செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்? | டி.பி.எஸ்.ஜெயராஜ்

பிள்ளையான் கைது, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் அசாத் மௌலான வெளியிட்ட தகவல்கள்? | டி.பி.எஸ்.ஜெயராஜ்

12 minutes read

டி.பி.எஸ்.ஜெயராஜ்

உள்ளூராட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாணத்தில் புதியதொரு தேர்தல் கூட்டணி தோன்றியது. பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கழகமும் சேர்ந்து கிழக்கு தமிழர் கட்டமைப்பை அமைத்தன. ஒரு சில வாரங்களுக்குள் கேணல் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இணைந்து கொண்டதை அடுத்து புதிய கூட்டணி பலமடைந்தது.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அதன் உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களை உற்சாகத்துடன் கிழக்கில் தொடங்கியது. யாழ்ப்பாண தலைமைத்துவத்துடனான தமிழ்க்கட்சிகளின்  போதாமை மற்றும் கிழக்கில் முஸ்லிம் விஸ்தரிப்புவாதம் என்று சொல்லப்படுவதன் விளைவான பிரச்சினைகள் மீது கவனத்தை குவித்து கிழக்கு தமிழர்களின் வாக்குகளை கவரும் நம்பிக்கையை கூட்டமைப்பு கொண்டிருந்தது.

கிழக்கு தமிழர்  கூட்டமைப்பின் பிரசாரங்கள் உத்வேகம் அடைந்துகொண்டிருந்த நிலையில், பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் என்ற “மும்மூர்திகளுக்கும் ” அனர்த்தம் ஏற்பட்டது. இலஞ்ச குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன்  விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அடுத்து விடுதலை புலிகளுக்கும் இலங்கை ஆயுதப்படைகளுக்கும் இடையிலான போரின்போது மனித உரிமைமீறல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டு முரளிதரனுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்தது.

இறுதியாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பரில் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் தொடர்பிருந்ததாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் 

முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டார்.  அதற்கு பிறகு விசாரணைகளை தொடருவதற்காக அவரது தடுப்புக்காவல் 90 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. இரு தடுப்புக்காவல் உத்தரவுகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிறப்பிக்கப்பட்டன. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தற்போது பெருமளவு ஆர்ப்பாட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 2024 ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதியளித்ததன் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கு பதிலாக அதே சடடத்தின் கீழ் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்கி்ன்றமைக்காக ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஆனால், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் பிரதான எதிர்க்கட்சிகளும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எட்டியும் கூட பார்க்கவில்லை. முன்னாள் முதவமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்த போதிலும், பிள்ளையானுக்கு ஒரு நேர்மறையான படிமம் ( Image) கிடையாது.   பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக உண்மையில் அவருக்கு கெட்டபெயரே இருக்கிறது.ஆட்கள் கடத்தல் தொடங்கி கொலைகள் வரை அவருக்கு எதிரானவை என்று கூறப்படுகின்ற குற்றச்செயல்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் சம்பந்தபட்டதாக கூறப்பட்டு சில வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதிலும், பிள்ளையான் குறாறவாளியாகக் காணப்படவில்லை. பிள்ளையானுக்கு ஒரு எதிர்மறையான படிமம் இருக்கின்ற போதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அந்த கொடிய சட்டத்தை ஒரு கோட்பாட்டு அடிப்படையில் எதிர்ப்பதாக இருந்தால் பிள்ளையானின் தடுப்புக்காவலையும் எதிர்த்திருக்க வேண்டும். பதிலாக, அவர்கள் பக்கச்சார்பாகவும் தெரிந்தெடுத்து சிலரின் தடுப்புக்காவல்களை மாத்திரம் எதிர்க்கின்றார்கள் போன்று தெரிகிறது.

இத்தகைய பின்புலத்தில் இந்த கட்டுரை பிள்யைானின் கைதையும் தடுப்புக் காவலையும் பற்றி கவனம் செலுத்துகிறது.

