பெரிய பரந்தனில் இறங்கிய மறு நாளிலிருந்து விசாலாட்சியும் கணபதியும் ஊர் வாழ்க்கையுடன் ஒன்றி விட்டனர். காலை எழுந்தவுடன் விசாலாட்சி வீடு கூட்டி, முற்றம் கூட்டி விட்டு, ‘பூவலுக்கு’ போவாள். பனை ஓலைப் ‘பட்டை’ யில் தண்ணீர் அள்ளிக் கொண்டு, அருகில் இருந்த பனங்கூடலுக்கு ஒதுங்குவதற்கு செல்வாள். தூய்மைப் படுத்திக் கொண்டு, கூடலில் நின்ற வேப்ப மரத்தில் ஒரு குச்சியை முறித்து பல் துலக்கிக் கொள்வாள். வாயெல்லாம் கைக்கும். பூவலுக்கு வந்து வாய் கொப்பளித்து, முகம் கழுவிக் கொள்ளுவாள். அவளுக்கு தம்பையர் இருக்கும் மட்டும் “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்ற மூத்தோர் கூற்றை ஞாபகப் படுத்துவதுண்டு. ஆலங் குச்சியிலும் வேலங்குச்சியிலும் உள்ள கைப்புத் தன்மை வாய்க்குள் இருக்கும் அழுக்குகளை நீக்கி விடும் என்று கூறுவார். ஆனாலும் அவளால் இப்போது தொடர்ந்து வேப்பம் குச்சியினாலோ (வேல்), ஆலங் குச்சியினாலோ பல் துலக்க முடியவில்லை.
கணபதி எவ்வாறு சமாளிப்பான் என்றும் அவள் கவலைப்பட்டது உண்டு. ஆனால் அவன் ஆறுமுகத்தாரைப் பார்த்து சர்வ சாதாரணமாக குச்சியால் பல் துலக்க பழகி கொண்டான். தந்தைமார்களை முன் மாதிரியாக கொண்டு தான் ஆண் பிள்ளைகள் எதையும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டு நிம்மதி அடைந்தாள்.
கால போக சூடு அடித்தபின் வரும் சப்பி நெல்லை எரித்து தனக்கு மட்டும் என்றாலும் உமிச்சாம்பல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
விசாலாட்சி பூவலில் தனது சருவக் குடத்தை நீரால் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு வரவும், ஆறுமுகமும் கணபதியும் காட்டிலே காலைக் கடன் முடித்து, வாய் துலக்கி, நீர் நிலையில் முகம் கழுவி, பின் ‘காலை’ சென்று ஒரு செம்பில் பால் கறந்து கொண்டு, மாடுகளை காட்டில் மேய்வதற்கு கலைத்து விட்டு வரவும் சரியாக இருந்தது. சிறிய கன்றுகளை காட்டில் விடுவதில்லை. ‘காலையில்’ அடைத்தே வைத்திருப்பார்கள். காலையும் மாலையும் ஒவ்வொரு பசுவிலும் சிறிதளவு பால் மட்டும் கறந்து விட்டு, மிகுதியை கன்றுகள் குடிக்க விட்டு விடுவார்கள். கன்றுகள் வாயில் நுரை தள்ள தள்ள குடித்து விட்டு வாலைக் கிளப்பி கொண்டு ஓடி விளையாடுவினம்.
விசாலாட்சி அளவான சூட்டில் பால் காய்ச்சி சிரட்டைகளில் ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொடுத்து, தானும் குடிப்பாள். பனங்கட்டி கொடுப்பதில்லை. பசுக்கள் காட்டிலே புற்களை மேயும் பொழுது மூலிகைச் செடிகளையும் சாப்பிடுகின்றன. அதனால் பால் சுவையாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கின்றது. ஊரிலே புற்களுக்கே பஞ்சம். வைக்கோலும் தவிடும் புண்ணாக்கும் தான் வைக்கிறார்கள். பாலில் மணம் குணம் ஒன்றும் இருக்காது. பனங்கட்டி இல்லாமல் குடிக்க முடியாது.
