“..…அவை ஏதும் நினைப்பினம் எண்டு நீ சொல்ல வேண்டியதை சொல்லாமல் விடாத. அது அவை நினைக்கிறது இல்ல. நீ மற்றவையை போல நினைக்கிறாய். அது அவையின்ர தவறில்லை உன்ர அபிப்பிராயம்…” எங்களுக்கான பயிற்சி பட்டறைகளின் பொழுது ஆனந்தராஜா Sir சொல்லும் அறிவுரை. இதை எங்களுக்கு பயிற்சிக்காக சொல்லியிக்கிறார் என்று விட்டுவிட முடியாது. தேவையற்ற பயத்தை போக்குவது, துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் உருவாக்குவது, நேர்மறையான சிந்தனையை தூண்டுவது போன்ற திறன்களை வளர்ப்பதான அறிவுரை அது.
இந்த அறிவுரையை பயிற்சிக்காக எங்களுக்கு மட்டும்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.
வளாக நாட்களில் நாங்கள் எங்களது stone bench இல் இருந்து அரட்டை அடிக்கும் பொழுதுகளில் ஒரு Charly மோட்டார் பைக்கில் பீடத்தின் அலுவலகத்திற்கு வந்து போகும் கண்ணாடி போட்ட வயதான மனிதர் பற்றி எந்த அனுமானிப்பும் இருக்கவில்லை. ஒருநாள் எங்களது விரிவுரையாளர் எம்மை (மாணவர் ஒன்றிய உறுப்பினர்களை) அழைத்து ‘நீங்கள் ஏன் சில கருத்தரங்குளை நடத்தக் கூடாது?’ எனக் கேட்டார். எம்மிடம் இல்லை என்ற பதில் இல்லை. ஆனால் என்ன வகையான கருத்தரங்கு என கேட்பதில் ஆர்வம் இருந்தது. அந்தக் கேள்விகளுக்கான பதில்களை வைத்துக் கொண்டுதான் எமது விரிவுரையார் திருமதி வேணி விஜயராஜா எங்களை அணுகி இருந்தார். இவர் மூலமாகத்தான் திரு ஆனந்தராஜா அவர்களிடம் பயிற்சி பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டுகிறது.
உங்களுக்கான கல்வி அலகு சாரா ஆனால் உங்கள் ஆளுமைகளை விருத்தி செய்யக்கூடிய – தலைமைத்துவம், ஒழுங்கமைப்பு, திட்டமிடல், அளிக்கை செய்தல், உளவிருத்தி, மனஉளைச்சளைப் போக்கல் போன்ற பயிற்சிக் கருத்தரங்குகளை நீங்கள் உங்களது மாணவ மன்றத்தினூடாக ஒழுங்கு செய்யலாம் என்ற ஆலோசையை வழங்கினார். நீண்ட யோசனைகளை ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்த வேலைக்கு நாங்கள் தயாராகி இருந்தோம்.
மாதமிருமுறை கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு அதற்கான திட்டமிடல்களும் செய்யப்பட்டு கருத்தரங்குகள் நடக்க தொடங்கின.
முகாமை அல்லது கட்டி மேய்த்தல், செயற்பாடு, தலைமைத்துவம், சீரான ஒழுங்கமைப்பு, திட்டமிடுதல் என வந்து கதைத்து விட்டு செல்வது மட்டுமன்றி துறை சார் வல்லுநர்களை நீங்களே அழைத்து வந்து கருத்தரங்குகளை செய்யுங்கள் என தட்டிக் கொடுத்ததுடன் மட்டும் நின்று விடாமல் அதற்கான திட்டங்களை வகுத்து அதனை நீங்களே செய்யுங்கள் என சொல்லிவிட்டு கடைசி வரிசையில் அமர்ந்திருந்து அவதானிப்பார்.
நாங்கள் வாழ்ந்த வாழ்வும், கல்வி கற்ற முறைமையும் ஒரு தற்காலிக இடப்பெயர்வு அல்லது தற்காலிக ஏதிலிகள் அல்லது தற்காலிக அநாதர்கள் போலானது. நாங்கள் அனுப்பும் அஞ்சல்கள் மாதங்கள் கழித்தே எமது பெற்றாருக்கு போய் சேரும். அங்கு உறவுகள் யாரும் இறந்தால் எட்டு பத்து நாட்களின் பின்னே தான் எமக்கு தகவல்கள் வந்து சேரும். இதற்குள் எங்களுக்கு பரீட்சைகள், செய்முறை விளக்கங்கள், விடுமுறைகள், பகிஷ்கரிப்புகளும் வந்து போகும். குண்டு வீச்சு நடந்தது எனச் செய்தி வரும். ஆனால் யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது உடனடியாக தெரியவராது. இடப்பெயர்வு நடந்தது எனத் தெரியவரும் ஆனால் குடும்பங்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது தெரியவர மாதமாகும். இவ்வளவுக்கும் நாங்கள் வாழ்ந்தது நூறு மைல்களுக்குள் உட்பட்ட பிரதேசம்.
