தமிழர்களின் கல்வி கலை கலாசாரம் மொழி வாழ்வியல் என்று அனைத்திலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியும் நல்லதொரு எடுகோள். ‘பிரபாகரன் வேறு மக்கள் வேறு’ என்று தமிழர்களின் உடற்கூறுகளிலிருந்து அவரை எவரும் அவ்வளவு இலகுவில் அந்நியப்படுத்தி பிரித்து வைத்துவிடவே முடியாது என்பதற்கு குறித்த திருமண நிகழ்ச்சி தகுந்த சான்று.
தமிழர்களின் திருமணத்தில் அணிவிக்கப்படும் ஒரு முக்கிய ஆபரணம் தாலி. தாலி என்பது சமுக பண்பாடு, சமய சம்பிரதாயங்களின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது. திருமண ஜாதகப் பொருத்தத்தில் தாலிப்பொருத்தம் மிகவும் முக்கியமாக கவனிக்கப்படுகின்றது. இந்த தாலி கழுத்தில் இருக்கும் வரை அஸ்டமாசித்திகளும் எந்த இடையூறுமின்றி, கட்டியவனும் – கட்டியவளும் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இப்படித்தான் தாலி இருக்க வேண்டும் என்று ஒரு விதி கிடையாது. பிள்ளையார் தாலி எனும்போது ஆரம்பத்தில் தும்பிக்கை வடிவம் தான் பொறித்தார்கள். பின்னர் ஆசாரியாரின் கற்பனைத்திறன் மற்றும் வேலைத்திறனுக்கு ஏற்ப வடிவங்களும், அழகுபடுத்தல்களும் அதிகரித்தன. தாலி வடிவங்களை வைத்துக்கொண்டு அவற்றை பிள்ளையார் தாலி (தும்பிக்கை வடிவம்), சிவன் தாலி (லிங்க வடிவம்), அம்மன் தாலி (அம்மன் வடிவம்), தேர்த்தாலி (தேர் வடிவம்), புறாத்தாலி (விரிந்த புறாவின் வடிவம்), இராமர் தாலி (சங்கு சக்கரம் வடிவம்) பொட்டுத்தாலி எனப்பல இன்றைக்கு புழக்கத்தில் உள்ளன.
பொதுவாக கிறிஸ்தவர்கள் புறாத்தாலி அணிவார்கள். சிலர் வேதாகமத்தில் புறா வடிவம் வைப்பார்கள். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு வித்தியாசமான வடிவங்களில் தாலிகள் செய்யப்படுகின்றன.
மங்களகரமான தாலியுடன் (மாங்கல்யத்தின் இருபுறமும்) இலட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து மணப்பெண்ணுக்கு அணிவிப்பதே தமிழர் மரபாக இருந்து வந்துள்ளது. தமிழ் உயிர், உயிர்மெய், ஆயுத எழுத்துகளுடன் திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை தாலியுடன் இணைத்து அணிவதையும் தமிழ் இலக்கிய குடும்ப பாரம்பரியத்தை கொண்டுள்ளவர்கள் கடைப்பிடித்து வருகின்றமை இன்னும் கூடுதல் சிறப்பு.
தமிழர் பண்பாட்டோடு பின்னிப்பிணைந்துள்ள ஆடிமாதத்தில் தாலியின் அருமை பெருமை மகிமை கருதி ஆடிப்பெருக்கன்று ‘தாலி பெருக்குதல்’ எனும் வைபவம் விமரிசையாக நிகழ்த்துவதும் வழக்கமாக உண்டு.
ஆனால் இந்த சமுக சமய சம்பிரதாய மரபை உடைத்து சமீபத்தில் புலம்பெயர் தேசம் ஒன்றில் நடைபெற்றுள்ள திருமண நிகழ்ச்சியில், தாலியுடன் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவமும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் இலச்சினையும் (புலிச்சின்னம்) பொறிக்கப்பட்ட நாணயங்களை கோர்த்து மணப்பெண்ணுக்கு அணிவித்துள்ளமை, உலகத்தமிழர்களின் அடையாளமாக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வரலாற்றில் என்றும் தொடருவார் – நிலைத்திருப்பார் என்பதையே பெருத்த கர்வத்தோடு பெருமைப்படுத்துகின்றது.
‘கச்சைகளும் கந்தைகளும்
உருவப்பட்டு
உறுத்திக்கொண்டிருந்த
நம் அம்மணத்தை மறைக்க,
சோழக்கொடியில்
ஆடை தந்தவன் அல்லவா
பிரபாகரப்பெருந்தகை.’
அ.ஈழம் சேகுவேரா | இலங்கை முல்லைத்தீவிலிருந்து சுயாதீன இளம் ஊடகவியலாளர்