திருமணத்தின் அடுத்தநாள் விசாலாட்சி அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வந்து, காலை உணவிற்காக கஞ்சியும், மத்தியானத்திற்கும், இரவிற்கும் கட்டு சாதமும் செய்ய ஆரம்பித்தாள். ஆறுமுகத்தையும் அவரை அணைத்தபடி படுத்திருந்த கணபதியையும் எழுப்பி குளித்து விட்டு வரச் சொன்னாள்.
ஆறுமுகம், கணபதியைக் குளிக்க வார்த்து, தானும் குளித்து விட்டு வந்தான். இருவருக்கும் சிரட்டைகளில் கஞ்சி வார்த்து குடிக்கச் செய்தாள். அப்போது கணபதியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் கிழவர், மாட்டு வண்டியில் வந்தார். அவருக்கும் கஞ்சி வார்த்துக் குடிக்கச் செய்து தானும் குடித்தாள். குடித்த பின் பாத்திரங்களை கழுவி அடுக்கினாள்.
ஆறுமுகமும் கிழவரும் விசாலாட்சி முதல் நாள் கட்டி வைத்த பொதிகளை வண்டியில் ஏற்றினார்கள். கணபதி சிறு பொதிகளை ஓடி ஓடி எடுத்துக் கொடுத்தான். விசாலாட்சி வீட்டை கூட்டி ஒழுங்குபடுத்தினாள்.
விசாலாட்சி வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்தாள். தானும் தம்பையரும் ஏழு ஆண்டுகள் குடித்தனம் செய்த வீடு. இனி இந்த வீட்டுக்கு வருவாளோ.. தெரியாது. வீட்டை அழிய விடுவதில்லை என்று தீர்மானித்திருந்தாள். தனது நெருங்கிய சினேகிதி ஒருத்தியை வீட்டை அடிக்கடி கூட்டுவதற்கும் மாதமொருமுறை மெழுகுவதற்கும் ஒழுங்கு செய்திருந்தாள். வேய்தல் போகத்திற்கு ஆறுமுகத்தாரை அனுப்பி வேயச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அவர்களை வழியனுப்ப உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அவர்கள் விசாலாட்சியிடம் “வன்னியில் பாம்புகள், கரடிகள், சிறுத்தைகள், யானைகள் இருக்குதாம். கவனமாக இருந்து கொள்” என்று உண்மையான கரிசனையுடன் கூறினார்கள்.
ஆண்கள் “ஆறுமுகம், தனியாக ஒரு பெண் பிள்ளையையும் சிறுவனையும் அழைத்துச் செல்கின்றாய். கவனமாக பார்த்துக் கொள்.” என்று சொன்னார்கள். விசாலாட்சி வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை வண்டியில் ஏற்றி விட்டு தானும் ஏறி அவனருகில் இருந்து கொண்டான். விசாலாட்சி திரும்பி ஒரு முறை வீட்டைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி விட்டன. மற்றவர்கள் அறியாது கைகளால் துடைத்துக் கொண்டாள். வண்டில் சலங்கைகள் ஒலியெழுப்ப வேகமாக ஓடத்தொடங்கியது.
விசாலாட்சி தங்கள் மூவரினதும் வாழ்க்கை எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற கவலையில் இருந்தாள். கணபதி மிகவும் மகிழ்ச்சியாக பயணம் செய்தான். ஆறுமுகம் நான்கு வருடங்கள் தனியாக கழிந்த வாழ்க்கையில் இப்போது கிடைத்த இந்த சுகமான சுமையை தான் பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
வண்டில் கச்சாய் துறையை அடைந்தது. செருக்கன் நண்பன் தோணியை கொண்டு வந்திருந்தார். விசாலாட்சி தோணியில் ஏறி முன் பக்கமாக இருந்து கொண்டாள். கணபதி தாயாரின் அருகே இருந்து கொண்டான். ஆறுமுகமும் கிழவரும் பொதிகளை வண்டிலால் இறக்கி, தோணியில் ஏற்றினார்கள். ஆறுமுகம், கிழவருக்கு நன்றி கூறி காசைக் கொடுத்தார். விசாலாட்சியும் கணபதியும் நன்றி கூறி அனுப்பினர்.
ஆறுமுகம் தோணியில் ஏறி கணபதியின் பக்கத்தில் இருந்தான். கணபதி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்து கொண்டான். செருக்கனுக்கு போக வந்தவர்களும் தோணியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் பெரிய பரந்தன் சென்று முதல் முதல் வாழப்போகும் பெண்ணை அதிசயமாக பார்த்தனர்.
