டிருக்கிறது.
பலர் நாடு கடத்தப்பட்ட செய்தியும் அறிவோம்.
சில வருடங்களுக்கு முன்னரும் இப்படித்தான் ஒரு படகில் சுமார் 83 இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வந்துவிட்டார்கள். அவர்களும் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டார்கள். நான் வசிக்கும் மெல்பனிலிருக்கும் சில மனித உரிமை அமைப்புகள், இங்குள்ள குடிவரவு திணைக்கள வாயிலில் ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டிற்குள் வருவதற்கு அரசு அனுமதிக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை. அதில் நானும் பல சிங்கள தமிழ் அன்பர்களும் கலந்துகொண்டோம்.
தடுத்துவைக்கப்பட்ட அந்த இளைஞர்களுக்காக தமிழ்த்திரைப்பட சி.டி.க்களும் தமிழ் பத்திரிகை, இதழ்கள், புத்தகங்களும் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஊடாக கொடுத்து அனுப்பினேன்.
அரசுக்கு பலதரப்பிலும் விடுக்கப்பட்ட அழுத்தத்தினால் அந்த இளைஞர்களுக்கு இந்த நாட்டுக்குள் வருவதற்கும் இந்த நாட்டு வதிவிட உரிமை கிடைப்பதற்கும் அனுமதி கிடைத்தது.
அவர்களில் சிலரைச்சந்தித்துமிருக்கின்றேன். நான் அங்கம் வகிக்கும் ஒரு மனித உரிமைகள் அமைப்பு சர்வதேச அகதிகள் வாரம் ஒன்றில் அந்த இளைஞர்களுக்காக, ஒரு வரவேற்பு இராப்போசன விருந்தையும் இசை நிகழ்ச்சியையும் ஒழுங்கு செய்தது. ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய இளைஞர்கள்தான் வந்தார்கள்.
வராதவர்கள் சொன்ன காரணம் “ நாம் இப்போது அகதிகள் இல்லை”
எனக்கு, ‘ஆறு கடக்கும் வரைதான் அண்ணன், தம்பி கதை’ தான் ஞாபகத்துக்கு வந்தது.
குறிப்பிட்ட 83 தமிழ் இளைஞர்களுக்கும் இந்த நாடு அகதி அந்தஸ்து கொடுத்து இங்கு வாழ்வதற்கும் அனுமதித்தபின்னர், ஆட்களை படகுகளில் கடத்தும் வியாபாரிகள் அதிகரித்தனர். அதற்கு 2009 இல் வன்னியில் நடந்த உக்கிரமான மோதலும் முக்கிய காரணமாகியது.
வருபவர்கள் மலேஷியா வந்து அங்கிருந்து படகேறுவதாக சொல்லப்பட்டது.
சில வருடங்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 260 பேரில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் தம்மை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்குமாறு கோரும் காட்சிகளை இங்குள்ள தொலைக்காட்சிகளில் பார்த்தபோது நெகிழ்ந்துபோனேன்.
அதிலும் ஒரு குழந்தை தெளிவான ஆங்கிலத்தில் பேசி கண்கலங்க வைத்துவிட்டது.
அவுஸ்திரேலியாவின் அன்றைய பிரதமர் இந்த படகு மக்களால் தமது அரசுக்கு பெரிய தலையிடி வரும் என்று முன்பே தெரிந்துதான், அதனைத்தடுப்பதற்காக அதிகாரிகளை இலங்கை அரசுடன் பேசுவதற்காக அனுப்பிவைத்தார்.
இலங்கை அரசு கடல் கண்காணிப்புகளை மேற்கொண்டு ஆள் கடத்தலில் ஈடுபடும் புள்ளிகளை பிடிப்பதாகவும் (நீர்கொழும்பு காலி மட்டக்களப்பு பிரதேசங்களில்) செய்திகள் வந்தன. ஆனால், படகுகள் வந்துகொண்டுதானிருந்தன.