சிவநேசதுரை சந்திரகாந்தன்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக தெரிவு செய்யப்படடதன் மூலம் வரலாறு படைத்தார். 2012 ஆம் ஆண்டுவரை அவர் முதலமைச்சராக பதவி வகித்தார். பிள்ளையான் 2020 பொதுத்தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அந்த தேர்தலில் மாவட்டத்தில் மிகவும் கூடுதல் விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழும் அதே பதவியில் தொடர்ந்து நீடித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆதரவாளர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர். ரணில்  மூன்றாவதாக வந்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் பிள்ளையானுக்கும் அவரது கட்சிக்கும் மட்டக்களப்பு மாவடடத்தில் மிகவும் குறைவான வாக்குகளே கிடைத்தன. அந்த மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி இலங்கை தமிழரசு கட்சி பெருவெற்றி பெற்றது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்திக்கும் மடக்களப்பில் ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. பிள்ளையான் உள்ளூராட்சி தேர்தல்களின் மூலமாக அரசியல் மீட்சியைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நோக்கத்தைச் சாதிக்க  கிழக்கு தமிழர்  கூட்டமைப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது பிள்ளையானின் திட்டங்கள் எல்லாமே சிதறிப்போயின.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏப்ரில் 8 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தை (சி.ஐ.டி.) சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டார். அவர் மட்டக்களப்பில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த வேளையிலேயே கைது இடம்பெற்றது. முதலில் பிள்ளையான் விசாரணைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.

பேராசிரியர் இரவீந்திரநாத் 

ஆரம்பத்தில் வெளியான ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் வைத்து  காணாமல்போன சம்பவம் தொடராபாகவே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் துணைவேந்தர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் ஈடுபாடு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் பேகச்செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை பிள்ளையானிடமிருந்து பெறமுடியும் என்று தாங்கள் நம்புவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் கூறின.

நிலைவரம் விரைவாகவே மாறியது.பிள்ளையான் 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ஊடகச் செய்திகளின் பிரகாரம் பிள்ளையான் இப்போது 2019 ஏப்ரில் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். ஜ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையது என்று கூறப்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையிலான முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறன்று நான்கு சுற்றுலா ஹோட்டல்களிலும் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தொடர்ச்சியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.260 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

கார்டினல் மல்கம் ரஞ்சித்

தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பிலான முழு விபரங்களும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் ஆறாவது வருடாந்த நினைவுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க கொழும்பு கத்தோலிக்க அதிமேற்றிராணியார் அதிவண. கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு உறுதியளித்திருக்கிறார்.

ஈஸ்டர் அனர்தத்துக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவது பற்றி கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு ஜனாதிபதி திசாநாயக்க அளித்த வாக்குறுதி,  விசாரணைகளின் கவனம் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்கு திரும்ப வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது போன்று தெரிகிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவது ஏப்ரில் 21 காலக்கெடுவை சந்திப்பதற்காக துரிதப்டுத்தப்பட்ட முயற்சியின் ஒரு அங்கம் என்று கருதப்படுகிறது.

உதய கம்மன்பில 

ஒரு வழமைக்கு மாறான திருப்பமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில் பிள்ளையானின் சட்டத்தரணியாக வந்திருக்கிறார். தடுப்புக்காவலில் உள்ள பிள்ளையானை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு அதிகாரிகள் முன்னிலையில்  30 நிமிடங்கள் சந்தித்துப் பேசுவதற்கு கம்மன்பில அனுமதிக்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகவே தன்னைக் கைதுசெய்ததாக  தனக்கு பிள்ளையான் கம்மன்பிலவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு பிறகு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் பெயர்களை வெளியிட்டு அரச சாட்சியாக மாறும்படி பிள்ளையான் இப்போது கேட்கப்படுகின்றார்.

சனல் 4 தொலைக்காட்சி 

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு இருந்ததாக கூறப்படும் தொடர்பு 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக வெளியிடப்பட்டது.  2023 செப்டெம்பர் 5 செவ்வாய்க்கிழமை பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி அதன் ” டிஸ்பாச்சஸ் ” என்ற நிகழ்ச்சியில் ” இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள்” என்ற  விவரண தொகுப்பை ஔிபரப்பியது. அதில் பிள்ளையானின் முன்னாள் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளருமான அசாத் மௌலானா என்ற முஹம்மத் மிஹிலார் முஹம்மத் ஹன்சீர் தனது முன்னாள் தலைவரைப் பற்றிய அதிர்ச்சிதரும் தகவல்களை வெளியிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மருதமுனையைச் சேர்ந்த அசாத் மௌலானா ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்று சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார். பிள்ளையானுக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான மேஜர் —  ஜெனரல் சுரேஷ் சாலேக்கும்  ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகள் இருந்ததாகவும் இருவருக்கும் குண்டுத்தாக்குதல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அசாத் மௌலானா கூறினார். ஆனால் பிள்ளையானும் சாலேயும் குற்றச்சாட்டுக்களை உடனடியாகவே மறுத்தனர். அப்படியானால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானுக்கும் சுரேஷ் சாலேக்கும் எதிரான அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுக்கள் எவை?

சனல் 4 தொலைக்காட்சியினால் ” டிஸ்பாச்சஸ் ” நிகழ்ச்சியில் ஔிபரப்பு செய்யப்பட்ட ” இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ” விவரணத் தொகுப்பு ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால்  2023 செப்டெம்பர் 21  ஆம் திகதி  வேறு ஒரு அரங்கில்  திரையிடப்பட்டது. அப்போது விவரணத் தொகுப்பின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தொம் வோக்கரும் நிறைவேற்று தயாரிப்பாளரான பென் டி பியரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். பிறகு அங்கு ஒரு கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலுக்கு முன்னதாக அசாத் மௌலானாவினால் வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை ஒன்றின் பிரதிகள் பிரசன்னமாகியிருந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. நேரடியாகக் கலந்து கொள்ளாத அசாத் மௌலானா பிறகு வீடியோ இணைப்பின் ஊடாக கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அசாத் மௌலானாவின் அறிக்கை அவரால் சனல் 4 தொலைக்காட்சி விவரணத் தொகுப்பில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவுபடுத்தலும் விரிவுபடுத்தலுமாகவே அமைந்தது. விவரணத் தொகுப்பில் வெளியிட்ட தகவல்களை  கூடுதல் விபரங்களுடன் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதன் தற்போதைய  பொருத்தப்படும் முக்கியத்துவமும் கருதி அசாத் மௌலானாவின் அறிக்கையை முழுமையாக கீழே  தருகிறோம் ;

அசாத் மௌலானாவின் அறிக்கை

” பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியினால் செப்டெம்பர் 5 ஆம் திகதி ஔிபரப்பான ” இலங்கையின் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் ”  விவரணத் தொகுப்பு இலங்கையில் கணிசமானளவுக்கு ஆர்வத்தை தோற்றுவித்திருக்கிறது.பல்வேறு கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. விவரணத் தொகுப்பு சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்ற கோராக்கைக்கு ஓரளவு ஆதரவைத் திரட்டியிருக்கின்ற அதேவேளை பெருமளவு வதத்திகளும் போலிச் செய்திகளும் வெளியிடப்பட்டன. எனது மனைவி,  பிள்ளைகளுக்கு கூட அவதூறு செய்யப்பட்டார்கள். அவர்களின் படங்கள் ஞமூக ஊடகங்களில் வெளியாகின. அதனால் பின்வரும் அறிக்கையை வெளியிடுவதற்கு நான் விரும்புகிறேன்.

” கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அரசியல் கட்சியின் தலைவரான பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனுக்காக நான் 2006  ஆம் ஆண்டு தொடக்கம்  2022 பெப்ரவரி வரை பணியாற்றினேன். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி முன்னதாக ஒரு தீவிரவாத இயக்கமாக செயற்பட்டது. நான் அந்த கட்சியின் பிரசாரச் செயலாளராகவும் பேச்சாளராகவும் இருந்தேன். நான் ஒரு போராளி அல்ல. உண்மையிலேயே நான் ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவன் அல்ல.

” எனது பதவி காரணமாக ஈஸ்டர் ஞாயிறு  தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகவும் மகிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பாகவும் முக்கியமானதும் இரகசியமானதுமான பெருமளவு தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தது.

” 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் 45 சிறுவர்களும்  40 வெளிநாட்டவர்களும்  உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன் 500  க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட்ட பின்னர் மாத்திரமே அந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் மற்றும் அவற்றை நடத்தியவர்கள் பற்றியும் தாக்குதல்களின் நோக்கங்கள் பற்றியும் என்னிடம் உறுதியான சான்றுகள் இருப்பதை நான் புரிந்துகொண்டேன். அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு வேலைகளைச் செய்ததிலோ அல்லது தாக்குதல்களை  நடத்தியதிலோ எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது.

” 2015 ஆண்டில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்வியைத் தொடர்ந்து பிள்ளையான் கைது செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். பரராஜசிங்கம் 2005 நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார் .

” பிள்ளையானின் ஒரு செயலாளர் என்ற வகையில்,  அவரை அவரின் சட்டத்தரணிகள் சகிதம்  சந்தித்து சட்ட விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு என்னை நீதிமன்றம் அனுமதித்தது. 2017 செப்டெம்பரில் சிறைச்சாலைக்கான ஒரு விஜயத்தின்போது தன்னுடன் ஒரே கூண்டில் காத்தான்குடியைச் சேர்ந்த சில  முஸ்லிம் கைதிகள் இருப்பதாக பிள்ளையான் என்னிடம் கூறினார்.  ஒரு தந்தை, அவரின் மகன் மற்றும் ஆறு பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் காத்தான்குடியில் இன்னொரு முஸ்லிம் குழு மீது தாக்குதல் நடத்தியதற்காகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படும் ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

” பிள்ளையானின் வேண்டுகோளின்பேரில் நான் சைனி மௌலவியைச் சந்தித்தேன். பிறகு பிள்ளையான் என்னிடம் இந்த கைதிகளை பிணையில் வெளியில் எடுப்பதற்காக அவர்களின் உறவினர்களுக்கு நிதியை ஏற்பாடு செய்வதற்கு இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டார். அவர்கள் 2017 அக்டாபர்  24 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.  2018 ஜனவரி பிற்பகுதியில் பிள்ளையான் சைனி மௌலவியின் குழுவுக்கும் அப்போது ஒரு பிரிகேடியராக இருந்த சுரேஷ் சாலேக்கும் இரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு என்னிடம் கேட்டார். சந்திப்புக்கான இடம் மற்றும் நேரம் தொடர்பில் சுரேஷ் சாலே எனக்கு அறிவிப்பார் என்றும் பிள்ளையான் கூறினார்.

” ஒரு சில நாட்கள் கழித்து சுரேஷ் சாலே என்னுடன் தொடர்பு கொண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதிக்கு வருமாறு சைனி மௌலவிக்கு வேண்டுகோள் விடுக்குமாறு என்னைக் கேட்டார். அடுத்த நாள் கொழுப்பில் இருந்து புத்தளத்துக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் நான் பயணம் செய்தேன். சைனி மௌலவியின் குழு குருநாகலையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தது. இந்த சந்திப்புக்கு எனது சொந்த வாகனத்தையோ அல்லது சாரதியையோ பயன்படுத்த வேண்டாம் என்று என்னிடம் கூறிய பிள்ளையான் போக்குவரத்துக்கு இராணுவப் பலனாய்வுப் பிரிவு ஒழுங்கு செய்யும் என்று கூறினார்.

” புத்தளத்துக்கு வெளியே அமைந்திருக்கும் 50 — 60 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பெரியதொரு தென்னந்தோட்டத்தில் 2018 பெப்ரவரி முற்பகுதியில் அந்த சந்திப்பு இடம்பெற்றது.சுரேஷ் சாலே சாம்பல் நிற டொயோட்டா கார் ஒன்றில் சாரதியுடன் வந்திருந்தார். அரை மணிநேரம் கழித்து சைனி மௌலவி ஆறு பேர் கொண்ட ஒரு குழுவுடன் வெள்ளை வான் ஒன்றில் வந்திருந்தார். சைனி மௌலவி தனது மூத்த சகோதரர் மௌலவி சஹரானை தங்களது குழுவின் தலைவர் என்று  அறிமுகம் செய்தார். சந்திப்பு இரு மணித்தியாலங்களுக்கும  அதிகமான நேரம் நீடித்தது. நான் அதில் கலந்துகொள்ளாமல் வெளியில் காத்திருந்தேன்.

அந்த சந்திப்புக்கு பிறகு நான் மட்டக்களப்புக்கு பயணம் செயதேன். சந்திப்பு பற்றி மறுநாள் பிள்ளையானுக்கு  விபரங்களை  தெரிவித்தேன்.  சுரேஷ் சாலேக்கு ஒரு பெரிய திட்டம் இருக்கிறது என்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடன் இருப்பதைப் போன்ற உடன்பாடொன்று  சஹரான் குழுவுடனும் அவருக்கு இருக்கிறது என்றும் பிள்ளையான் கூறினார். இந்த சந்திப்பு பற்றிய தகவல்களை இரகசியமாக வைத்திருக்குமாறும் ஏதாவது உதவியை அவர்கள் கேட்டால் செய்துகொடுக்குமாறும் அவர் என்னிடம் கூறினார். 2017 செப்டெம்பரில் சிறையில் சைனி மௌலவியை சந்தித்ததை தவிர பிறகு நான் சஹரானையும் அவரின் குழுவினரையும் சுரேஷ் சாலேயுடனான 2018  பெப்ரவரி சந்திப்பின்போது ஒரு தடவை மாத்திரம் சந்தித்தேன். அதைத் தவிர அவர்களுடன் எனக்கு எந்த தொடர்புமோ அல்லது உறவுமுறையோ இருந்ததில்லை. அவர்களின் பயங்கரவாத நோக்கங்கள் குறித்தோ அல்லது திட்டம் குறித்தோ பயங்கரவாத தாககுதல் நடைபெறும் வரை எனக்கு எதுவும் தெரியாது.

” 2019 ஏப்ரில் 19 ஈஸ்டர் ஞாயிறன்று காலை 7 மணியளவில் சுரேஷ் சாலே என்னுடன் தொடர்புகொண்டு கொழும்பில் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு உடனடியாகச் சென்று அங்கு காத்துக்கொண்டு நிற்கும் ஒரு நபரை ஏற்றிக் கொண்டு வருமாறும் அவரது தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுமாறும்  கூறினார். அந்த நேரத்தில் நான் கொழும்பில் அல்ல மட்டக்களப்பில் நிற்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.

” இந்த தொலைபேசி சம்பாஷணைக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஏககாலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும  பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன. தாக்குதல்களை அடு்த்து உடனடியாக பிள்ளையான் ஒரு சிறைக்காவலர் ஊடாக செய்தி அனுப்பி தன்னை அவசரமாகச் சந்திக்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். அவரை காலை 11  மணியளவில் நான் சந்தித்தபோது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சுரேஷ் சாலேயே என்றும் இதே போன்ற தாக்குதல்கள் நடக்கும் என்று தான் நினைத்திருந்ததாகவும் என்னிடம் கூறினார்.

” சைனி மௌலவியுடன் தொலைபேசியில்  தொடர்புகொண்டு நிலைவரத்தை அறியுமாறு பிள்ளையான் என்னைக் கேடடார். நான் முயற்சித்தேன். பதில் இல்லை. பிள்ளையானின் வேண்டுகோளின் பேரில் நான் ஏற்பாடு செய்த சந்திப்பில் பங்கேற்றவர்களே  உண்மையில் ஈஸ்டர் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் என்பதை அன்றைய தினம் மாலை ஊடகச் செய்திகள் மூலமாக மாத்திரமே நான் அறிந்து கொண்டேன்.

நான் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுரேஷ் சாலே விரும்பிய அந்த பேர்வழி ஜமீல் என்பவரே என்பதையும் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை  நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அவர் பிறகு இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றி அந்த ஹோட்டலை  விட்டு வெளியேறி தெஹிவளையில் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் குண்டை வெடிக்க வைத்தவர் என்பதையும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் ஊடாக நான் அறிந்து கொண்டேன்.

” பிள்ளையானும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினரும்   கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தனர். கோட்டாபய ஜனாதிபதியாக வந்த பிறகு சுரேஷ் சாலே இலங்கை திரும்பினார். அவருக்கு மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டு அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அந்த பதவியில் அவர் தொடருகிறார்.

” ஆனால், உறுதியளித்ததன் பிரகாரம் பிள்ளையானை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்யவில்லை.  பிள்ளையானுக்கு எதிராக தீர்க்கமான சான்றுகள் இருந்ததால் அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபர் மறுப்புத் தெரிவித்ததே அதற்கு காரணமாகும். 2020 ஆகஸ்ட் 5 பாராளுமன்ற தேர்தலின்போது சிறையிலேயே தொடர்ந்து இருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தலுக்கு பிறகு பிள்ளையான் என்னனயும் அவரது சகோதரரரையும் சுரேஷ் சாலேயைச் சென்று சந்திக்குமாறும் கோட்டாபய ராஜபக்சவும் தற்போதைய அரசாங்கமும் எவ்வாறு அதிகாரத்துக்கு வந்தார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் என்று அவரிடம் கூறுமாறும் கேட்டுக் கொண்டார். தன்னை விடுதலை செய்யவில்லையானால் அதற்காக பாரியதொரு  விலையை செலுத்த வேண்டியிருக்கும் என்று சுரேஷ் சாலேயை எசாசரிக்குமாறும் எம்மிடம் அவர் கூறினார்.

” சில நாட்கள் கழித்து பிள்ளையானுக்கு எதிரான வழக்கை  சட்டமா அதிபர் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் வைத்து வாபஸ் பெற்றார்.  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதர்களை ஏற்பாடு செய்தவர்களைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை தவிரவும், 2005 — 2015  காலப்பகுதியில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் பற்றிய விரிவான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

” இந்த கொலைகளில் பெருமளவானவை இலங்கை இராணுவத்தின் கீழ் இயங்கிய திரிப்போலி பிளட்டூன் என்ற இரகசிய  கொலைப் படைப் பிரிவினாலேயே  செய்யப்பட்டன. அந்த பிரிவு தொடக்கத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்த தலைமையிலும் பிறகு கேணல் ஷம்மி கருணாரத்ன தலைமையிலும் இயங்கியது. அது  அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் பின்னர் இராணுவ அதிகாரிகளின் பிரதானியாகவும்  இருந்த மேஜர் ஜெனரல் அமால் கருணாசேனவின் நேரடி கட்டளையின் கீழ் இயங்கியது. இந்த பிளட்டூன் நேரடியாக கோட்டாபயவுக்கே பதில் கூறும் கடப்பாட்டைக் கொண்டிருந்தது. அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரிடமிருந்து மாத்திரமே உத்தரவுகளை அது பெற்றது.

”  இந்த பிளட்டூனும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் போர்காலத்திலும் போரின் முடிவுக்கு பின்னரும் பத்திரிகையாளர்கள் கொலைகள் மற்றும் காணாமல்போதல் உட்பட பெருமளவு அரசியல் கொலைகளுக்கு பொறுப்பாக இருந்தது.  குறிப்பாக அவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், பத்திரிகையாளர்களான லசந்த விக்கிரமதுங்க, தராக்கி சிவராம், ஐ. நடேசன் ஆகியோரின் கொலைகளுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சிவசுப்பிரமணியம் இரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் காணாமல் போனதற்கும் பொறுப்பாக இருந்தன.

” இராணுவப் புலனாய்வு பிரிவினரும்  தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் கூட்டாகச் செய்த பல்வேறு மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் இருக்கின்றன. அவர்கள் செய்து கொண்டிருந்தவை  பற்றி எனக்கு இணக்கம் இல்லை என்ற போதிலும்,  எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தின் காரணமாக அவர்களிடம் இருந்து என்னை விலகியிருக்க என்னால் முடியாமல் இருந்தது. இலங்கை அதிகாரிகள் என்னை கடத்தவோ அல்லது சிறையிலடைக்கவோ அல்லது ஏன் கொலைசெய்யவோ கூடும் என்ற பயம் இன்று வரை எனக்கு இருக்கிறது.

” சனல் 4  தொலைக்காட்சி விவரணத் தொகுப்பை ஔிபரப்பிய பிறகு உடனடியாக பொலிசார் எனது தாயாரையும் சகோதரியையும் சென்று பார்த்து விசாரணை செய்தார்கள். அது எனது பயத்தை மேலும் அதிகரித்தது. எனது தொலைபேசி இலக்கத்தையும் விலாசத்தையும் கண்டறியும் ஒரு முயற்சியாக எனது சகோதரியின் மகனை இனந்தெரியாத இரு நபர்கள் விசாரித்தார்கள்.

” ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரணை செய்யும் பெறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவும் அந்த அனர்த்தத்தின் சூத்திரதார்கள் மற்றும் அதை செய்தவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

” குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் 2022 பெப்ரவரி 18  ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவில் குறிப்பிடப்பட்டதைப் போன்று, அவர் தலைமையிலான விசாரணைக்குழு  ( இராணுவத்தினருக்கும் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ) முக்கியமான  சான்றுகளை கண்டறிந்தது. ஆனால், அந்த குழு விசாரணைகளை தொடருவதை இராணவம் தடுத்தது.

” நான் இந்த விபரங்களை எல்லாம் தெரிந்திருக்கின்ற  காரணத்தினால், இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுச் சேவையினால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறேன்.  எனது உயிரைப் பாதுகாப்பதற்காக அரசியல் தஞ்சம் கோருவதற்காக நான் ஐரோப்பாவுக்கு தப்பியோடி வந்தேன்.

சுயாதீனமான சர்வதேச விசாரணை 

”  இலங்கையில் இடம்பெற்ற  பல பயங்கரவாத தாக்குதல்கள், அரசியல் கொலைகள், ஆட்கடத்தல்கள்  திட்டமிடப்பட்டதை நேரில் கண்ட  ஒரு சாட்சி என்ற வகையில் இந்த குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் முன்வருகிறேன். ஆனால், உண்மையை வெளிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு  அக்கறை இருக்கிறது என்று நான் நம்பவில்லை  . அதனால் நான் சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் முன்னிலையில் மாத்திரம் சாட்சியமளிக்க முன்வருவேன்.”

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More