ஏப்ரல் 28ஆம் திகதி, ஈழத்தில் ஒரு ஊடகப் பெருங்குரல் நசிக்கப்பட்ட நாள். ஈழத் தமிழ் சூழலின் ஊடக அறிவாளுமை ஒன்றை நாம் இழந்த துயர நாள். இலங்கையின் தலை நகர் கொழும்பில் மிகுந்த பாதுகாப்பான இடத்தில், இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில், இலங்கை பாராளுமன்றத்தின் அருகே, ஈழத்தின் தனிப் பெரும் ஊடக ஆளுமை தராகி என அழைக்கப்படும் டி. சிவராம் கொலை செய்யப்பட்ட நாள். தராகி கொல்லப்பட்டு, ஏப்ரல் 28ஆம் நாளுடன் 15 ஆண்டுகள் ஆகின்றன.
இலங்கையில் தராகி சிவராம் கொல்லப்பட்டபோதுதான் ஊடகவியலாளர்கள் படுகொலை தொடங்கவில்லை. அது 1985ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக ஈழத் தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கிப் போராடிய அதே காலத்தில் எழுத்தை ஆயுதமாகக் கொண்டும் போராட்டம் தொடங்கியது. ஒரு புறத்தே, ஈழ விடுதலைப் போராளிகளை ஒடுக்குகின்ற இராணுவச் செயற்பாடுகளை மேற்கொண்ட சிங்கள அரசு, மறுபுறத்தே எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களை படுகொலை செய்யும் கருத்து சுதந்திரப்படுகொலையையும் நிகழ்த்திற்று.
இன ஒடுக்குமுறையின், இன அழிப்பின் இன்னொரு வடிவமாகதான் ஊடகவியலாளர்கள் படுகொலை அல்லது கருத்துச் சுதந்திரப் படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. இன உரிமைகள் மறுக்கப்பட்ட சூழலில்தான் கருத்துரிமைகளும் மறுக்கப்பட்டன. அதற்காகவே இனத்தின் குரல்களை அடக்கி ஒடுக்கி அழிக்கின்ற, உலகின் மிக மோசமான மனித உரிமை செயற்பாடுகளில் இலங்கை அரசு ஈடுபட்டது. இலங்கையில் இதுவரையில் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதில் 35பேர் தமிழ் ஊடவியலாளர்கள். ஏனைய ஊடவியலாளர்களில் அநேகர் தமிழ் மக்களுக்காகவும் தமிழீழத்திற்காகவும் குரல் கொடுத்தவர்கள்.
ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை தினம், அக்டோபர் 19ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது. எனினும் சிவராம் படுகொலை செய்யப்பட்ட இந்த நாளில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கான நீதியை பெருத்த குரலில் வலியுறுத்துவதும் மிகவும் பொருத்தப்படானதுவே. 1959ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 11ஆம் நாள், ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பு மண்ணில் பிறந்தவர் தர்மரத்தினம் சிவராம். புனித மிக்கேல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். எனினும் இரண்டு ஆண்டுகள் மாத்திரம் பட்டப்படிப்பை மேற்கொண்ட நிலையில் அப்போதைய இனக்கலவர சூழலால் தன் பட்டப் படிப்பை கைவிட்டார்.
பல்லைக்கழகப் படிப்பைக் கைவிட்ட சிவராம், அப்போதைய சூழலில் தமிழர்களின் விடுதலையை வலியுறுத்திய ஆயுதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய முன்னாள் போராளியும் ஆவார். பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். 1990களின் இறுதிப்பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வலுவை வழங்கும் என சிவராம் தனது எழுத்துக்களில் நம்பிக்கையுடன் எழுதினார்.
தராகி என்ற பெயரில் 1989ஆம் ஆண்டில் தி ஐலண்ட் என்ற பத்திரிகையில் முதல் கட்டுரையை எழுதினார். ஈழ – இலங்கையின் அரசியலையும் விடுதலைப் புலிகளின் போரியலையும் எழுதிய தராகியின் எழுத்துக்கள் அனைத்துலக மட்டத்தில் கவனத்தை ஈர்த்தது. தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த ஆகச் சிறந்த குரலாக சிவராம் கருதப்பட்டார்.
இதனால் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களாலும் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்குதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாளர்கள், மற்றும் அரசசார்பு துணை இராணுவக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மிகவும் நெருக்கடியான சூழலில் அதேநேரம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ ரீதியான சாதனைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் தென்னிலங்கை அறிவுஜீவிகள் மாத்திரமின்றி சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துரைக்கும் வகையில் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆளுமையையும் அதன் தடம்புரளாத எழுச்சிப் போக்கையும் உலக சமூகம் உணர்வதற்கு தராகியின் எழுத்துக்கள் துணை நின்றன.
சிவராமின் இழப்பு இலங்கை ஊடகத்துறைக்கும் தமிழீழ ஊடகத்துறைக்கும் மாபெரும் பேரிழப்பு ஆகும். இன்றுவரையில் ஈடுசெய்ய முடியவில்லை. சிவராமின் இடம் இன்னும் வெற்றிடமாகவே இருக்கின்றது. ஈழ விடுதலைக்கு ஆதரவாக எழுத வந்த சில ஊடகவியலாளர்கள் புலிகளை விஞ்சிய புத்தி ஜீவிகளாகவும் சிங்கள அரசுக்கு துணைபோனவர்களாகவும் மாறிவிட சிவராம் உணர்வும் அறிவும் புதிய பார்வையும் யதார்த்தமும் கொண்ட ஈழத்தின் தலைசிறந்த மனித மேன்மை கொண்ட ஊடக ஆளுமையாக தன்னை நிலைப்படுத்தினார்.
தராகி சிவராம் அவர்களின் அதியுன்னத பணிக்காக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், மாமனிதர் என்ற தமிழீழத்தின் உயரிய விருதை வழங்கினர். சிவராமின் எழுத்துக்கள் மாத்திரமல்ல, அவரது வாழ்க்கையும் ஈழத் தமிழ் சமூகத்திற்கும் ஊடக கல்விக்கும் பெரும் பாடமாக அமைந்துவிட்டது. இனத்திற்காகவும் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் ஒரு ஊடவியலாளன் எப்படி எழுத வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்பது சிவராம் உணர்த்திச் சென்ற பாடம்.
இவரது வாழ்க்கைக் கதை ‘சிவராம் புகட்டும் அரசியல் – ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும்’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகத்தை சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரி (Mark P. Whittaker) எழுதியுள்ளார். இலண்டனில் உள்ள Pluto Press பதிப்பகம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றது.
ஈழத் தமிழ் மக்களுக்காக தன் கோடுகளால் குரல் கொடுத்த பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார். தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஈழத் தமிழர்களின் தோழமையான லசந்த விக்கிரமதுங்க சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டார். ஊடகவியலாளர் படுகொலை என்பது மனித உரிமைக்கு எதிரான மிகப் பெரிய கோரச் செயல். அது மனித உயிர்களுக்கும் மனிதக் குரலுக்கும் எதிரான பயங்கரம். இந்த அராஜகங்களை எல்லாம் புரிந்தவர்களே இன்று வெள்ளை உடையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இப் படுகொலைகளுக்கான நீதி என்பது தமிழர்களுக்கு மாத்திரம் தேவையானதல்ல. சிங்களவர்களுக்கும்தான். அத்துடன் அது உலகின் கருத்துசுதந்திரற்கும் ஊடக எதிர்காலத்திற்கும்கூட அவசியமானது.
தீபச்செல்வன்