Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 7 | பத்மநாபன் மகாலிங்கம்

8 minutes read

தம்பையர் திருமணம் செய்த போது வயது 19. விசாலாட்சிக்கு வயது 16. தம்பையர் இறந்த போது வயது 26. அப்போது விசாலாட்சிக்கு வயது 23. கணபதிப் பிள்ளைக்கு ஆறு வயது முடிந்து ஏழாவது வயது ஆரம்பம்.

தம்பையர் இறந்த பின்னர், விசாலாட்சியின் வாழ்க்கை எப்படி போகப் போகின்றது? என்றும், மிக இளம் வயதில் கணவனை இழந்த அவள், சிறு பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றாள்? என்றும் விசாலாட்சியின் உறவினர்களும், சினேகிதிகளும் கவலை கொண்டனர். தம்பையரின் ஆண்டுத் திவசம் முடியும் மட்டும் ஒருவரும் ஒன்றும் கதைக்கவில்லை.

ஓராண்டின் பின் சினேகிதிகள் மறுமணம் செய்வதைப் பற்றி, விசாலாட்சியுடன் கதைக்க ஆரம்பித்தனர். உறவினர்கள் சிலரும் அதைப் பற்றி கதைத்தனர். விசாலாட்சிக்கு தம்பையருடன் வாழ்ந்த போது அவரின் அன்பான செயல்கள், பெண்களை மதிக்கும் பண்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை, தானும் வாழ வேண்டும் மற்றவர்களையும் வாழ வழிகாட்டல்கள் வேண்டும் என்ற எண்ணம், எண்ணத்திலும் செயலிலும் காணப்பட்ட தூய்மை என்பவற்றை நினைக்கும் தோறும், வேறு ஒருவருடன் வாழும் நினைப்பு அறவே வரவில்லை.

காலம் ஓடியது. தம்பிமாரால் வயலை விதைத்து லாபம் பெற முடியவில்லை. முத்தரும் ஆறுமுகமும் தம்மால் ஆன சிறு சிறு உதவிகளைச் செய்து கொண்டிருந்தனர். முத்தர், பூனகரியில் மொட்டைக் கறுப்பன் நெல் வாங்கி ஊருக்கு கொண்டு வருவார். அவர் மனைவி அதனை அவித்துக் குத்தி, கைக்குத்தரிசியென்று விசாலாட்சிக்கு அனுப்பி வைப்பாள்.

முத்தர் வரும் போதெல்லாம் உப்பு, புளி போன்ற பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பார். ஆறுமுகம், தம்பையரின் பசுக்களின் பாலைக் காய்ச்சி, உறைய வைத்து தயிராக்கி, கடைந்து எடுத்த நெய்யை கொண்டு வருவார். தேன் கொண்டு வந்து கொடுப்பார்.

வரும் போதெல்லாம் கணபதிப்பிள்ளைக்கு ஏதாவது தின்பண்டங்கள் கொண்டு வருவார். கணபதிக்கும் ஆறுமுகத்துடன் கதைப்பது மிகவும் பிடிக்கும். தந்தையாருக்கு அடுத்த படி அவனுக்கு ஆறுமுகத்தைப் பிடிக்கும். ஆறுமுகமும், கணபதி காட்டைப்பற்றி, மிருகங்களைப் பற்றி, பெரிய பரந்தனைப் பற்றி, தோணியில் பிரயாணம் செய்வது பற்றி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் சலிப்பில்லாமல் பதில் சொல்வார்.

விசாலாட்சியின் தம்பிமார் வயலைச் சீரழிப்பதைக் கேள்விப்பட்ட உறவினர்கள் இப்போது “விசாலாட்சி, ஆறுமுகத்தை ஏன் மறுமணம் செய்யக்கூடாது” என்று அவளைக் கேட்டனர். முத்தரும் இதைப் பற்றி விசாலாட்சியிடம் கதைத்தார். “ஆறுமுகம் உண்மையிலேயே நல்லவன். தம்பையரை சொந்த அண்ணனாகவே நினைப்பவன். கணபதியின் மேல் பாசம் உள்ளவன். அவனுக்கு கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை. கலியாணம் செய்தால் உன்னையும் கணபதியையும் நல்லாய்ப் பார்ப்பான்.” என்று முத்தர் எடுத்துக் கூறினார்.

ஆறுமுகத்தின் மனைவி இறந்து மூன்று வருடங்கள் முடிந்து, நான்காவது வருடம் தொடங்கி விட்டது. 24 வயதில் மனைவியை இழந்தவர், இப்போது 28 வயதை நெருங்குகின்றார். நல்ல மனிதன், உழைப்பாளி, கடவுள் பற்று உள்ளவன். எப்போவாவது களைத்த நேரத்தில் பனையிலிருந்து உடன் இறக்கிய பனங்கள் கிடைத்தால் குடிப்பார். தென்னங்கள் குடித்தால் வாதம் வரும் என்று அதனைத் தொடுவதில்லை. சாராயத்தை நினைத்துப் பார்ப்பதே இல்லை.