ஒருவருக்கு 15 ஆயிரம் டொலர்கள் இந்த படகுப்பயணத்துக்கு தேவைப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அக்காலப்பகுதியில் ஒரு நாள் இரவு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
எனக்குத்தெரிந்த ஒரு பெண் யாழ்ப்பாணத்திலிருந்து பேசினார், நான் அவரை இறுதியாக குப்பிளானில்தான் சந்தித்திருக்கிறேன். அதுவும் 1983 ஆம் ஆண்டில்!
“அண்ணா நான் இன்னார் பேசுகிறேன். உங்கள் ஊருக்கு அருகிலா கிறிஸ்மஸ் தீவு இருக்கிறது?” என்று கேட்டார்.
“இல்லையே அது வேறு ஒரு தீவு. விமானத்தில் செல்லவே சுமார் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எடுக்கும். “என்றேன்.
“எனது மகனும் அங்கே வந்துவிட்டான். உங்களால் பார்க்க முடியுமா?”
“இல்லையம்மா. நாம் அங்கே செல்ல முடியாது. படகுகளில் வருபவர்களை தடுத்து வைத்து விசாரிக்கும் ஒரு தீவுதான் அது. உங்கள் மகனின் பெயரைத்தாருங்கள். அப்படி ஒருவர் அங்குவந்து சேர்ந்திருக்கிறாரா..? என்று இங்கிருந்து செல்லும் மொழிபெயர்ப்பாளர்கள் ஊடாக கேட்டு விசாரிக்கின்றேன்.” என்று சொல்லி விட்டு “அது சரி எனது தொலைபேசி இலக்கத்தை எங்கிருந்து பெற்றீர்கள் ? “ எனக்கேட்டேன்.
“உங்கட இலக்கத்தையா எடுக்க முடியாது? “ – எனச்சாதாரணமாகச்சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
அவர் குறிப்பிட்ட பெயரில் ஒரு இளைஞர் அங்கே இருப்பதாக பின்னர் தொடர்புகள் மூலம் அறிந்தேன்.
இவ்வளவு பணம் கொடுத்து ஏன் மக்கள் படகுகளில் உயிரைப்பணயம் வைத்து புறப்படுகிறார்கள்..? என்ற கலக்கமும் அப்போது வந்தது.
எங்கள் ஊர் நீர்கொழும்பில் கடற்கரையோரமாக புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக தெருவோரத்தில் ஒரு பெரிய விளம்பரப்பலகையை பார்த்தேன். அதில் பெருந்தொகைப்பணத்தைக்கொடுத்து உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்லவேண்டாம் என்று அச்சுறுத்தலும் எச்சரிக்கையும் விடுத்து தமிழ் – சிங்கள மொழிகளில் எழுதப்பட்டிருந்தன.
அங்கே ஒவ்வொரு தடவை செல்லும்போதும் சில பெற்றோர்கள் என்னைத் தேடி வந்து அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் வந்த தங்கள் பிள்ளைகள் பற்றி விசாரிப்பார்கள்.
“அவர்களுக்கு இங்கே வதிவிட அனுமதி கிடைக்குமா ..? “என்று, நான் ஏதோ குடிவரவு திணைக்களத்தில் வேலைசெய்கின்றேன் என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்கும்போது மிகுந்த கவலையாக இருக்கும்.
“உங்கள் பிள்ளைகளை நல்ல நண்பர்களுடன் பழகச்சொல்லுங்கள். படிக்கச்சொல்லுங்கள். முடிந்தவரையில் உழைத்து, அனுமதி கிடைக்காதுபோனால் வரச்சொல்லுங்கள். அவர்களை வைத்திருப்பதா..? திருப்பி அனுப்புவதா..? என்பதை அரசுதான் தீர்மானிக்கும். “என்று தேறுதல் சொல்வேன்.
எனது இயலாமையை வேறு எப்படித்தான் சொல்வது..!?