‘காலை’
மாடுகள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் காட்டிலே அடர்ந்த மரங்கள் சில உள்ள மேடான இடத்தை தெரிவு செய்வர். மரங்களைச் சுற்றி இருபத்தைந்து அடி ஆரையுடன் பட்டமரங்களை வட்ட வடிவில் அடுக்குவார்கள். மாடுகள் போய் வருவதற்கு ஒரு பாதை விடுவார்கள். வெட்டிய அலம்பல்களால் அந்த வட்ட வடிவ மரங்களை நரிகள் நுழையாதவாறு அடைத்து விடுவார்கள். ‘காலை’ தயார். இரவில் மாடுகளை ‘காலையில்’ அடைத்து விடுவார்கள்.
மாடுகள் வெளியே போக மாட்டா. நரிகள் உள்ளே வந்து கன்றுகளைக் கடிக்க மாட்டா. சிறுத்தைகள் உள்ளே வருவதை தடுக்க முடியாது. அதனால் வெளியே மூன்று நான்கு இடங்களில் பட்டமரக் குற்றிகளை குவித்து எரித்து விடுவார்கள்.
மேலதிக பாதுகாப்பிற்காக பெரிய பரந்தன் மக்கள் மிக நெருக்கமாக ‘காலைகளை’ அமைப்பார்கள். பொதுவாக மாரி காலத்தில் தான் காலையை அடைப்பார்கள். அலம்பல் தட்டிகள் பல செய்து முடித்த பின்னர் பயிர்ச் செய்கை இல்லாத போது வயலில் பட்டிகளில் அடைக்க முடிவு செய்துள்ளார்கள். எருவை விட மாட்டுச் சலத்தில் தான் தளைச் சத்து கூடுதலாக இருக்கும்.
கணபதி, ஆறுமுகத்தாரின் வழி காட்டலால் பல விடயங்களை கற்றுக் கொண்டு விட்டான். ஆறுமுகம் வரம்பு புல் செருக்க, கணபதியும் ஒரு சிறிய மண் வெட்டியால் செருக்குவான்.
விசாலாட்சி செருக்கிய புற்களை கூட்டி அள்ளி வயலுக்குள் சிறிய சிறிய குவியலாக குவிப்பாள். ஒரு வெய்யிலில் காய்ந்த பின் எரித்து விடுவாள்.
ஆறுமுகம் வேலியில் நின்று வயலுக்கு நிழல் தரும் பூவரசு மரங்களில் ஏறி கிளைகளை வெட்டி வீழ்த்துவார். கணபதி கீழே நின்று, அவற்றை கழித்து தடிகளை புறம்பாகவும் இலைகளைப் புறம்பாகவும் போடுவான். விசாலாட்சி இலைகளை அள்ளிக் கொண்டு போய் வயலில் பரவி விடுவாள். விசாலாட்சி சமைக்கும் போது, ஆறுமுகமும் கணபதியும் வண்டிலில் எருதுகளைப் பூட்டிக் கொண்டு ‘காலைக்கு’ போவார்கள். ஆறுமுகம் அங்கு ஒவ்வொரு நாள் மாலையும் குவித்து வைக்கும் எருக்களை கடகங்களில் நிறைத்து, வண்டிலின் மேலே வைப்பார். கணபதி கடகங்களை இழுத்து உள்ளே சமனாக பரவுவான். நிரம்பிய பின் வண்டிலை தமது வயலை நோக்கி செலுத்துவார்கள். இப்போது கணபதியும் நன்கு வண்டில் ஓட்டப் பழகி விட்டான். எருக்களை கொண்டு சென்று வயலில் பரவுவார்கள்.
கணபதி, ஆறுமுகத்தாரை பார்த்து மச்சம், மாமிசம் சாப்பிடப் பழகி விட்டான். விசாலாட்சி அதனை பொருட்படுத்தவில்லை. தான் மட்டும் தனியே சைவ சாப்பாடு செய்து சாப்பிடுவாள். அதுவும் எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. சில காலங்களில் பெரிய பரந்தனில் மரக் கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். மெல்ல மெல்ல தானும் மாற வேண்டி வரும் என்பது அவளுக்கு புரிந்தது.
ஆறுமுகத்தார், ‘சிராய் ஆமை’, ‘பாலாமை’ என்பவற்றை சாப்பிட மாட்டார். “அவை அழுக்குகளை சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆனால் ‘கட்டுப்பெட்டி’ ஆமையை விரும்பி உண்பார். “கட்டுப்பெட்டி ஆமைகள் புற்களை மட்டும் தான் சாப்பிடுகின்றன” என்று சொல்லுவார். ஆறுமுகத்தார் கட்டுப் பெட்டி ஆமையை மிகவும் சுவையாக சமைப்பார். அவரைப் பார்த்து கணபதியும் சாப்பிடுகின்றான். “நல்ல சுவையான கறி அம்மா” என்று தாயிடம் சொல்லுவான்.