உறவினர்களொடும் ஊர் மக்களோடும் மிகவும் அன்பாகவும் பணிவாகவும் பழகுவார். மற்றவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்வார். கணபதிக்கும் அவரைப் பிடிக்கும். அவரையே மறுமணம் செய்தால் என்ன? என்று உறவினர்கள் ஒருவர் மாறி ஒருவர் கேட்கலாயினர்.

“அடி மேல்  அடி அடித்தால் அம்மியும் நகரும்” அல்லவா? விசாலாட்சி தம்பையர் இறந்து மூன்று வருடங்களில் பின் தான் மறுமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.

தனக்கும் 26 வயது நெருங்குகின்றது. நெடுக தனியே உழைக்க முடியாது. தம்பையரின் கனவு அழிந்து போவதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கணபதிக்காக, தம்பையர் தனது கடுமையான உழைப்பினால் தேடிய சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். தம்பிமாரை காணியை விட்டு எந்த மனவருத்தமும் இல்லாமல் வெளியேற்ற வேண்டும். ஆறுமுகத்தாரை மறுமணம் செய்தால், தம்பையரின் கனவையும் நிறைவேற்றலாம். கணபதியையும் ஒரு ஒழுக்கமான, மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துபவனான, பண்பான இளைஞனாக வளர்த்து விடலாம்.

ஆண் தலைமை அற்ற குடும்பங்களில் பிள்ளைகள், தாயாரின் செல்லத்தினால் கெட்டுப் போவதையும் விசாலாட்சி கண்டிருக்கிறாள். உறவினர்களிடம் “நான் ஆறுமுகத்துடன் நேரில் சில விடயங்கள் கதைக்க வேண்டும். அதன் பிறகு தான் அவனுடன் மறுமணம் செய்வது பற்றி நான் தீர்மானிப்பேன்” என்று உறுதியாக கூறி விட்டாள்.

முத்தர் ஆறுமுகத்திடம் “ஆறுமுகம் விசாலாட்சி தனிய இருந்து கணபதியை வளர்க்க கஷ்டப்படுகிறாள். கணபதியிலும் உனக்கு பாசம் தானே. நீ அவளை கலியாணம் செய்தால் என்ன?” என்று கேட்டார்.  ஆறுமுகம் பலர், முன்னர் கேட்ட போது “யோசிப்பம்” என்றவன் முத்தர் கேட்டவுடன் “விசாலாட்சிக்கும் சம்மதம் என்றால் நான் செய்கிறேன்” என்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் வீட்டிற்கு வந்து, குந்தில் அமர்ந்து கொண்டார்.

தம்பையர் உயிருடன் இருந்த போது, அடிக்கடி அந்தக் குந்தில் வந்திருந்து அவருடன் உரையாடியிருக்கிறார். விசாலாட்சியின் கையால் பலமுறை சாப்பிட்டிருக்கிறார். அப்போது அவளது நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, எதனையும் யோசித்து நிதானமாகப் பேசும் முறை எல்லாவற்றையும் கண்டு அவளின் மேல் மட்டற்ற மரியாதை வைத்திருந்தார். இப்போது ஒரு வித பயத்துடனும் பதட்டத்துடனும் விசாலாட்சி என்ன சொல்லப் போகின்றாவோ? என்று காத்திருந்தார். விளையாடிக் கொண்டிருந்த கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தி அணைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வெளியே வந்த விசாலாட்சி ஆறுமுகம் கணபதியை அணைத்தபடி இருந்ததை அவதானித்துக் கொண்டாள். நேரடியாக விடயத்திற்கு வந்தாள். “ஆறுமுகம்” என்றே வழமை போல பெயர் சொல்லி அழைத்தாள்.  “இஞ்சை பார் ஆறுமுகம், எனக்கு இப்ப கலியாணம் முக்கியமில்லை. கணபதியை நன்றாய் வளர்க்க வேண்டும். தம்பையர் தமது உயிரையும் மதிக்காது, அந்த யானைக் காட்டில் வெட்டி உருவாக்கிய காணியையும் அழிய விடமுடியாது. அதற்கு நீ உதவி செய்வாய் என்று நம்பித்தான் உன்னை கலியாணம் செய்ய யோசித்தேன். நீ, நான் கேட்கும் இரண்டு விடயத்திற்கு சம்மதிக்க வேண்டும். உனக்கென்று பிள்ளைகள் பிறந்தாலும், எனது மகன் கணபதியை வேறுபாடு காட்டாது உன்னுடைய மூத்த மகனாக வளர்க்க வேண்டும். மற்றது உன்னை கலியாணம் செய்த மறு நாளே நான் பெரிய பரந்தன் சென்று, தியாகர் வயலில் தம்பையர் கட்டிய வீட்டில் தான் குடியிருப்பேன். நீயும் இங்கேயும் அங்கேயும் அலையாமல் பெரிய பரந்தனிலேயே இருந்து விடலாம். இதற்கு என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள்.

