செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அக்குறாணை கிராமமும், பொதுமக்களின் சவால்களும் | கந்தசாமி அபிலாஷ்

அக்குறாணை கிராமமும், பொதுமக்களின் சவால்களும் | கந்தசாமி அபிலாஷ்

4 minutes read

செக்கனுக்கு செக்கன், நிமிடத்திற்கு நிமிடம் நவீன உலகில் மாற்றங்கள் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாடளாவிய ரீதியில் சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார, கல்வி முதலான துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பினும் ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு பிரதேசத்தில் சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு நகரின் வடக்கு திருகோணமலை வீதியில் சுமார் 28 கிலோமீற்றர் தொலைவில் கிரான் பிரதேசம் அமைந்துள்ளது. அப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியின் உட்புறத்தில் சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில் அக்குராணை கிராமம் அமைந்துள்ளது.

இக்கிராமமானது முறுத்தானை கிராமசேவகர் பிரிவை உள்ளடக்கிய அதிகஷ்ட கிராமமாகும். மட்டக்களப்பில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்றான கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவும் ஒன்றான இதில் 18 கிராம சேவகப்பிரிவுகள் உள்ளது. மட்டக்களப்பின் 11 பிரதேச செயலக பிரிவுகள் கடந்த கால யுத்தத்தினாலும், கடும் வரட்சியாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டதுடன், அதிலும் குறிப்பாக இந்த முறுத்தானை கிராம சேவகப்பிரிவில் உள்ளடங்கும் கிராமங்களான அக்குறாணை, முறுத்தானை, மினுமினுத்தவெளி ஆகிய மூன்று கிராமங்கள் காணப்படுகின்றன. இந்த மூன்று கிராமங்களுக்கு இடையிலான இடைவெளி அண்ணளவாக 13 கிலோமீற்றர் ஆகும்.
அக்குராணை கிராமமானது அடர்ந்த காடுகளாலும், பற்றைக் காடுகள், வயல் வெளிகள், பெரிய மரங்கள், முட்புதர்கள், பழைய வழிபாட்டு சின்னங்கள் என இயற்கை வளமும், இயற்கை வனப்பு முதலான பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்கள் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகிறது. அதிகஷ்டமான அக்குராணை கிராமத்தில் வாழ்கின்ற ஒரு பகுதியினர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களது பிரதான தொழிலாக வேட்டையாடுதல், விறகு வெட்டுதல், சேனைப் பயிர்ச்செய்கை, வற்று ஏரிகளில் மீன்பிடித்தல், வயல் கூலி, காவல் வேலைக்குச் செல்லல் முதலானவை காணப்படுகின்றன. இவையே இவர்களது பொருளாதார பின்னணியாக வருமானமீட்டும் தொழிலுக்கான முயற்சியாகவும் அமைகிறது. பருவ காலத்திற்கு ஏற்ப தொழில் இல்லாத வறிய காலமும் ஏற்படுவதுடன் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தமது ஜீவனோபாயத்தை நடத்தி வருகின்றனர்.

அண்ணளவாக 267 குடும்பங்களும், 865க்கு மேற்பட்ட சனத்தொகையும் கொண்ட இக்கிராம சேவகர்பிரிவினை உள்ளடக்கியதாக இரு பாடசாலைகள் காணப்படுகின்றன. தரம் 1 தொடக்கம் 9 வரையிலான வகுப்புக்களில் கிட்டத்தட்ட நூறுக்கும் குறைவான மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர். அந்தவகையில் மட்ஃககுஃ அக்குராணை பாரதி வித்தியாலயம், மட்ஃககுஃ முறுத்தானை திருமுருகன் வித்தியாலயம் என்பன காணப்படுகின்றன. பொருளாதார வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சாதாரண மக்களாக இவர்கள் பல சவால்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பல்வேறு சவால்களில் முதன்மையானது உயிருக்கான அச்சுறுத்தலாகும். அந்தவகையில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்கள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதுவரையில் உயிர்ச் சேதம், வீடு, சேனை முதலான உடைமைச் சேதங்களென பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பொதுமக்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் போது, இதுவரையில் காட்டு யானைகளுக்கான பாதுகாப்பு வேலி, பாதுகாப்பு நடைமுறைகள் சிறப்பாக இல்லை என்றும் தெரிவித்திருந்தனர். பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களுள் அடுத்ததாக போக்குவரத்துப் பிரச்சனையும் காணப்படுகிறது. திட்டமிடப்படாத பாதை இல்லாத காரணத்தினால் கிரான் பிரதேசத்தால் சுற்றி நகர்ப்புறம் வருவதாயின் கிட்டத்தட்ட 42 கிலோமீற்றர் செல்ல வேண்டும். ஏனைய பாதையின் வழியால் செல்வதாயின் ஆறு கடந்து கிட்டத்தட்ட 30 கிலோமீற்றர் நடந்தோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல வேண்டிய மோசமான நிலை காணப்படுகின்றது. மழைக்காலங்களில் வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் பாதைகளில் வெள்ளம் பெருகி, பாதைகளில் களி படர்வதால் பிரியாணிப்பது மிகவும் சிக்கலாக அமைவதுடன் நீர் தேங்கும் பாதையானது படுமோசமான நிலையில் உள்ளதால் அதிகமான நாட்களில் பாதையில் விழுந்தும், நீரில் அடித்துச் செல்லப்பட்டும், காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறு அக்குராணை கிராமத்தில் உள்ள பொதுமக்களுடன் மேற்கொண்ட நேர்காணலின் போது பல்வேறு விதமான தகவல்களை அறிய முடிந்தது. இவ்வாறு பல சிரமங்களை தாண்டி நகருக்குச் சென்று அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களையும், தம் பிள்ளைகளின் கற்றலுக்கான உபகரணங்களையும் வாங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மாலை 4.30 மணியுடன் ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை தொடர்கிறது. தம் பிள்ளைகள் பாடசாலைக்கு நீண்ட தூரங்களில் இருந்து பெரும்பாலும் நடையிலும், சில பிள்ளைகள் சைக்கிளிலிலும் செல்கின்றனர். அவர்கள் பாடசாலை வரும்போதும், வீடு திரும்பும் போதும் தாங்கள் பயத்துடன் தம் பிள்ளைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் பல சவால்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தி வருவதை அறிய முடிந்தது.