கொலம்பஸ், வாஸ்கொட காமா, கப்டன் குக் ஆகியோரும் இப்படித்தான் ஒரு காலத்தில் உயிரைப்பணயம் வைத்து கடல் கடந்து வந்து நாடுகளை கண்டு பிடித்தார்கள்.
நாம் வசிக்கும் விக்ரோரியா மாநிலத்தில் இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் தங்கம் அகழ்ந்த ஒரு பிரதேசம் இருக்கிறது. பலரட் என்ற பெயரில் இருக்கும் அந்த ஊரிலிருந்த தங்கச்சுரங்கம் (சவரின் ஹில்) அமைந்த இடத்தை உல்லாசப்பிரயாணத்துக்குரியதாக்கிவிட்டார்கள். 1887 ஆம் ஆண்டு காலத்தில் அந்த இடம் எப்படி இருந்ததோ அப்படியே வைத்து பராமரிக்கிறார்கள். நடை உடை பாவனை குதிரை வண்டி என்பன அங்கு செல்பவர்களை 18 ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச்செல்கிறது.
அங்கு ஒரு நாள் சென்றபோது அங்கிருந்தவர்கள், “எந்தப்படகில் வந்தீர்கள்?” என்று வேடிக்கையாக கேட்டார்கள்.
18 ஆம் நூற்றாண்டில் இந்த கடல்சூழ்ந்த கண்டத்துக்கு அந்நிய நாடுகளிலிருந்து மக்கள் படகுகளில்தான் வந்தார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் காரணங்கள்தான் வேறு.
இலங்கைத்தமிழர் விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாகியதுபோன்று, அவுஸ்திரேலியாவிலும் இந்த படகு மக்களின் விவகாரம் பேசுபொருளானது.
ஆயுதக்கடத்தல், போதை வஸ்து கடத்தல், கள்ளக்கடத்தல் என்றெல்லாம் கடந்த காலங்களில் அறிந்தோம். பின்னாளில் மனிதக்கடத்தல் பற்றி ஊடகங்கள் பதிவுசெய்தன.
தற்போது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை யார் யார் நாடுகளுக்குள் கடத்தினார்கள்..? என்பதையும் அதனால் பலியானவர்களின் எண்ணிக்கையையும் – தொற்றாளர் விபரத்தையும் ஊடகங்கள் புள்ளிவிபரத்துடன் வெளியிட்டு வருகின்றன.
இவ்வேளையில் இந்த நாட்டுக்குள் வந்து அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, விமானத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக அல்லல்படும் இளம் குடும்பம் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.
நடேசன் – பிரியா தம்பதியினரும் அவர்களுக்கு இங்கு பிறந்த குழந்தைகள் கோபிகா – தருணிகா ஆகியோருக்கு வழங்கப்பட்ட நாடுகடத்தல் உத்தரவுக்கு சமஷ்டி நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டிருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
“ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்கசொன்னால் முடவனுக்கு கோபம்“ என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.
கடலின் அக்கரை செல்பவர்களின் கனவுகள் கண்ணீரில் கலந்தவை. உப்புக்காற்றை சுவாசித்தவாறு வந்து ஜலசமாதியானவர்கள் பற்றிய கண்ணீர்க்கதைகளும் உண்டு.
மக்களுக்காகத்தான் அரசுகள். அரசுகள்தான் மக்களுக்கு சுபிட்சமான வாழ்வை வழங்கவேண்டும். வழங்காத பட்சத்தில் கடலின் அக்கரை நோக்கிய பயணங்கள் உயிரைப்பணயம் வைத்தும் படகுகளில் தொடரத்தான் செய்யும்.
அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் வதியும் ஈழத்தின் முன்னணி எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதியிருக்கும் 550 பக்கங்கள் கொண்ட உயிர்வாசம் நாவலை இந்த படகு மனிதர்களின் கதைகளின் பின்னணியில்தான் பார்க்கவேண்டும்.
– முருகபூபதி | அவுஸ்திரேலியா
letchumananm@gmail.com