தோணி ஓடத் தொடங்கியது. ‘ஆலா’ப் பறவைகள் தோணியைத் தொடர்ந்து பறந்து வந்தன. கணபதி அவற்றை அண்ணாந்து பார்த்தான். “கணபதி, தோணியுடன் பயணம் செய்யும் இவை ‘ஆலாக்கள் ‘ சிலர் இவற்றை ‘கடல் காகம்’ என்றும் கூறுவர்” என்று ஆறுமுகம் சொன்னார். சிறிது தூரம் செல்ல, மிகப் பெரிய பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன. அந்த பெரிய பறவைகள் மீன்களை பிடித்து அண்ணாந்து வாயை பெரிதாக திறந்து விழுங்கின.
கணபதிக்கு அது வேடிக்கையாக இருந்தது. ஆறுமுகம் “கணபதி, அந்த பெரிய பறவைகளின் பெயர் கூழைக்கடா” என்றார். இன்னும் சிறிது தூரம் செல்ல தூரத்தில் கூட்டமாக நீந்தும் பறவைகளை கணபதி கண்டான். அவை நீரில் மூழ்கி மீனைக் கவ்விக் கொண்டு மேலே வந்தன.
தோணி ஓட்டி “தம்பி, அவை ‘கடல் தாராக்கள்’. நாங்கள் வீட்டில் வளர்க்கும் தாராக்களை விட சிறியவை. அதனால் தான் அவை தூர இடங்களுக்கும் பறக்கின்றன” என்று கணபதிக்கு கூறினான். அப்போது அவர்களை விலத்திக்கொண்டு சுட்டதீவிலிருந்து புறப்பட்ட தோணி ஒன்று சென்றது. அந்த தோணியிலிருந்தவர்கள் ஆறுமுகத்தாரையும் குடும்பத்தவர்களையும் மகிழ்ச்சியுடன் நோக்கி கைகளை ஆட்டியபடி சென்றனர்.
தோணி சுட்டதீவு துறையை அடைந்தது. எல்லோரும் இறங்கினார்கள். 1910 ஆம் ஆண்டு விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக இக்கரையில் கால் பதித்தார்கள்.
முத்தர், தம்பையரின் எருத்து மாட்டு வண்டிலில் வந்திருந்தார். ஆறுமுகமும் முத்தரும் பொதிகளை இறக்கி வண்டிலில் ஏற்றினார்கள். எருதுகள் இரண்டையும் முத்தர் ஒரு மரத்தின் நிழலில் கட்டியிருந்தார். முத்தர் “ஆறுமுகம் முதல் முதல் விசாலாட்சியும் கணபதியும் வந்திருக்கின்றார்கள். கூட்டிச் சென்று கோவிலைச் சுற்றி கும்பிட்டு விட்டு வா.” என்றார்.
ஆறுமுகம், விசாலாட்சியையும் கணபதியையும் கோவில் பூவலுக்கு அழைத்துச் சென்று கை, கால், முகம் கழுவிக் கொள்ளச் செய்தார். தனது தோளில் இருந்த துண்டைக் கொடுத்து துடைக்கச் செய்தார். மூவரும் கோவிலைச் சுற்றி வந்து சேர, முத்தரும் வந்து சேர்ந்தார். முத்தர் தான் கொண்டு வந்த கற்பூரத்தை ஏற்றினார். நால்வரும் கண் மூடி கும்பிட்டனர். எல்லோரும் திருநீறு பூசி சந்தனப் பொட்டும் வைத்தனர். ஆறுமுகம் கணபதிக்கு திருநீறு பூசி ஒரு வட்ட வடிவ சந்தனப் பொட்டும் வைத்துவிட்டான்.
தாயும் மகனும் முத்தருக்கும் ஆறுமுகத்திற்கும் பின்னால், கடலையும் காட்டையும் ஆச்சரியமாகப் பார்த்தபடி நடந்து வண்டிலை அடைந்தனர். வெள்ளை நிற எருது நின்று கொண்டு அசை போட்டது. மயிலை படுத்திருந்து அசை போட்டது. முத்தர் எருதுகளை தடவி விட்டார். கணபதி ஓடிச்சென்று தானும் எருதுகளை தடவி விட்டான். “கணபதி, இந்த எருதுகளை உன்ரை ஐயா பார்த்து பார்த்து வளர்த்தவர்” என்று முத்தர் சொன்னார். கணபதி மயிலையின் தோளில் முகத்தை வைத்து அணைத்துக் கொண்டான்.