‘கட்டுப்பெட்டி’ ஆமைகள் மிக அழகானவை என்று விசாலாட்சியும் அறிவாள். அழகான நிறத்தில் பெட்டி பெட்டியாக இருக்கும். பறங்கி அதிகாரிகள் இந்த வகை ஆமைகளைக் கொன்றுவிட்டு, உள்ளே இருப்பவற்றை நீக்கிவிட்டு கழுவி காயவைத்து, தமது கந்தோர்களில் மேசைகளின் மேலே அழகிற்காக வைத்திருக்கிறார்களாம் என்று தோழிகள் சொல்லக் கேட்டிருக்கிறாள்.
ஆறுமுகம் மிகவும் உயரம் பெருப்பமான மனிதர். அவருடன் சமனாக மற்றவர்களால் நடக்க முடியாது. கணபதி துள்ளி துள்ளி ஓடி ஓடித் தான் அவருடன் கதைத்தபடி வருவான். இப்போது கணபதியும் ‘டார்’ வைக்கப் பழகி விட்டான். ஆறுமுகமும் கணபதியும் மான்கள், மரைகள் நடமாடும் இடங்களை நோட்டமிடுவார்கள். மாடுகள் மேய்வதற்கு செல்லாத, மனிதர்கள் போகாத இடமாக தெரிவு செய்வார்கள். மான்கள், மரைகள் போகும் பாதையில் ஆழமான சதுர வடிவ குழியை வெட்டி விடுவார்கள். குழியின் மேல் உக்கிய, மெல்லிய தடிகளை குறுக்கும் நெடுக்குமாக போடுவார்கள். அதன் மேல் குழைகளை பரவி விடுவார்கள். கிடங்கு வெட்டியது தெரியாதவாறு தடிகளின் மேலே மண் போட்டு பரவி விடுவார்கள். விலங்குகளுக்கான மரணப் பொறி தயார்.
ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் போய் பார்ப்பார்கள். சில வேளைகளில் மான், மரை, பன்றி விழுவதுண்டு. கஷ்டகாலமாயின் கரடியும் விழுந்து விடும். ஒருவரும் கரடி இறைச்சி சாப்பிட மாட்டார்கள். தோல் மட்டும் பயன்படும். ஆனால் அது போடும் சத்தத்திற்கும், அதனைக் கொல்வதற்கும் எல்லோரும் அஞ்சுவார்கள். ஏனைய விலங்குகள் என்றால் விழுந்த அன்று பெரிய பரந்தனில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். அந்த இடத்தில் பொறி வைத்திருக்கிறது என்று எல்லோருக்கும் முதலே அறிவித்து விடுவார்கள்.
பொறி இருப்பது தெரியாது விட்டால் ஆட்களும் விழுந்து விடுவார்கள். வளர்ப்பு மிருகங்களும் விழுந்து விடக்கூடும். பெரும்பாலும் ஊரே கூடித் தான் இவ்வாறு பொறி வைப்பார்கள். யாராவது ஒருவர் தூரத்தில் ஒரு மரத்தில் ஏறி நின்று அவதானிப்பார். அவர் ஆபத்து ஒன்றும் வராதவாறு தடுத்து விடுவார்.
மழை பெய்யத் தொடங்கியது. இரண்டு கலப்பைகளில் எருதுகளை பூட்டினார்கள். ஆறுமுகத்தார் முன்னே உழுதுகொண்டு போக, கணபதி பின்னே உழுது கொண்டு போனான். இரண்டே நாட்களில் கணபதி உழவு பழகி விட்டான்.
இது முதல் மழை. விதைக்கும் நிலத்தை பண்படுத்தும் உழவு. இந்த உழவு ‘நில எடுப்பு’ எனப்படும். அவசரம் இல்லை. அவரவர் காணியை தாமே உழுவார்கள்.
