செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்

தமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்

3 minutes read

How Jewish Should the Jewish State Be? The Question Shadows an Israeli Vote  - The New York Times

நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது.

உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது.

எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார்.

கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான்.

நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள்.

தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள்.

பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது.

புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள்.

ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது.

ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள்.

அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள்.

உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார்.

மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது.

கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது.

பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார்.

வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த
ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார்.

“டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய்” ஏரியல் கேட்கிறார்.

முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார்.

“சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார்.

“எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”.

ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More