மேலும் இளவயது திருமணம், மாணவர் இடைவிலகல், மாணவர் வரவின்மை, சமூக ஒத்துழைப்பின்மை, பெற்றோர் வெளிநாடு செல்லல், பிள்ளைகளது பாதுகாப்பின்மை, குடும்பத்தகராறு, வன்முறைகள் என பல விடயங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு கட்டுப்பாடான முறையான சமூக அமைப்பின்மை காரணமாகவே இவை தொடர்கின்றன என்பதையும் அறிய முடிந்தது. பொதுமக்களில் சிலர் கூறுகையில், நாங்கள் சிரமப்பட்டு நகருக்கு செல்வதைப் போலவே ஆசிரியர்களும் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை வருவதாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக ஒரு ஆசிரியரிடம் கருத்துப்படி, “தினமும் பாடசாலை வந்து செல்வது என்பதே கனவிலும் சாத்தியமில்லை எனினும், நான் பல சிரமத்துக்கு மத்தியில் தினமும் வந்து செல்வதாகவும் பேரூந்தில் வந்து சந்தியில் இறங்கி, பெரும்பாலும் வயலுக்குள் செல்லும் மக்களுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்து சிறிது தூரம் நடந்து, ஆற்றைக் கடந்து நடந்தும், சைக்கிளிலும் பாடசாலை செல்வதாகவும் கூறினார். இவ்வாறு சிரமப்பட்டு பாடசாலை வருவது போலவே பாடசாலையில் இருந்து வீடு திரும்புவதிலும் அதே சவால்கள் உள்ளதாகவும் கூறினார்;. மேலும், “ உயிர்ப்பிரச்சனை தொடர்பாகவும் போக்குவரத்து தொடர்பாக தான் மட்டுமே சிந்தித்து செயற்பட்டால் மாத்திரமே உலகில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், கடவுள் எனக்கு விதித்த கடமையே பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கற்பிப்பதுவும், மாணவர்களை சிறந்த நற்பிரஜைகளாக எதிர்காலத்துக்கு கையளிக்க வேண்டும் என்றும், அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் கூறினார். இவரது கருத்திலிருந்து பல ஆழமான சமூக, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் மறைந்து உள்ளதையும் அறிய முடிவதுடன் அவ்வாசிரியரின் மனநிலையையும், தியாக உணர்வையும் நேர்காணலில் மூலம் அறிய முடிந்தது.

பொதுமக்களது சவால்கள் பற்றி நீர்ப்பாசனத் திணைக்கள, நிலப்பாதுகாப்பு, போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை வினவிய போது ஏற்கனவே அங்கு ஒரு பாலம் இருந்ததாகவும், அது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறியதுடன் வெகுவிரைவில் பாலம் அமைக்கப்படுமெனவும் கூறினர். அனைத்து அரசியல்வாதிகளும், பொருளாதார பலம் வாய்ந்த பிரமுகர்களும், உயர் அதிகாரிகளும், நலன்விரும்பிகளும் இச்சவால்கள் குறித்து ஆழமான கண்ணோட்டத்தில் அணுகி தீர்வினைக் கண்டறிய முயல வேண்டும். இதுவரையில் அக்குறாணை கிராமத்தின் போக்குவரத்துக்கு பேரூந்து இல்லை. காரணம் யாதெனில், மழைக்காலங்களிலும் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் ஆற்றைக் கடந்து செல்லவும் ஒரு நிலையான பாலம் இல்லை என்பதை அறிய முடிந்ததுடன் களப் பிரயாணத்தில் இதனை அனுபவ ரீதியாகவும் உணர முடிந்தது..

எனினும், நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக பொதுமக்களே காணப்படுவதனால் அவர்களின் நடைமுறை வாழ்வாதாரத்திலும், இயங்கு நிலையில் பல சவால்கள் நிரம்பிக் காணப்படினும் அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு உதவ வேண்டும். அதற்கென ஒரு நிலையான, உறுதியான பாதையையும், பாலத்தையும் அமைத்துக் கொடுப்பது போக்குவரத்துப் பிரச்சினைக்கு ஒரு சிறந்த தீர்வாகவும் அமையும். உயிர்ப் பாதுகாப்பு, கல்வி நிலை, தொழில் தொடர்பில் அனைத்து புத்திஜீவிகளும் சுயநலமின்றி சிந்தித்து எதிர்கால மாற்றத்திற்கு வழிவகுத்து கொடுப்பதுடன், ஒரு சிறந்த ஒரு வளமான எதிர்கால சமுதாய உருவாக்கத்திற்கு எம்மாலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு சிந்தித்து செயலாற்றினால் மாத்திரமே, ஒட்டுமொத்த பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த தீர்வுகள் கிடைப்பது மட்டுமின்றி, “மனிதம் என்றும் மனிதனால் வாழும்” என்றால் அக்கூற்று பொய்க்காது.

கந்தசாமி அபிலாஷ்

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More