இந்த இன்னல் தரும் நேரங்களில்தான் ஆனந்தராஜா Sir ன் ஆற்றுப்படுத்தல் எங்களுக்கு கிடைத்தது. இது தனி ஒருவருக்கான பிரச்சினை அல்ல. அன்று அல்லல் பட்டு வாழ்ந்த ஒரு சமூகத்தின் இன்னலிது என உணர்ந்து நீங்கள் இங்கே கதைக்க அல்லது சொல்லத் தயங்கினால் என்னுடன் வந்து கதையுங்கள். உங்கள் கதைகளை கேட்க நான் தயாராக இருக்கிறேன் என எம்மை ஆற்றுப்படுத்தியவர்.
இன்றைய நாட்களில் விளம்பரங்களில் வரும் ‘இலவச ஆலோசனை’ என்பதற்கு பின்னால் பணம் என்பது தொங்கி வரும் என்பது அறிந்தவொன்றே. தாயகத்தில் முகாமைத்துவ, தலைமைத்துவ ஆலோசனைகளையும் உளவள ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வந்தவர் திரு பி.எ.சீ. ஆனந்தராஜா அவர்கள்.
வவுனியா வளாகத்துக்கும் திரு பி.எ.சீ. ஆனந்தராஜா அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வளாக கணக்கியலும் நிதியியலும் மாணவர் சங்கம் நடாத்திய முகாமைத்துவ பயிற்சி பட்டறையினை(Series of Seminars) மாதமிருமுறை வந்து பயிற்சிகளை வழிநடத்தியவர். பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையின் முக்கிய வழிநடத்துனர்களில் ஒருவராக இருந்து பயிற்சி வழங்கிய தந்தை. ‘How to be an Effective Manager ‘ என்ற தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் தலைமை பயிற்றுநராக இருந்து பயிற்சிகளை வழங்கியவர்.
தவிரவும் எங்களது கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு வந்து ஆக்கபூர்வமான தனது கருத்துக்களை பதிவு செய்பவர். தனது இயலும் காலம் வரை பாடசாலைகள், இடைத்தங்கல் முகாம்கள், வைத்தியசாலைகள், பொது அமைப்புகள், உயர் கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் என இந்த சமூகத்துக்கு தன்னாலான ஆற்றுப்படுத்தலினை செய்து வந்தவர்.
கல்வி கற்று முடிந்து பணியாற்றிக்க கொண்டிருந்தகாலம். வவுனியாவில் இயங்கி வந்த இடைத்தங்கல் முகாம்களில் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான தகவல் சேகரித்தல் பணி. பணிக்கு சேருவதற்கு முன்னர் ஆலோசனை பெற இவரிடம் சென்றேன். ‘தம்பி நீ எண்ணத்தையெண்டாலும் சேர். ஆனா நீ சேர்த்து குடுக்கிற அறிக்கையிலே எங்கட சமுதாயத்தினரை எதிர்காலம் இருக்குது. இண்டைக்கு வறுமையிலும், முகாம்களில் தங்கி வாழும் விரக்தியிலும் அவர்கள் தரும் தகவல்கள் உனக்கு உதவும்…. ஆனா அது எங்க எங்க எங்களை நிற்க வைக்கும் எண்டதையும் நினைவில வைச்சுக்கொண்டு உணர பணியை செய்….’ எண்டு இடித்துரைத்த பெருமகன்.
தனது இயலும் காலம் வரை பாடசாலைகள், இடைத்தங்கல் முகாம்கள், வைத்தியசாலைகள், பொது அமைப்புகள் என இந்த சமூகத்துக்கு தன்னாலான ஆற்றுப்படுத்தலினை செய்து வந்தவர்.
அதெல்லாம் முடிஞ்சு கனடா வந்துட்டன். மேடை நாடகத்தின் பால் ஈடுபாடு கொண்டதனால் பல நண்பர்களை இங்கு தேடிக் கொண்டேன். அப்படி நாடகம் பழகி மேடையேற்றம் செய்யும் பொழுது சில கருத்து பரிமாற்றங்கள் வரும்.
‘சேகர், நாங்கள் நாடகம் போடுறம். சிலருக்கு பிடிக்கும் பிடிக்காம போகும். எல்லாருக்கும் பிடிக்குமெண்டு நாங்கள் நாடகம் செய்யேலாது. இப்பிடிச் சொல்லவேணும் எண்டு படுகுது நாங்கள் சொல்லுறம். பிடிக்காதவை தங்கட கருத்தை வைக்கட்டும்’…. இப்படி பல கருத்து பறிமாற்றம் எனக்கும் நாடகர் துஷி ஞானப்பிரகாசம் அவர்களுக்கும் இருக்கும்.
முன்னர் நான் குறிப்பிட்டது அந்த அறிவுரையை எங்களுக்கு மட்டும் ஆனந்தராஜா Sir சொன்னவர் என்று. ஆனால் அப்படியல்ல தனது மாணவர்கள் அனைவரிடமும் அந்த அறிவுரையை சொல்லியுள்ளார்.
இப்படியான ஒரு பெருமகனின் ஆலோசையையும் அறிவுரையும் கேட்டு பயனுற நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
அந்த வகையில் அன்னாரது நினைவுகளை வவுனியா வளாக சமூகமும் சுமந்து நிற்கிறது.
சேகர் தம்பிராஜா
வவுனியா வளாக சமூகம் சார்பாக