விதைப்புக் காலம் நெருங்கியது. விதை நெல் சூடுகளை அடித்தார்கள். இதற்கு ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். விதைப்பு இரண்டு வகைப்படும். புரட்டாதி மாதம் புழுதியாக விதைப்பார்கள். நிலத்தில் ஈரம் இருக்காது. மழை வரும்வரை காத்திருந்து, மழை வந்ததும் நெற்கள் முளைக்கும். மற்றது, ஈர விதைப்பு. நிலம் மழைக்கு நனைந்து ஈரமான பின்னர் விதைப்பார்கள். நெல் உடனேயே முளைவிடும். விதைப்பின் பொழுது கூட்டாக வேலை செய்வார்கள்.
இது வரை ஒருவரை சமைப்பதற்கு என்று ஒழுங்கு செய்வார்கள். அவரும் எதையோ அவித்து வைப்பார். பசிக்கு சுவை தெரியாது. ஊருக்கு போனால்தான் ஒழுங்கான சாப்பாடு கிடைக்கும். விசாலாட்சி வந்த மூன்றாம் நாள் ஆறுமுகத்தாரைக் கொண்டு எல்லோரையும் அழைப்பித்து சாப்பாடு கொடுத்தாள். எல்லோரும் உறவினர்கள் என்பதாலும், தம்பையர், ஆறுமுகத்தார், விசாலாட்சி மேலுள்ள அன்பாலும் எல்லோரும் வந்தனர். சாப்பாடு அமிர்தமாக இருந்தது.
உறவினர்கள் யார் வந்தாலும் விசாலாட்சி சாப்பாடு கொடுக்காமல் அனுப்ப மாட்டாள். எல்லோரும் பல சந்தர்ப்பங்களில் விசாலாட்சியின் சமையலை சாப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கூட்டு விதைப்பு. விதைப்பு காலத்தில் எல்லாருக்கும் தான் சமைத்து தருவதாக, விசாலாட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அதனால் யாவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வயல் வேலைகளின் போது அந்த கால மக்கள் சைவ உணவு தான் சமைப்பது வழக்கம்.
இரணைமடு குளத்தின் பத்தாம் வாய்க்கால் குஞ்சுப்பரந்தன் மக்களால் பயன் படுத்தப்படுகின்றது. தம்பையர், பிள்ளையார் கோவில் முன்றலில் எல்லோரும் கூடியிருந்த ஒரு தருணத்தில், “நாங்கள் காட்டாறுகளான கொல்லனாற்றையும், நீலனாற்றையும் மட்டும் நம்பி சிறுபோகச் செய்கையில் ஈடுபட முடியாது. இரணைமடுவிலிருந்து வரும் நீரை, எட்டாம் வாய்க்காலை திருத்தி பயன் படுத்தினால் மட்டுமே சிறுபோகம் செய்ய முடியும்” என்று கூறியிருந்தார். அதன் படி எட்டாம் வாய்க்காலை வெட்டி துப்பரவாக்க அனுமதி கேட்பது என பெரிய பரந்தன் மக்கள் தீர்மானித்தனர்.
பின் முத்தரும் ஆறுமுகத்தாரும் இன்னும் சில உறவினர்களையும் அழைத்துக் கொண்டு இரணைமடுவிற்கு சென்று சம்பந்தப்பட்ட் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆறுமுகத்தார், முத்தர் அம்மான் தலைமையில் எல்லோரும் சேர்ந்து எட்டாம் வாய்க்காலை வெட்டி, துப்பரவு செய்தனர். தம்பையர் இறந்த பின்னர், இது தான் பெரிய பரந்தன் மக்கள் செய்த முக்கியமான சாதனையாகும்.
.
தொடரும்..
.
.
.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்
.
முன்னைய பகுதிகள்:
பகுதி 1 – https://vanakkamlondon.com/stories/2020/09/83463/
பகுதி 2 – https://vanakkamlondon.com/stories/2020/09/84232/
பகுதி 3 – https://vanakkamlondon.com/stories/2020/09/85016/
பகுதி 4 – https://vanakkamlondon.com/stories/2020/09/85782/
பகுதி 5 – https://vanakkamlondon.com/stories/2020/10/86606/
பகுதி 6 – https://vanakkamlondon.com/stories/2020/10/87711/
பகுதி 7 – https://vanakkamlondon.com/stories/2020/10/88350/
பகுதி 8 – https://vanakkamlondon.com/stories/2020/10/88893/