பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர் தனது பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வேண்டும். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் பதவியை தொடர வேண்டும் என்றாலும் பெரும்பான்மைப் பலத்தை நிருபிக்க வேண்டும். இரண்டில் எது நடக்க வேண்டும் என்றாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் தேவைபடலாம்.
இலங்கையில் மொத்தமாக உள்ள 225 பாராளுமன்ற ஆசனங்களில் ஐக்கிய தேசியக்கட்சி 105 இடங்களையும், UPFA 96 இடங்களையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும், ஏனைய கட்சிகள் 8 இடங்களையும் தற்போதைய நிலவரப்படி கொண்டுள்ளன. இந்நிலையில், இப்போது துருப்புச்சீட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள நிலவரப்படி, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால், அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையையும் செயல்படுத்த முன்வந்தால் மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ? சொந்த விருப்பின் அடிப்படையில் முடிவெடுக்காது, தமிழ் மக்களின் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து, நிபந்தனைகளின் பெயரின் ஆதரவு வழங்குமானால், தமிழ் மக்களுக்கான தீர்வு சுலபமாக கிடைக்க வாய்ப்புண்டு. அதுமட்டுமன்றி சமீப காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ் மக்கள் மத்தியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையும் வலுவிழந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் மக்கள் மத்தியில் நம்பிக்கை வர வேண்டுமெனில் கிடைத்த வாய்ப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக பயன்படுத்த வேண்டும். இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகவே அறியமுடிகின்றது.
மக்கள் மனதில் தொடரும் கேள்வி…….
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெறும் சொந்த விருப்பங்களின் பெயரில் முடிவெடுக்குமா? அல்லது தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்குமா?
வணக்கம் இலண்டனுக்காக தேன்மொழி