விசாலாட்சி வண்டிலின் முன் பக்கத்தில் ஏறி இருந்து கொண்டாள். ஆறுமுகம், கணபதியை ஏற்றி விட்டு தானும் பின்னால் ஏறி அமர்ந்தான். கணபதி தாயையும் தகப்பனையும் அணைத்தபடி அவர்கள் இருவருக்கும் நடுவில் இருந்தான். முத்தர் வண்டிலில் எருதுகளைப் பூட்டி விட்டு, முன்னால் ஏறி இருந்து வண்டிலை ஓட்டினார்.
வண்டில் காட்டின் நடுவே ஓடியது. வழியில் மயில்கள், மான்கள், மரைகள், குழுவன் மாடுகள் என்பன வண்டிலைக் கண்டு பயந்து சிறிது தூரம் ஓடி, பின் நின்று திரும்பி குறு குறுவென்னு பார்த்தன. “ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பெண்ணொருத்தி இந்த மண்ணில் வாழ வந்து விட்டாளே” என்று அவை பார்க்கின்றனவோ? என விசாலாட்சி எண்ணிக் கொண்டாள். குரங்குகள் அவர்களைக் கண்டதும் மரத்திற்கு மரம் தாவி ஏறின.
.
கணபதி,ஆறுமகத்திடமும் முத்தரிடமும் கேள்விகள் கேட்டபடி மகிழ்ச்சியுடன் பயணம் செய்தான். முத்தரும் ஆறுமுகமும் விலங்கியல் ஆசிரியர்களாக மாறி வழியில் கண்ட எல்லா மிருகங்களின் பெயர்கள்களையும் அவற்றின் இயல்புகளையும்
கணபதிக்கு கூறிக் கொண்டே வந்தனர். கணபதி வழியில் ஒரு பெரிய பாம்பைக் கண்டான். “அதன் பெயர் ‘வெங்கிணாந்தி’ என்றும், அது ஒரு சிறிய வகை மலைப் பாம்பு என்றும், அது ஆட்டுக் குட்டிகள், கோழிகள், மான் குட்டிகள, முயல்கள் என்பவற்றை உயிருடன் விழுங்கி விடும்” என்றும் முத்தர் கூறினார்.
வழியில் நீலனாற்றின் கிழையாறு ஒன்று குறுக்கிட்டது. வண்டில் ஆற்றில் இறங்கி மறு கரையில் ஏறியது. வண்டில் இறங்கி ஏறிய சத்தத்திற்கும் சலங்கைகளின் சத்தத்திற்கும் பயந்து, மறு கரையில் வெய்யில் காய்ந்து கொண்டிருந்த முதலை ஒன்று பாய்ந்தோடி ஆற்றுக்குள் குதித்தது. கணபதி பயந்து தாயை கட்டிப் பிடித்தான்.
வண்டில் குறிப்பம் புளியை அணுகியது. ஆறுமுகம், விசாலாட்சியிடமும் கணபதியிடமும் புளிக்கும் நீர் நிலைக்கும் இடைப்பட்ட வெளியைக் காட்டி “தம்பையர், நான், முத்தர், ஏனையவர்களுடன் முதல் முதல் தங்கியது இந்த வெளியில் தான்” என்று கூறினார். கணபதி புளியை அண்ணாந்து பார்த்து “எவ்வளவு உயரம்” என்று அதிசயப் பட்டான்.
கணபதி பசு மாடுகளை ஒத்த, சற்று பெரிய தோற்றமுள்ள சில மிருகங்கள் நீர் நிலையில் நின்றும், படுத்தபடியும் இவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தான். அந்த மிருகங்கள் எல்லாம் சேற்றில் புரண்டு எழுந்ததால் சேற்றின் நிறத்தில் இருந்தன. அவற்றை கணபதி ஆவலுடன் பார்ப்பதைக் கண்ட முத்தர் “அவை எருமை மாடுகள். சேற்றில் உழுவதற்கும், பிரதானமாக சூடு அடிப்பதற்கும் அவற்றை நாங்கள் பயன் படுத்துவோம்” என்று விளங்கப்படுத்தினார்.
