ஆர்மேனியா CSTO -சிஷ்டோ கூட்டணியால் விலகல்:
புட்டினுக்கு தொடரும் பெரும் சவால்!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(நேட்டோவிற்கு பதிலாகக் கருதப்படும், முன்னைய சோவியத் நாடுகளின் இராணுவக் கூட்டணியான CSTO, அமைப்பிலிருந்து ஆர்மேனியா அரசு கிரெம்ளின் ஆதரவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளது)
ஆர்மேனியாவின் பிரதமர் நிகோல் பஷினியன் (Pashinyan) ரஷ்ய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலிருந்து – CSTO- (Collective Security Treaty Organization) தனது நாட்டை வெளியேற்றுவதாகக் கூறியுள்ளார்.
NATOக்கு போட்டியான CSTO:
நேட்டோவுக்கு போட்டியாக ரஷ்யா, ஆர்மீனியா, கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டணியை புட்டின் நிறுவினார். இதனை ஒரு பன்னாட்டு அமைப்பாக வழிநடத்தி அதிகாரத்தை முன்வைக்க அவர் விரும்பினார்.
ஆயினும் குறிப்பிடத்தக்க இராணுவ வளங்கள் அல்லது பெரிய பொருளாதாரங்களைக் CSTO சிஷ்டோ அமைப்பு கொண்டிருக்கவில்லை.
மத்திய ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வேளையில் நேட்டோவிற்கு பதில் என்று பரவலாகக் கருதப்படும் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பில் இருந்து வெளியேறுவதாக ஒரு முக்கிய ரஷ்ய கூட்டாளி நாடான ஆர்மேனியா கூறியுள்ளமை மாஸ்கோவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ரஷ்யா பல விடயங்களில் பலமுறை ஆர்மேனியாவை புறக்கணித்ததாகவும், தற்போது மாஸ்கோ தலைமையிலான சிஷ்டோ கூட்டணியில் இருந்து தனது நாட்டை வெளியேற்றுவதாக பிரதமர் நிகோல் பஷின்யான், நாடாளுமன்றத்தில் தெரிவித்ததார்.
இந்த விலகும் நடவடிக்கையை எப்போது செய்வது என்பதை அவரது அரசாங்கம் பின்னர் முடிவு செய்யும் என்று பஷினியன் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு:
பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து இந்த பாதுகாப்பு கூட்டாளிகளிடையே பதட்டங்கள் அதிகரித்தன.
குறிப்பாக உக்ரைனில் புட்டினின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவிற்கும் ஆர்மீனியாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்தன.
ரஷ்யாவின் படையெடுப்பை ஆர்மேனியா பல சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
ஆர்மேனியாவின் சமீபத்திய அறிவிப்பு புட்டினுக்கு பெரும் அடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. “நாங்கள் வெளியேறுவோம், எப்போது வெளியேறுவது என்பதை நாங்கள் முடிவு செய்வோம், நாங்கள் திரும்பி வர மாட்டோம், வேறு வழியில்லை” என ஆர்மேனியா பிரதமர் அந்நாட்டு சட்டமியற்றுபவர்களிடம் கூறியுள்ளார்.
இதனைப்பற்றி கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “எங்கள் ஆர்மீனிய நண்பர்களுடன் தொடர்ந்து பணியாற்றும்” என்று கூறியதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. அத்துடன் மாஸ்கோ இறுதியில் வலுவான பதிலைக் கொடுக்கும், ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் துணிச்சலின் தீமைகளைக் காட்டுவதற்கு பின்விளைவுகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, என்றும் மாஸ்கோ இறுதியில் வலுவான பதிலைக் கொடுக்கும் என்று கூறினார்.
அதேவேளை ரஷ்யாவின் மீது படையெடுக்கும் திட்டத்தில், ஐரோப்பாவிற்குள் அமெரிக்க துருப்புக்களை குவிக்க நேட்டோ திட்டமிட்டு வருகிறது என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஜூன் 2023 இல் ஆர்மேனிய நாடு உக்ரைனுடனான போரில் ரஷ்யாவின் கூட்டாளி அல்ல என்றும், அது ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் சிக்கியிருப்பதாக உணர்ந்ததாகவும் ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைன படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்யாவிற்கும் மற்றய உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளன.
நேட்டோவிற்கு பதிலாகக் கருதப்படும், முன்னைய சோவியத் நாடுகளின் இராணுவக்கூட்டணி அமைப்பிலிருந்து ஆர்மேனியா அரசு கிரெம்ளின் ஆதரவில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளது.
அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதல்:
நீண்ட காலமாக அஜர்பைஜானில் இருந்து பிரிந்த பிராந்தியமான நாகோர்க்னோ-கராபாக் ஆர்மேனியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. கடந்த ஆண்டு அஜர்பைஜான் இப்பிராந்தியத்தை தாக்கியபோது ரஷ்ய அமைதி காக்கும் துருப்புக்கள் ஆர்மேனியாவுக்கு உதவிக்கு வராததால் பிரதமர் பாஷினியன் பெரும் கோபமடைந்தார்.
அஜர்பைஜான் – ஆர்மேனிய மோதலில் ஆர்மீனியாவிற்கு எதிராக குறிப்பிடப்படாத சிஷ்டோ நாடுகள் சதி செய்ததாக பாஷினியன் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் பாஷினியன் மீண்டும் இந்தப் பிரச்சினையை எழுப்பி, சிஷ்டோ நாடுகள் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர் மற்றும் அஜர்பைஜானுடன் சேர்ந்து எங்களுக்கு எதிரான போரைத் திட்டமிட்டு நடத்தினர என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய அமைதி காக்கும் படை விலகல்:
ரஷ்ய அமைதி காக்கும் படையினர் அஜர்பைஜானின் நாகோர்க்னோ-கராபாக் பகுதியில் இருந்து வெளியேறுவார்கள் என்று கிரெம்ளின் அரசை கடந்த மாதம் ஏப்ரல் 15இல் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அமைதி காக்கும் படையினர் இருந்தபோதிலும், பிரிந்து சென்ற நாகோர்னோ-கரபாக் பகுதியை அஜர்பைஜான் கடந்த செப்டம்பரில் மீண்டும் கைப்பற்றியது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, அஜர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நாகோர்னோ-கராபாக், ஆர்மேனிய சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்டது. அங்கே பெரும்பான்மையான ஆர்மீனிய மக்களைக் கொண்டிருந்தது.
எவ்வாறாயினும், 2020 ஆம் ஆண்டில், அஜர்பைஜான் படைகள் இரத்தக்களரி படிந்த ஆறு வார தாக்குதலின் பின்னர் நகோர்னோ-கராபாக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றியது.
இருதரப்புக்கும் இடையே மாஸ்கோ போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்யா 2,000 பேர் கொண்ட அமைதி காக்கும் படையை அப்பகுதியில் நிறுத்தியது. ஆயினும் கடந்த செப்டம்பர் 2023 இல், ரஷ்ய அமைதி காக்கும் படையினரால் தடுக்க முடியாத மின்னல் வேக ஒரு நாள் தாக்குதலில், நாகோர்னோ-கராபக்கை அஜர்பைஜான் இராணுவம் ஆக்கிரமித்து கையகப்படுத்தியது.
இந்த மோதலின் விளைவால் ரஷ்யாவிற்கும் ஆர்மேனியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது. இதன் பின்னரும் மாஸ்கோ அரசு அஜர்பைஜானுடன் நல் உறவைப் பேணி வருகிறது.
அஜர்பைஜான் ஆக்கிரமிப்பு :
அஜர்பைஜான் ஆக்கிரமிப்பினை தடுக்க ரஷ்யா தனது நாட்டிற்கு ஆதரவாக தலையிடவில்லை என்று ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் பலமுறை விமர்சித்தார். இதன் விளைவே மாஸ்கோ தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் (CSTO), பாதுகாப்புக் கூட்டணியில் பங்கேற்பதை ஆர்மேனியா நடைமுறையில் நிறுத்திவிட்டதாக அவர் சமீபத்தில் கூறினார்.
அமெரிக்காவுடன் நல்லுறவை பேண ஆர்மேனியா முயற்சி:
இதற்கிடையில் ஆர்மேனியாவும் அஜர்பைஜானும் பரந்த சமாதான உடன்படிக்கைக்கு தரகர் முயற்சியில் அமெரிக்கா முயற்சி செய்கின்றது.
ஆர்மேனியா அரசு அமெரிக்கா, ஐரோப்பா உட்பட மேற்கு நாடுகளுடன் நல்ல உறவை பேணவும் தற்போது முற்பட்டுள்ளது.
இவ்வருட பெப்ரவரியில் ஆர்மேனியா அதன் சிஷ்டோ அங்கத்துவத்தை முடக்கியது. ஆனால் இதுவரை அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை. ஜூன் மாதம், சிஷ்டோ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஆர்மேனியா அதன் உறுப்பினர் நிலையை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆயினும் ஆர்மேனிய வெளியுறவு மந்திரி சிஷ்டோ பொதுச் செயலாளருடன் சிறந்த உறவுகளை கொண்டிருப்பதாக மட்டுமே கூறினார்.
எது எவ்வாறாக இருப்பினும் ஆர்மேனியா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலிருந்து தனது நாட்டை வெளியேற்றும் சமீபத்திய அறிவிப்பு புட்டினுக்கு பலத்த சவாலாகவே இருக்கும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா