2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறு மீள ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைந்து வைத்திய சேவைகளை வழங்கி கொண்டு இருந்த போது மேலும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. 2008.09.16ந் திகதிக்கு 2 மாதங்களுக்கு முன்னர் அனைத்து சர்வதேச நிறுவனங்களும் வன்னி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என அறிவித்தல் வந்தது. இவ் அறிவிப்பு வெளியானதும் மக்கள் மத்தியில் திடீரென அச்சம் ஏற்பட்டது. போரின் பாதிப்பு தங்களை தாக்கப்போகுது என்பதை உணர்ந்தனர். 2008 நடுப்பகுதி வரை பல்வேறு பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் கிளிநொச்சியை மையமாக கொண்ட ஓர் சுற்று வட்டதுக்குள் மிக செறிவாக குடியேறி இருந்தனர். இவ் அறிவிப்பு வெளியானதும் தெருக்கள் சந்திகளில் ஆங்காங்கே கூடிய மக்கள் இது சம்மந்தமாக மற்றவர்களுக்கு குறைகளை கூறிக்கொண்டிருந்தனர். இவ் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மக்கள் கிளிநொச்சி நகரை விட்டு வெளியேறி தர்மபுரம், விஸ்வமடு பிரதேசங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.
ஏற்கனவே இடம்பெயந்தவர்கள் பரந்தன் வீதியூடாக தங்களுக்கு பாதுகாப்பு என நினைத்த ஓர் இடத்துக்கு போய்க்கொண்டிருந்தார்கள். இவ் அறிவிப்பு வெளி வந்த சில நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி சுகாதார சேவை பணிமனை தமது கடமைகளை முடித்து வெளியேறிக்கொண்டிருந்தனர். நடு நிசியில் கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் செல் வீழ்ந்து வெடித்த சத்தம் கேட்டது. நித்திரை கலைந்தது ஒரு சில மணி நேரங்களில் இன்னுமோர் செல் வீழ்ந்து வெடித்த சத்தம் அமைதியான அந்த இரவில் பலருக்கு மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. அடுத்தநாள் விடிந்தது இவ்விரண்டு செல்களும் கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதியில் விழ்ந்தது வெடித்தது இருந்தது. பொது மக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வலுவான செய்தியின் பின்னர் பலர் இடம்பெயந்த வண்ணம் இருந்தனர்.
கிளிநொச்சி நகரை அண்டிய பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தங்களது காரியாலயங்களை மூடுவதற்கு தீர்மானித்தனர். இதன் பொருட்டு தங்களது பொருட்கள் சிலவற்றை வவுனியா நகருக்கு எடுத்து சென்றனர். மேலும் சில பொருட்களை உள்ளூர் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் படிப்படியாக வழங்க தொடங்கினர். கிளிநொச்சி நகரின் இடப்பெயர்வால் தர்மபுரம், கண்டாவளை, விஸ்வமடு, கல்லாறு போன்ற பகுதிளுக்கு சுகாதார சேவை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச
நிறுவனங்கள் தங்களிடம் இருக்கின்ற பொருட்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தனர். கிளிநொச்சி பிரதேசத்தில் solidar நிறுவனம் இடம்பெயந்தவர்களுக்கு குடிசை அமைப்பதற்கு கட்டட பொருட்களை அனுப்பியிருந்தது. இவை அனைத்தும் இடம்பெயந்து செல்லும் மக்களுக்கு வழங்கப்பட்டது. பொது மக்களை விட சர்வதேச நிறுவனங்கள் அனைத்தும் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். படிப்படியாக நகர வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்களை விசுவமடு பகுதியை நோக்கி எடுத்துச் சென்றனர்.
சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் A 09 வீதியில் கரடிப்போக்குக்கு அருகாமையில் இருந்த UNHCR அலுவலகத்துக்கு முன்பாக 2008.09.12ந் திகதி மக்கள் முற்றுகை இட்டனர். அங்கிருந்தவர்களை தொடர்ந்து இருக்கும் படி கூறினார். இந் நிலையில் சர்வதேச நிறுவனங்கள் வெளியேறுவதற்காக வாகனங்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்னால் அணிவகுத்திருந்தன. இதனை அறிந்த மக்கள் கூட்டம் அத் தொடரணியை A 09 வீதிக்கு குறுக்காக வழி மறிப்பு செய்தனர். ஒரு நாள் முழுவதும் மறித்து வைக்கப்பட்ட தொடரணி 2008.09.13ந் திகதி வவுனியா நோக்கி புறப்பட்டது. இதனால் வன்னி மக்கள் சோர்வடைந்தனர்.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/