வண்டில் ‘ தியாகர் வயலை’ அடைந்தது. விசாலாட்சியும் கணபதியும் முதல் முதலாக தியாகர் வயலில் இறங்கினர். எங்கிருந்தோ நான்கு நாய்கள் வால்களை ஆட்டியபடி ஓடி வந்து அவர்களின் கால்களை நக்கின. அந்த ஐந்தறிவு ஜீவன்களுக்கு அவர்கள் தான் தங்கள் புதிய எசமானர்கள் என்பது புரிந்து விட்டது போலும். பின்னர் கணபதி எங்கு சென்றாலும் அவை அவனுடனேயே திரிந்தன.
விசாலாட்சியும் கணபதியும் வீட்டையும் வளவையும் சுற்றிப் பார்த்தனர். மூன்று கொட்டில்களை கொண்ட தொகுதி. ஒரு பெரிய அறை, மண் குந்துகள் வைத்து, மேலே ஓலையால் அடைக்கப் பட்டிருந்தது. தனியாக ஒரு சிறிய சமையலறை. வருபவர்கள் தங்குவதற்காக ஒரு தலைவாசல். யாவும் அண்மையில் மெழுகப் பட்டிருந்தன. வளவு புற்கள் செருக்கப்பட்டு, துப்பரவாக கூட்டப்பட்டிருந்தது. இரண்டு புதிய பனையோலைப் பாய்கள் கழுவி காயப் போடப்பட்டிருந்தது.
விறகுகள் ஒரே அளவில் வெட்டி அடுக்கப்பட்டிருந்தன. ஒரு மண் குடத்திலும் ஒரு சருவக் குடத்திலும் நீர் நிறைத்து மூடப்பட்டிருந்தது. முத்தர் தனது தம்பிமாரின் உதவியுடன் யாவற்றையும் செய்துள்ளார் என்பதை விசாலாட்சி விளங்கிக் கொண்டாள். ஆறுமுகத்தார் பொதிகளை இறக்கி அறையினுள் வைத்தார். முத்தர் எருதுகளை அவிட்டு தண்ணீர் குடிக்க வைத்து கட்டினார். வண்டிலை அதற்குரிய கொட்டிலினுள்ளே தள்ளி நிறுத்தினார்.
விசாலாட்சி கணபதியை அழைத்துக் கொண்டு பூவலுக்கு போய் கணபதியையும் கை, கால், முகம் கழுவச் செய்து, தானும் கழுவி விட்டு வந்தாள். ஆறுமுகமும் முத்தரும் சுத்தம் செய்து வந்ததும் மூவருக்கும் கட்டுச்சோறு சாப்பிடக் கொடுத்து, தானும் சாப்பிட்டாள். நாய்களுக்கும் சாப்பாடு வைத்தாள்.
மாலை நேரம் வந்த போது தம்பிமார் முதலில் வந்தனர். பின்னர் ஏனைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்தனர். தம்பிமார் “அக்கா, நீங்கள் வருவதாக அறிந்ததும் நாங்கள், எங்கள் வீட்டிற்கு போய் விட்டோம். ஆனால் இரவில் இங்கு தான் வந்து படுப்போம். இனியும் உங்களுக்கு ஊர் பழகும் வரையும் இரவில் இங்கு வந்து, தலைவாசலில் படுத்து விட்டு செல்வோம் “என்றனர்.
விசாலாட்சிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. தம்பிமார் எந்த குறையும் இன்றி தங்களது வீட்டிற்கு போனது ஆறுதலாகவும் இருந்தது. வந்தவர்கள் யாவரும் கணபதியுடன் விளையாடினர். எல்லோருக்கும் தேனீர் ஆற்றி ஒவ்வொரு பனங்கட்டி துண்டுகளுடன் கொடுத்தாள். வந்தவர்கள் விடை பெற்றுச் சென்றனர். விசாலாட்சிக்கு அன்று இனி வேலை ஒன்றும் இல்லை.
இரவுச் சாப்பாட்டிற்கும் கட்டுச்சோறு இருந்தது. இரவும் வந்தது. எல்லோரும் சாப்பிட்ட பின்னர் படுக்கச் சென்றனர். கணபதிக்கு இனி பள்ளிக்கூடம் இல்லை. அவன் தன் வயது நண்பர்களுடன் இனி விளையாட முடியாது. ஆறுமுகத்தின் வழிகாட்டலும் புதிய மண்ணும் தான் அவனுக்கு அனுபவ அறிவை கொடுக்க வேண்டும். தானும் அவனது வளர்ச்சியில் கரிசனையுடன் இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் விசாலாட்சி நித்திரையானாள்.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/