ஆறுமுகத்திற்கு கணபதி மேல் அளவு கடந்த பிரியம். தியாகர் வயலை தான், தனது தாய் மனை என்று எண்ணியிருக்கிறான். கரும்பு தின்ன கூலி வேண்டுமா? ஆறுமுகம் உடனேயே தனது சம்மதத்தை தெரிவித்தான்.

ஆறுமுகத்தாருக்கும் விசாலாட்சிக்கும் நாட்சோறு கொடுப்பதாக உறவினர்கள் தீர்மானித்தார்கள். அப்போது திருமணம் என்பது நாட்சோறு கொடுத்து, பின் தம்பதிகளைத் தனியே விடுவதாகும்.

உறவினர் உடனேயே எல்லா ஒழுங்குகளையும் செய்தனர். நல்ல நாள் பார்க்கப்பட்டது. விசாலாட்சியையும் ஆறுமுகத்தையும் குளித்து வரச் செய்தனர். ஆறுமுகம் வேட்டியைக் கட்டி தோளில் ஒரு துண்டைப் போட்டிருந்தார். விசாலாட்சி புதிதாக வாங்கிய சேலையை கட்டியிருந்தாள். விசாலாட்சியை சோறும் இரண்டு கறிகளும் காய்ச்ச செய்தனர்.

முன் விறந்தை மெழுகப்பட்டது. அதில் நிறைகுடம் வைக்கப்பட்டது. சாணகத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் ஒரு அறுகம்புல் செருகி விட்டனர். சிட்டிகளில் விபூதி, சந்தனம் வைத்தனர். ஒரு சிட்டியில் தேங்காய் எண்ணை ஊற்றி விளக்கு தயாராக இருந்தது. நிறைகுடத்தின் மேல் மஞ்சள் பூசி, நடுவே ஒரு மஞ்சள் கட்டிய கயிறு வைக்கப்பட்டது.

ஒரு பனை ஓலைப் பாய் விரித்து ஆறுமுகத்தையும் விசாலாட்சியையும் இருத்தினர். குடும்பத்தில் வயதில் மூத்த ஒருவர் தீபம் ஏற்றினார். மணமக்களுக்கு வீபூதியைப் பூசி, சந்தனத்தை வைத்து விட்டார். தேவாரம், திருவாசகங்கள் பாடினார். மஞ்சள் கயிற்றை எடுத்து ஆறுமுகத்தின் கையில் கொடுத்தார். கணபதி ஓடி வந்து ஆறுமுகத்திற்கும் விசாலாட்சிக்கும் பின்னால் இருவரினதும் தோள்களைப் பற்றியபடி நின்றான். ஆறுமுகம் விசாலாட்சியின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு கட்டி விட்டான். கணபதிக்கு, ஆறுமுகம் தான் புது தகப்பன் என்று உறவினர்கள் முதலே கூறிவிட்டனர். அவனுக்கு அதில் முழுச் சம்மதம்.

விசாலாட்சியை தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறச் செய்து, ஆறுமுகத்தை சாப்பிட வைத்தனர். ஆறுமுகம் கணபதியைக் கூப்பிட்டு அருகில் இருத்தினார். அவனுக்கும் தீத்தி தானும் சாப்பிட்டார். பின் அதே இலையில் உணவு பரிமாறி விசாலாட்சியையும் சாப்பிட வைத்தனர்.

திருமணம் இனிதே நிறைவேறியது. உறவினர்களை பந்தியில் இருத்தி உணவு பரிமாறினர். எல்லோரும் சென்ற பின்னர் ஆறுமுகம் விறாந்தையின் ஒரு பக்கத்தில் பனை ஓலைப் பாயில் படுக்க, கணபதி அவனைக் கட்டிப் பிடித்த படி உறங்கிக் போனான். விசாலாட்சி பொருட்களை ஒதுக்கி வைத்து, மறு நாள் பெரிய பரந்தன் செல்வதற்காக சாமான்களை மூட்டையாக கட்டினாள்.

அந்த நாட்களில் திருமணம் என்பது, செலவில்லாமல் ‘நாட்சோறு’ கொடுத்தலுடன் நிறைவேற்றப்பட்டது. மேடை இல்லை. அலங்காரம் இல்லை. ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. தங்கம் இல்லை. சீதனம் இல்லை. இரு மனம்  கலந்தால் போதும். அந்த பொற்காலம் மீண்டும் வருமா?

தொடரும்..

.

.

.

மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்

.

முன்னைய பகுதிகள்:

பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/

பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/

பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/

பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/

பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/

பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More