ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாள்முதல் பல்வேறுபட்ட வெறுப்புணர்வை சிங்கள கடும்போக்கு சக்திகள் நேரடியாகவும் இலங்கை அரசு மறைமுகமாகவும் வெளிப்படுத்திவருகின்றன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ள குற்றச்சாட்டை முற்றிலும் தவறானது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா மனிதஉரமை ஆணையத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் கருத்து வெளியிடுகையில்,
“நவநீதம்பிள்ளை விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்து என்ன என்பதை, அவர் தனது அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளார்.
வழக்கமாக மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்லும்போது, செய்வது போன்றே, இலங்கையிலும் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் மரியாதை செலுத்த நவநீதம்பிள்ளை விரும்பியிருந்தார்.
30 ஆண்டுகாலப் போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும், அஞ்சலி செலுத்துவதற்குப் பொருத்தமான இடமாக, போர் முடிவுக்கு வந்த அந்தப் பிரதேசத்தை நாம் தெரிவு செய்திருந்தோம். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்புவது குறித்து அறிந்து கொண்ட இலங்கை அரசாங்கம் அந்த விடயத்தை வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தது.
அவர்களின் கண்ணோட்டத்தை கவனமாக ஆராய்ந்த நாம், அது தவறாக எடுத்துக் கொள்ளப்படும் என்று உணர்ந்து, அந்தத் திட்டத்தை செயற்படுத்துவதை கைவிட்டோம்.
ஆனால், நவநீதம்பிள்ளை புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முயன்றதாக, இலங்கை அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டு அவருக்கு எதிரான ஆகப் பிந்திய தவறான பழியாகும்.
நவநீதம்பிள்ளை தனது இறுதி அறிக்கையில் முல்லைத்தீவு குறித்து குறிப்பிட்ட போது, மூன்று பத்தாண்டுகளாக நடந்த போரில், கொல்லப்பட்ட நாடு முழுவதிலும் உள்ள எல்லா இலங்கையர்களுக்காகவும் மரியாதை செலுத்துவதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.